இன்றைய இறைமொழி. திங்கள், 22 ஏப்ரல் 2024. வாழ்வின் வாயில்

இன்றைய இறைமொழி
திங்கள், 22 ஏப்ரல் 2024
பாஸ்கா காலம் 4-ஆம் வாரம் – திங்கள்
திப 11:1-18. யோவா 10:1-10

வாழ்வின் வாயில்

‘ஆடுகளுக்கு வாயில் நானே!’ என்னும் இயேசுவின் ‘நானே’ வாக்கியத்தை மையமாகக் கொண்டிருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். திருடருக்கும் ஆடுகளின் ஆயருக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை முதலில் இயேசு முன்மொழிகிறார்: (அ) திருடர் மந்தையின் சுவர்களில் ஏறிக் குதிப்பர், ஆயரோ வாயில் வழியாக நுழைவார். (ஆ) ஆயர் ஆடுகளைப் பெயர் சொல்லி அழைப்பார். திருடர்களுக்கு ஆடுகளின் பெயர்கள் தெரியாது. அவர்களைப் பொருத்தவரையில் அவை வெறும் ஆடுகள். (இ) ஆயரின் குரல் மந்தையை நெறிப்படுத்தும், திருடரின் அரவம் மந்தையை அச்சத்துக்கு உள்ளாக்கும். (ஈ) திருடரின் வருகை ஆடுகளுக்கு அழிவை உண்டாக்கும், ஆயரின் வருகையோடு ஆடுகளுக்கு வளமும் நலமும் வாழ்வும் தரும்.

‘ஆடுகள்-திருடர்-ஆயர்-வாயில்’ என அனைத்துச் சொற்களையும் நாம் உருவகப்பொருளிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இவை அனைத்தையும் உவமையாகப் பேசினார் என எழுதுகிறார் நற்செய்தியாளர். ‘ஆடுகள்’ அல்லது ‘மந்தை’ என்பது திருஅவையை, அனைத்து மக்களை, யூதர்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ‘திருடர்’ என்பவர் மந்தையின் எதிரி. ‘ஆயர்’ என்பவர் ‘இயேசு.’ இயேசுவின் சமகாலத்தில் இரண்டு வகையான மந்தை வாயில்கள் இருந்தன. முதல் வகையில், உயரமான சுவர்கள் அல்லது வேலிகள், கதவுகள் அமைக்கப்பட்டு, கதவுகளுக்கு வெளியே காவலர் ஒருவர் நின்றுகொண்டிருப்பார். இந்த வகை வாயில் பற்றியே 10:1-6-இல் வாசிக்கிறோம். இரண்டாம் வகையில், கற்கள் அடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஆடுகளின் உறைவிடத்தில் கதவுகள் இருக்காது. மாறாக, ஆடுகள் உள்ளே சென்று வெளியே வருவதற்கு ஏற்றாற்போல சிறிய திறப்பு ஒன்று இருக்கும். அந்தத் திறப்பின் குறுக்காக நிற்கிற அல்லது படுத்துக்கொள்கிற ஆயர் ஆடுகளை உள்ளே அனுப்பி, விலங்குகளை வெளியே தக்க வைப்பார்.

வாயில் அல்லது கதவு என்பதை மூன்று நிலைகளில் புரிந்துகொள்ளலாம்: (அ) வாயில் என்பது உள்ளே நுழையவும் வெளியே செல்லவும் ஏற்படுத்தப்பட்டுள்ள திறப்பு. வீட்டின் வாயில் வழியே நாம் உள்ளே நுழைகிறோம் வெளியே செல்கிறோம். நம் இயக்கத்தை நெறிப்படுத்துகிறது வாயில். இயேசுவின் வழியாகவே நாம் இந்த உலகத்துக்கு வந்தோம். அவர் வழியாகவே இந்த உலகை விட்டு நாம் செல்கிறோம். பாவத்தின் காரணமாக நம் முதற்பெற்றோருக்கு அடைக்கப்பட்ட வாயில் இயேசு வழியாக நமக்குத் திறப்படுகிறது. வாயில் ஓர் இணைப்புக்கோடு. வெளி உலகத்தையும் நம் இல்லத்தையும் அது இணைக்கிறது. (ஆ) வாயில் பாதுகாப்பை உருவாக்குகிறது. வீட்டின் வாயில் அடைக்கப்பட்டால் நாம் உள்ளே பாதுகாப்பை உணர்கிறோம். இயேசுவின் உடனிருத்தல் நமக்கு பாதுகாப்பை வழங்குகிறது. (இ) வாயில் வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது. வீட்டு வாயில் வழியாக வெளியேறும் நாம் புதிய வாய்ப்புகளுக்கும், புதிய வாழ்க்கைக்கும் நம்மையே கையளிக்கிறோம். கல்லறை வாயில் திறக்கப்பட்டு இயேசு வெளியே வந்தபோது இறப்பைக் கடந்த வாழ்க்கைக்குள் அவர் நுழைவதோடு நம்மையும் அழைத்துச் செல்கிறார்.

மறைநூல் (தோரா), எருசலேம் கோவில், தொழுகைக்கூடம் என்னும் வாயில்கள் தொடக்கக் கிறிஸ்தவர்களுக்கு மூடப்பட்டபோது, இயேசுவே வாயிலாக நிற்கிறார்.

முதல் வாசகத்தில், பேதுரு வழியாக புறவினத்தார் ஆண்டவரின் மீட்பைக் கண்டடைகிறார்கள். மீட்பின் வாயில் புறவினத்தாருக்கு கொர்னேலியு நிகழ்வில் திறக்கப்படுகிறது. ‘கடவுளைத் தடுக்க நான் யார்?’ எனக் கேட்கிறார் பேதுரு. தோட்டத்தில் வேலை செய்கிற விவசாயி போல நின்ற பேதுரு, தன் கையில் உள்ள மண்வெட்டியால் வாய்க்கால்களில் ஓடும் தண்ணீரைக் கட்டுப்படுத்தி, நெறிப்படுத்தி, பாய்ச்சலாம் என்று நினைத்தபோது, ஆண்டவராகிய கடவுள் வானத்திலிருந்து ஒட்டுமொத்தமாக நிலம் முழுவதிலும் மழைபொழியச் செய்கிறார். மண்வெட்டியுடன் நிற்கிற பேதுரு அண்ணாந்து பார்க்கிறார். மண்வெட்டியைக் கீழே போட்டுவிட்டு கடவுளிடம் சரணாகதி அடைகிறார். இயேசுவைத் தன் வாயிலாக ஏற்றுக்கொள்கிறார். தானும் அதில் நுழைவதோடு புறவினத்தாரையும் அங்கே அழைத்துச் செல்கிறார்.

இயேசுவை வாயிலாக ஏற்றுக்கொண்டுள்ள நான் அவர் வழியாக நுழைந்து அவர் தருகிற வாழ்வை அனுபவிக்க நாம் எதிர்கொள்கிற தடைகளைக் கண்டறிந்து அவற்றை அகற்றுவது நலம்.

நிற்க.

‘நம் திறன்களாலும் திட்டங்களாலும் விளைவது அல்ல எதிர்நோக்கு. கிறிஸ்துவைச் சந்தித்து அவரோடு உறவாடுவதில் பிறப்பதே எதிர்நோக்கு’ – திருத்தந்தை பிரான்சிஸ். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 78)

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment