இன்றைய இறைமொழி. வியாழன், 30 மே 2024. அகப் பார்வை

இன்றைய இறைமொழி
வியாழன், 30 மே 2024
பொதுக்காலம் 8-ஆம் வாரம் – வியாழன்
1 பேதுரு 2:2-5, 9-12. மாற்கு 10:46-52

அகப் பார்வை

தன் வாழ்வின் அட்சயப் பாத்திரத்தைக் கண்டுகொண்ட பர்த்திமேயு தான் ஏந்தி நின்ற பிச்சைப் பாத்திரத்தைத் தூக்கி எறிகிறார்.

இயேசு மூன்றாம் முறை பாடுகளை முன்னுரைக்கும் நிகழ்வைத் தொடர்ந்து மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்வது, ‘பார்வையற்ற பர்த்திமேயு நலம் பெறும் நிகழ்வு.’ பார்வையற்ற பர்த்திமேயு இயேசுவை தாவீதின் மகன் எனக் கண்டுகொண்டார், ஆனால், பார்வைபெற்றிருந்த சீடர்களோ இயேசுவைக் கண்டுகொள்ள இயலவில்லை என்ற நிலையில் இந்நிகழ்வை உவமை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

(1) எது வேண்டும் என அறிந்தவர்

தனக்கு எது வேண்டும் என அறிந்தவராகவும், அதில் உறுதியாக இருப்பவராகவும் இருக்கிறார் பர்த்திமேயு. தன்னைக் கடந்து செல்வது இயேசு என்று கேள்விப்பட்டவுடன், அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். தன்னைக் கடந்து செல்கிற கடவுள் தன்மேல் அளப்பரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என விழைகிறார். உடனடியாகக் கத்தி இயேசுவின் கவனத்தை ஈர்க்கிறார். கடவுளுடைய கவனத்தை ஈர்ப்பதும் ஒரு கலையே. ‘இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்!’ என்பதே இவருடைய நம்பிக்கை அறிக்கையாக இருக்கிறது.

(2) கூட்டத்தின் அதட்டலை பொருட்படுத்தவில்லை

நற்செய்தி நூல்களில் நாம் காணும் ‘கூட்டம்’ பெரும்பாலும் இயேசுவுக்கு அருகில் மற்றவர்கள் செல்லத் தடையாகவே இருக்கிறது. இங்கும் கூட்டத்தில் இருந்தவர்கள் பர்த்திமேயுவை அதட்டுகிறார்கள். ஆனால், அவர்களுடைய அதட்டலைப் பொருட்படுத்தாமல் இன்னும் அதிகமாகக் கத்துகிறார். ‘தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்!’ என மீண்டும் தன் நம்பிக்கையை அறிக்கையிடுகிறார். கூட்டத்தினர் இப்படியும் பேசுவார்கள், அப்படியும் பேசுவார்கள் என்பதை அறிந்தவராக இருந்தார். அவர் எண்ணியதுபோலவே, கூட்டம் இப்போது அவர்மேல் இரக்கம் காட்டுகிறது: ‘துணிவுடன் வாரும். இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்!’

(3) மேலுடையை எறிந்துவிட்டு துள்ளி எழுகிறார்

மாற்கு நற்செய்தியாளர் சிறந்த கதைசொல்லி. நிகழ்வின் நுணுக்கங்களைப் பதிவு செய்வதில் சிறந்தவர். பர்த்திமேயு தன் மேலுடையைத் தூக்கி எறிகிறார். இயேசுவின் அழைப்பே போதும், தனக்கு பார்வை கிடைத்துவிடும் என்பது அவருடைய நம்பிக்கையாக இருந்தது. தன் பழைய மேலுடையை, பழைய வாழ்க்கை தனக்கு இனி தேவையில்லை என முடிவெடுப்பதோடு, துள்ளிக் குதித்து இயேசுவை நோக்கிப் புறப்படுகிறார்.

(4) ‘ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்!’

‘உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?’ என இயேசு கேட்டவுடன், உடனடியாகப் பதிலுரைக்கிறார் பர்த்திமேயு: ‘ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்!’ இயேசுவைத் தாவீதின் மகன் என ஏற்றுக்கொண்டவர், இப்போது அவரைத் தன் போதகராக ஏற்றுக்கொள்கிறார். ‘ரபூனி’ என்னும் சொல்லைக் கொண்டே உயிர்த்த இயேசுவை அழைக்கிறார் மகதலா மரியா (காண். யோவா 20:16). நெருக்கமான உறவை வெளிப்படுத்தக்கூடிய அழைப்பாக இது உள்ளது.

(5) அவர் மீண்டும் பார்வை பெற்றார்!

பர்த்திமேயு ஏற்கெனவே பார்வை உடையவராக இருந்து, ஏதோ நோய் அல்லது உடல்நலக் குறைவால் பார்வையை இழந்திருக்கலாம். அல்லது, அகப் பார்வை தெளிவாக இருந்து, புறப் பார்வை இல்லாமல் இருந்திருக்கலாம். இழந்ததை மீண்டும் கொடுப்பவர் நம் கடவுள்.

(6) இயேசுவைப் பின்பற்றி வழிநடந்தார்

‘நீர் போகலாம்!’ என்று இயேசு சொன்னவுடன், வந்த வழி செல்வதற்குப் பதிலாக இயேசுவின் பின்னால் செல்கிறார். இயேசுவைப் பின்பற்ற விரும்பி பாதி வழி வந்து மீதி வழி செல்ல இயலாத இளைஞருக்கு மாற்றாக, இயேசுவைத் தொடர்ந்து பின்பற்றுகிறார் பர்த்திமேயு.

இறுதியாக,

நம்மைக் கடந்துசெல்லும் கடவுள் நம்மேல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நாமும் கத்துவோம். நம் குரல் கேட்கிற அவர் நமக்காகத் தம் பயணத்தை நிறுத்துகிறார். தம் கவனத்தை நம்மேல் திருப்புகிறார். எனக்கு எது வேண்டும் என்பதை நான் அறியவும், அறிவதை அடைவேன் என்று மனவுறுதி ஏற்கவும், ஏற்ற மனவுறுதிக்கு ஏற்ப துணிவுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட நம்மைத் தூண்டுகிறார் பர்த்திமேயு.

வழியில் இரந்துகொண்டிருந்தவர் இயேசு நிகழ்த்திய வல்ல செயலால் தன் பாதையை மாற்றுகிறார். இயேசுவின் சீடராக மாறுகிறார். தன் வாழ்வின் அட்சயப் பாத்திரத்தைக் கண்டுகொண்ட பர்த்திமேயு தான் ஏந்தி நின்ற பிச்சைப் பாத்திரத்தைத் தூக்கி எறிகிறார். தன்னை ஒளியால் நிறைந்த கடவுளைக் காணுமுன் தன் உடலை நிறைத்த மேலுடையை எறிகிறார்.

ஆன்மிக வாழ்க்கையையும் தாண்டி, சமூக பொருளாதார தனிநபர் வாழ்க்கைக்கும் இவர் தூண்டுதலாக இருக்கிறார். தயக்கம், பயம், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்னும் எண்ணம், இதுவே போதும் என்னும் குறுகிய சிந்தனை, துணிவின்மை ஆகியவற்றால் நாம் தேக்கநிலையிலேயே இருந்துகிடுகிறோம். நகர்ந்துகொண்டே இருப்பதே வாழ்க்கை எனக் கற்றுத் தருகிறார் பர்த்திமேயு.

இன்றைய முதல் வாசகத்தில், ‘உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பதே உங்கள் பணி’ என்று தன் குழுமத்துக்கு எழுதுகிறார் பேதுரு. பார்வையற்ற நிலை என்னும் இருளிலிருந்து ஒளிக்கு அழைக்கப்பெற்ற பர்த்திமேயு இயேசுவின் செயல்களை அறிவிப்பதற்காக அவர் பின்னே செல்கிறார்.

நிற்க.

மனிதரின் காயமும் இறைவனின் கருணையும் சந்திக்கும் இடத்தில் வல்ல செயல் நடந்தேறுகிறது. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 111).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment