இன்றைய இறைமொழி
ஞாயிறு, 21 ஏப்ரல் 2024
பாஸ்கா காலம் 4-ஆம் ஞாயிறு
திப 4:8-12. 1 யோவா 3:1-2. யோவா 10:11-18
நல்ல ஆயனாக!
பாஸ்கா காலம் 4-ஆம் ஞாயிறு ‘நல்லாயன் ஞாயிறு‘ என அழைக்கப்படுகிறது. ‘ஆயன்’ என்பது இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளை உருவகிப்பதற்குப் பயன்படுத்திய மிக அழகான சொல். ‘என் ஆயன் ஆண்டவர். எனக்கென்ன குறைவு’ என்னும் தாவீது அரசரின் சொற்களில் ஆண்டவராகிய கடவுள் தன் ஆயனாக இருக்கும்போது தன்னில் குறைவுபடுவது எதுவும் இல்லை என்னும் உணர்வு ஒளிந்திருக்கிறது. ‘நானே நல்ல ஆயன்’ என்று தம்மையே முன்மொழிகிறார் இயேசு (‘நானே’ வாக்கியம்). இக்கூற்று இயேசுவை நல்லாயனாக முன்வைப்பதுடன் கேட்பவர்களும் குரல் கேட்கும் ஆடுகளாக மாற வேண்டும் என்னும் அழைப்பை விடுக்கிறது.
‘ஆயன்-ஆடுகள்’ என்னும் உருவகம் இன்றைய கூட்டியக்கத் திருஅவைக்குப் பொருந்துமா என்னும் ஐயம் நம்மில் எழுகிறது. தலைவரை ஆயன் என்றும், பின்பற்றுபவர்களை ஆடுகள் என அழைப்பதை நாம் ஏற்றுக்கொள்ள இயலுமா? ஆடுகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு மனிதர்கள் கொண்டிருக்கிற விருப்புரிமையே.
இன்றைய நாளில் நாம் இறையழைத்தலுக்காக இறைவேண்டல் செய்கிறோம். குருத்துவம், துறவறம் மட்டுமல்ல, அரசியல், பொருளாதாரம், குடும்பம், பணியிடம் என அனைத்துமே இறையழைத்தல்கள்தாம். திருஅவைக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும், சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் நல்ல ஆயர்கள் (தலைவர்) தேவை என்பதை உணர்ந்து இறைவேண்டல் செய்வோம்.
‘நானே நல்ல ஆயன்’ என்று தம்மை முன்மொழிகிற இயேசு, ஆயனின் பண்புகளை வரையறுக்கிறார்: (அ) ‘ஆயன் ஆடுகளுக்காக உயிரைக் கொடுக்கிறார்,’ (ஆ) ‘ஆயன் ஆடுகளை அறிந்திருக்கிறார்,’ மற்றும் (இ) ‘வேறு ஆடுகளையும் தேடிச் சென்று கூட்டிச் சேர்க்கிறார்.’
(அ) ஆயன் உயிரைக் கொடுக்கிறார்
தன் ஆடுகள் உயிர் பெறுவதற்காக ஆயன் தன் உயிரைக் கையளிக்கத் தயாராக இருக்கின்றார். உயிரைக் கையளித்தல் என்பது இயேசுவின் வாழ்வில் வெறும் வாக்குறுதியாக நில்லாமல், சிலுவையில் அரங்கேறும் மேலான செயலாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட அர்ப்பணம் ‘கூலிக்கு மேய்ப்பவர்களிடம்’ இருப்பதில்லை. ஏனெனில், அவர்களுக்கு ஆடுகளின்மேல் உரிமை இல்லை. ஆடுகளுக்கும் அவர்களுக்குமான உறவு அவர்களை மையமாக வைத்து அல்ல, மாறாக, ஆடுகளை மையமாக வைத்தே அங்கு நிகழ்கிறது. ஆனால், ஆயன்-ஆடுகள் உறவில், ஆடுகளும் ஆடுகளின் நலனுமே முதன்மை பெறுகின்றன.
(ஆ) ஆயன் ஆடுகளை அறிந்திருக்கிறார்
தந்தைக்கும் இயேசுவுக்கும் சீடர்களுக்கும் இருக்கின்ற இணைப்பின் அடிநாதமாக இருப்பது அறிதல். எபிரேய விவிலியத்தில், ‘அறிதல்’ என்றால் ‘உறவு கொள்தல்’ என்பது பொருள். தந்தைக்கும் இயேசுவுக்கும் இடையே இருக்கும் அறிதல் என்னும் வலைப்பின்னல் நீண்டுகொண்டே போகிறது. ஆக, இந்த வலைப்பின்னலில் அல்லது செடி-கொடி போன்ற இணைந்திருத்தலில் ஆடுகள் வாழ்வு பெறுகின்றன. இரண்டாம் வாசகத்தில், ‘நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள்’ என்று கடவுளின் அன்பு பற்றித் தன் குழுமத்திற்கு நினைவூட்டுகின்றார் யோவான். மேலும், கடவுளுக்கு எதிராக இருக்கின்ற உலகம் அவரை அறிந்துகொள்ளவில்லை என்றும் சொல்வதன் வழியாக, அறிதல் வழியாகவே அன்பு செய்யவும், அன்பு செய்யப்படவும் முடியும் என்கிறார் யோவான்.
(இ) ஆயன் ஆடுகளைத் தேடிச் சேர்க்கிறார்
தம் ஆட்டுக்கொட்டிலைச் சாராத மற்ற ஆடுகளையும் கூட்டிச் சேர்க்கிறார் இயேசு. ஆயனின் தாராள உள்ளத்தையே இது வெளிப்படுத்துகிறது. இன்றைய முதல் வாசகத்தில், நாம் பேதுரு மற்றும் யோவானின் விசாரணை நிகழ்வை வாசிக்கின்றோம். ‘நாங்கள் செய்த நற்செயல்’ என்று தாங்கள் மாற்றுத்திறனாளி ஒருவருக்குச் செய்த நலன் குறித்துப் பேசுகின்றார் பேதுரு. ‘நற்செயல்’ என்பது இயேசுவின் செயலைக் குறிப்பதாக திப 10:38-இல் வாசிக்கின்றோம். இயேசுவின் பெயரால் இப்போது திருத்தூதர்கள் நற்செயல் செய்யத் தொடங்கியுள்ளனர். மேலும், நலம் பெறுவதற்கும் (மீட்பு பெறுவதற்கும்) இயேசுவின் பெயரைத் தவிர வேறு பெயர் இல்லை என்றும் அறிக்கையிடுகின்றனர். இயேசுவைச் சாராதவர்களைக் கூட்டிச் சேர்க்கிறார்கள். விலக்கப்பட்ட கற்களை எல்லாம் மூலைக்கற்களாக மாற்றுகிறார்கள்.
ஆயனின் மேற்காணும் மூன்று பண்புகளை நாம் எப்படி வாழ்ந்து பார்ப்பது?
(அ) நலம் நாடுதல்
‘உயிர் கொடுத்தல்’ என்பதை ‘நலம் நாடுதல்’ எனப் புரிந்துகொள்ளலாம். நம் தலைமைத்துவத்தின் வழியாக அனைவரும் நலம் பெற வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும்.
(ஆ) அறிதல்
இன்றைய நாளில் அறிதல் என்பது காணுதல் என்னும் பொருளில் புரிந்துகொள்ளப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் இணைய தளங்களிலும் நம ;கண்களை மேயவிட்டு அனைவரையும் அறிந்திருப்பதாக நாம் நினைத்துக்கொள்கிறோம். ஆனால், அறிதல் என்பது உறவுநிலைகளில் பங்கேற்றல் என்ற நிலையில் புரிந்துகொண்டு அனைவரையும் ஏற்றுக்கொண்டு உறவாடுதல் வேண்டும்.
(இ) தேடிச் செல்தல்
மற்ற ஆடுகளையும் தம் ஆடுகள்போல ஏற்றுக்கொள்கிற இயேசு அவற்றைத் தேடிச் செல்கிறார். தன் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறுகிற ஆயன் அனைத்து ஆடுகளையும் அரவணைத்துக்கொள்கிறார்.
நம் வாழ்வியல் தளங்களில் நல்ல ஆயனாக நாம் வாழ்ந்து பார்த்தல் நலம்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment