இன்றைய இறைமொழி. ஞாயிறு, 26 மே 2024. வெளிப்பாடு – வாழ்வு – வழிநடத்துதல்

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 26 மே 2024
மூவொரு கடவுள் பெருவிழா
இணைச்சட்டம் 4:32-34, 39-40. உரோமையர் 8:14-17. மத்தேயு 28:16-20

வெளிப்பாடு – வாழ்வு – வழிநடத்துதல்

இன்று நாம் நம் கடவுளை மூவொரு இறைவன் என்று கொண்டாடி மகிழ்கின்றோம். இந்த மறைபொருள் பற்றி புனித அகுஸ்தினார் சிந்தித்துக் கொண்டே கடற்கறையில் நடந்துகொண்டிருந்தபோது, அங்கே தோன்றிய குழந்தை, ‘கடல் தண்ணீரை ஒரு சிறிய குழிக்குள் நிரப்ப முயல்வது எவ்வளவு மதியீனம்!’ என்று கேட்டுவிட்டு மறைந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், புனித அகுஸ்தினாரைத் தவிர வேறு யாரும் இந்த மறைபொருள் பற்றி அதிகம் பேசவில்லை. பேசிய மற்றவர்கள் எல்லாம் அகுஸ்தினார் பேசியதைத்தான் வேறு வார்த்தைகளில் சொன்னார்கள்.

அகுஸ்தினார், ‘அன்பு’ என்ற உணர்வை இங்கே ஓர் உருவகமாகக் கையாண்டு தமதிருத்துவத்தின் (மூவொரு கடவுளின்) பொருளைப் புரிந்துகொள்ள விழைகின்றார். அன்பில் மூன்று பகுதிகள் உள்ளன: (அ) அன்பு செய்பவர், (ஆ) அன்பு செய்யப்படுபவர், (இ) இருவருக்கிடையே பரிமாறப்படும் அன்பு. அன்பு என்ற ஒன்றே இந்த மூன்று பகுதிகளையும் இணைத்தாலும், மூன்றும் தனித்தனியாக இருக்கின்றன என்பதை நாம் மறுப்பதில்லை.

மூவொரு கடவுள் பற்றிய புரிதலில் இதுவே முதன்மையானது. அதாவது, இவர்கள் மூவரும் ஒன்று என்றாலும், இவர்கள் வேறு வேறான நபர்கள்.

அகுஸ்தினார் இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வு பற்றி ஓரிடத்தில் மறையுரை வைக்க வேண்டிய தேவை இருந்தது. இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வில், ‘மகன் வேறு,’ ‘தந்தை வேறு,’ ‘தூய ஆவியார் வேறு’ என்று நம்மால் எளிதில் பிரித்துப் பார்க்க முடியும். மகன் தண்ணீருக்குள் இருக்கிறார். தந்தை வானத்தில் இருக்கிறார். தூய ஆவியார் இரண்டுக்கும் நடுவில் ஆகாயத்தில் இருக்கிறார். மூன்று பேரும் தனித்தனியாக அவர்கள் பிரிந்துதானே இருக்கிறார்கள். அப்படி இருக்க, அவர்கள் எப்படி ஒரே கடவுள் என்றும், பிரிக்க இயலாதவர்கள் என்றும் சொல்ல முடியும்? என்று அவருடைய மூளை கேள்வி கேட்கிறது. (அகுஸ்தினாரின் கேள்வி கேட்கும் திறன் நம்மை வியப்புக்கு உள்ளாக்குகிறது). இந்த இடத்தில் அவர் இன்னொரு உருவகத்தைக் கண்டுபிடிக்கின்றார்: நினைவு, புரிதல், விருப்பம்.

ஒரு கதையை நாம் நினைவில்கொள்ள வேண்டுமெனில், அந்தக் கதையைப் புரிந்துகொள்ளவும், நினைவில் வைத்திருக்க விருப்பம் கொள்ளவும் வேண்டும். ஒரு கதையைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அவற்றின் வார்த்தைகளை நினைவில்கொள்ளவும், அவற்றை எண்ணிப்பார்க்க விருப்பம் கொள்ளவும் வேண்டும். ஒரு கதையை நாம் விரும்ப வேண்டுமெனில், அதை நினைவில் கொள்ளவும், புரிந்துகொள்ளவும் வேண்டும். மூன்றையும் செய்யக் கூடியது மூளைதான். ஆனால், மூன்றையும் வேறு வேறு செயல்களாகச் செய்கிறது. ஆக, அவற்றைப் பிரிக்க முடிவது போலத் தெரிந்தாலும், பிரிக்க இயலாதவையாக அவை இருக்கின்றன.

அப்படியே, கடவுளும், தந்தை-மகன்-தூய ஆவியாரும் என்கிறார் அகுஸ்தினார்.

மூவொரு கடவுள் மறைபொருளை இன்று நாம் எப்படிப் புரிந்துகொள்வது? மூவொரு கடவுள் தங்களிலேயே உறவு நிலையில் இருக்கின்றார்கள் என்றும், அவர்களுக்கென்று ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருக்கிறது என்றும் வரையறுக்கிறது நம் கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி (காண். எண்கள் 267, 255).

மூவொரு கடவுளைப் பற்றிய புரிதலை இயேசுவே நமக்குத் தருகிறார்:

(அ) தந்தை வெளிப்படுத்துகிறார்: ‘விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்’ (மத் 16:17)

(ஆ) மகன் விடுதலை தருகிறார்: ‘மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலேயே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள்’ (யோவா 8:36)

(இ) தூய ஆவியார் வழிநடத்துகிறார்: ‘தூய ஆவியார் வரும்போது முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்’ (யோவா 16:13)

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு மிக நெருக்கமாக வந்ததையும், அவர்களுக்கு அரும்பெரும் செயல்கள் நடத்தி அவர்களை மீட்டதையும் எடுத்துரைக்கிறார் மோசே. தூய ஆவியார் நம் உள்ளத்தின் குரலாக அமர்ந்துகொண்டு கடவுளை, ‘அப்பா, தந்தையே’ என அழைக்கிறார். தம் திருத்தூதர்களைப் பணிக்கு அனுப்புகிற இயேசு, ‘தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால்’ என கடவுளுக்குப் பெயரிடுகிறார்.

இன்றைய நாள் நமக்குத் தரும் செய்தி என்ன?

தன் சகோதரன் ஏசாவிடமிருந்து தப்பி ஓடுகிற யாக்கோபு, பெத்தேலில் கனவு கண்டபோது, ‘உண்மையாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார். நானோ இதை அறியாதிருந்தேன்’ (காண். தொநூ 29:16) என்றார். பின்னர் ஏசாவுடன் ஒப்புரவாகிற நிகழ்வில், ‘உமது முகத்தைக் காண்பது கடவுளின் முகத்தைக் காண்பதுபோல இருக்கிறது’ (காண். தொநூ 33:10) என்கிறார். ஒரு பக்கம் கடவுளின் இருத்தலை நாம் அறியாமல் இருக்கிறோம். இன்னொரு பக்கம் அனைவரிலும் அனைத்திலும் கடவுளைக் காண்கிறோம்.

கடவுள் என்பவர் நமக்கு ஓர் அனுபவமாக இருக்கிறார்.

இரண்டாவதாக, ‘எப்படி மூவொரு கடவுள்?’ எனக் கேட்பதை விடுத்து, ‘ஏன் மூவொரு கடவுள்?’ என்று நாம் கேள்வியை மாற்றிக் கேட்க வேண்டும். கடவுள் பற்றிய மறையுண்மை பற்றிய புரிதல்களில் எப்படி என்னும் கேள்வியை விட, ஏன் என்ற கேள்விக்கு மட்டுமே விடை உண்டு.

மூவொரு இறைவன் உறவின் இறைவனாக இருக்கிறார். அவருடைய சாயலில் படைக்கப்பட்டுள்ள நாம் உறவுக்குப் படைக்கப்பட்டுள்ளோம்.

மூன்றாவதாக, இந்த உறவு நம் குழுமத்திலும் மலர்கிறது. அன்பு, ஒன்றிப்பு, மாண்பு என்ற நிலையில் ஒருவர் மற்றவரோடு உறவாடுகிற குழுமம் மூவொரு இறைவனைப் பிரதிபலிக்கிறது.

இந்த நாள் ‘மறைபொருள்’ ஏனெனில், இந்த மறைபொருளில் நாமும் பங்கேற்கிறோம்.

நிற்க.

இன்றைய நாளை, ‘அகில உலக குழந்தைகள் நாள்’ எனக் கொண்டாட அழைக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். ‘நீங்கள் மதிப்புக்குரியவர்கள்’ (காண். எசா 43:4) எனக் குழந்தைகளை நோக்கிக் கூறி, அவர்கள் மதிப்புக்குரியவர்கள் என்பதை நமக்கும் நினைவூட்;டுகிறார்.

மூவொரு கடவுள் இயேசுவில் குழந்தையாக மனுவுரு எடுத்து குழந்தைப் பருவத்தை ஆசிர்வதித்தார். குழந்தைகள் என்றும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

பதிலுரைப்பாடலின் ஆசிரியர் (திபா 33) நாம் அவரையே பற்றிக்கொள்வோம்: ‘ஆண்டவர் நம் உயிரைச் சாவினின்று காக்கின்றார். அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். நாம் ஆண்டவரையே நம்பியிருக்கின்றோம். அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார் … உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எம்மீது இருப்பதாக!’

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment