இன்றைய இறைமொழி
புதன், 24 ஏப்ரல் 2024
பாஸ்கா காலம் 4-ஆம் வாரம் – புதன்
திப 12:24 – 13:5. யோவா 12:44-50
ஒதுக்கி வைக்கப்படுதல்
‘ஒதுக்கி வைக்கப்படுதல்’ என்னும் சொல்லாடலை இரண்டு நிலைகளில் புரிந்துகொள்ளலாம்: எதிர்மறையாக, தேவையற்ற ஒன்று, அல்லது விரும்பப்படாத ஒன்று ஒதுக்கி வைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உணவு உண்ணும்போது கீழே தவறி விழுகிற சிறு பகுதி ஒதுக்கி வைக்கப்படுகிறது. நம் உண்கிற வெண்பொங்கலில் திடீரென எழும்பி நிற்கும் மிளகு ஒதுக்கி வைக்கப்படுகிறது. நேர்முகமாக, மதிப்புக்குரிய ஒன்று ஒதுக்கி வைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பல இஸ்ரயேல் ஆண்களிலிருந்து சவுலை ஒதுக்கி வைக்கிற கடவுள் அவரை இஸ்ரயேலின் முதல் அரசராகத் திருப்பொழிவு செய்கிறார். லேவியக் குருக்கள் அனைவரிடமிருந்தும் ஒதுக்கி வைக்கப்படுகிற ஆரோன் தலைமைக்குருவாக மாறுகிறார். முதன்மையான தருணம் அல்லது கொண்டாட்;டத்திற்கென நாம் ஆடைகளை, காலணிகளை ஒதுக்கி வைக்கிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில், அந்தியோக்கியத் திருச்சபையில் நடக்கிற ஓர் ஆன்மிக நிகழ்வை வாசிக்கிறோம். தொடக்கக் கிறிஸ்தவர்களும் அவர்களுடைய பணியாளர்களும் எப்போதும் தூய ஆவியாராலேயே வழிநடத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு புதிய செயலை, பயணத்தைத் தொடங்குமுன்னும் தூய ஆவியாரிடம் வேண்டுகிறார்கள். அப்படி அவர்கள் வேண்டும்போது, ‘பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்’ என்று கூறுகிறார் தூய ஆவியார். கூடியிருந்தவர்கள் தங்கள் கைகளை பர்னபா மற்றும் சவுலின்மேல் வைத்துத் திருப்பணிக்கு அனுப்புகிறார்கள்.
இந்த நாள்களில் கூட்டியக்கத் திருஅவை பற்றி நாம் அதிகமாகப் பேசுகிறோம். இப்படிப்பட்ட ஒரு திருஅவையின் கூறுகளை நாம் இங்கே பார்க்கிறோம்: கூட்டியக்கத் திருஅவை தூய ஆவியாரால் வழிநடத்தப்படுகிறது, எந்நேரமும் அவருடைய திருவுளத்தையும் உடனிருப்பையும் வழிகாட்டுதலையும் நாடுகிறது, பணிக்கு எப்போதும் தயாராக இருக்கிறது, ஒருவர் ஒருவருக்கு ஆசி வழங்கி ஊக்கம் தருகிறது.
பர்னபா-சவுலின் வாழ்க்கைப் பாதையையும், வாழ்வின் நோக்கத்தையும் நிர்ணயிப்பவர் தூய ஆவியாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களுடைய நோக்கம் வெளிப்படுத்தப்படுகிறது.
நாம் எதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளோம்? என்னும் கேள்வியை கேட்கத் தொடங்கும்போது நம் வாழ்வின் நோக்கம் பற்றிய தேடல் தொடங்குகிறது. சில நேரங்களில் வாழ்வின் நோக்கம் நமக்குத் தெளிவாக இல்லை. வாழ்வின் இறுதி எல்லை நமக்குத் தெளிவாக இல்லை என்றாலும், ஓரளவு திசை தெளிவாக இருந்தாலே போதுமானது.
நம் நோக்கத்தை நாம் எப்படிக் கண்டறிவது? தூய ஆவியாரிடமே நாம் கேட்போம். ஒவ்வொரு நிகழ்விலும் தூய ஆவியாரின் உடனிருப்பைக் கேட்டுக்கொள்வது நலம்.
நற்செய்தி வாசகத்தில், யூதர்களோடு உரையாடுகிற இயேசு, ‘என்னைக் காண்பவர் என்னை அனுப்பியவரையே காண்கிறார்’ எனத் தொடங்கி, தம்மை நம்புகிறவர் பெறுகிற வாழ்வையும், நம்பாதவர் பெறுகிற தண்டனைத் தீர்ப்பையும் முன்மொழிகிறார்.
‘என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்’ என்கிறார் இயேசு. இயேசுவின் சமகாலத்து ரபிக்களின் போதனையில், திருச்சட்டமும், எருசலேம் கோவிலும் ஒளி என்று கருதப்பட்டன. அவற்றுக்கு மாறாக, இயேசு தம்மையே ஒளியாக முன்மொழிகிறார். மத்தேயு நற்செய்தியில் வாசிக்கும் மலைப்பொழிவில் தம் சீடர்களிடம், ‘நீங்கள் உலகுக்கு ஒளியாக இருக்கிறீர்கள்’ என மொழிகிறார்.
தந்தையால் அனுப்பப்பட்ட நிலையில் இயேசு ஒதுக்கி வைக்கப்பட்டவராக (உயர்ந்தவராக) இருக்கிறார். அவரை நம்புகிற நமக்கு அதே நிலையை அவர் அருள்கிறார் – ஏனெனில், நமக்கு வாழ்வு தருகிறார். அவரிடம் நம்பிக்கை கொள்பவர் ஒளியைப் பெறுகிறார்.
இயேசுவின் ஒளியில் நம் வாழ்வின் நோக்கத்தை அறிந்துகொள்வோம். தூய ஆவியாரின் துணையைத் தொடர்ந்து நாடுவோம். அவரே நாம் எதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளோம் என்பதை நமக்கு வெளிப்படுத்தி, நாம் அதை மட்டுமே நோக்கி வழிநடக்க நமக்குத் துணையாக இருக்கிறார்.
நிற்க.
‘நான் உங்களிடம் வேண்டுகிறேன் – ஒருபோதும் எதிர்நோக்கை இழந்து விடாதீர்கள். ஐயத்திற்கு இடம் கொடுத்து சோர்ந்து போக வேண்டாம். எதிர்நோக்கை விடாது பற்றிக்கொள்ளுங்கள்,’ என்கிறார் திருத்தந்தை புனித 2-ஆம் யோவான் பவுல். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 80)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment