இன்றைய இறைமொழி. வியாழன், 9 மே 2024. துயரம் மகிழ்ச்சியாக மாறும்!

இன்றைய இறைமொழி
வியாழன், 9 மே 2024
பாஸ்கா காலம் 6-ஆம் வாரம் – வியாழன்
திப 18:1-8. யோவா 16:16-20

துயரம் மகிழ்ச்சியாக மாறும்!

இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா நெருங்கி வருகிற வேளையில், இந்த நாள்களில் நாம் வாசிக்கிற நற்செய்தி வாசகங்கள் இயேசுவின் பிரிவு பற்றிப் பேசுகின்றன. ‘இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்’ என மொழிகிற இயேசு, ‘நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள், அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள். உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்’ என்கிறார்.

இயேசுவின் இறுதி இராவுணவின் பின்புலத்தில் இச்சொற்களை வாசித்தால், ‘அழுதல், புலம்புதல், துயரம் அடைதல்’ ஆகியவற்றை இயேசுவின் இறப்பால் வரும் விளைவுகள் என்றும், ‘துயரம் மகிழ்ச்சியாக மாறும்’ என்பதை இயேசுவின் உயிர்ப்பு கொண்டுவருகிற மகிழ்ச்சியைக் குறிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

உயிர்ப்புக்குப் பின் உள்ள நிகழ்வின் பின்புலத்தில் வாசித்தால், இயேசுவின் விண்ணேற்றம் அவரை நம்மிடமிருந்து பிரித்தாலும், அவர் அருள்கிற தூய ஆவியார் நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறார் என்னும் பொருளில் எடுத்துக்கொள்ளலாம்.

‘துயரம் மகிழ்ச்சியாக மாறும்’ என்பது வெறும் வாக்குறுதி அல்ல. மாறாக, இறைவனின் உடனிருப்பால் அது நிறைவேறுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில், கொரிந்து நகரில் பவுல் ஆற்றுகிற பணியைப் பற்றி நாம் வாசிக்கிறோம். பவுல் கூடாரத் தொழில் செய்கிறார். ஓய்வுநாள்களில் நற்செய்தியை அறிவிக்கிறார். தன்னோடு மக்களைத் தம் பணியில் இணைத்துக்கொள்கிறார். இவ்வாறாக, அவர் உழைப்பை மதிப்பவராகவும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நாமும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று கற்பிப்பவராகவும், உடனுழைப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிப்பவராகவும் நம்முன் நிற்கிறார்.

நிற்க.

துயரம் மகிழ்ச்சியாக மாறும் என்ற காத்திருத்தலே எதிர்நோக்கு. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 93)

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment