இன்றைய இறைமொழி
சனி, 20 ஏப்ரல் 2024
பாஸ்கா காலம் 3-ஆம் வாரம் – சனி
திப 9:31-42. யோவா 6:60-69
நம்பிக்கைப் பயணம்
திபேரியக் கடலுக்கு அருகே இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்து கொடுத்தபின், அவர் ஆற்றிய நீண்ட உரை இன்று முற்றுப் பெறுகிறது. ‘இவரைப் பிடித்துச் சென்று அரசராக்கி விடலாம்!’ என வந்தவர்கள், ‘இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?’ என்று சொல்லி அவரிடமிருந்து விலகிச் செல்கின்றனர்.
இந்த நற்செய்திப் பகுதியைப் பற்றி மறையுரை ஆற்றுகின்ற புனித அகுஸ்தினார் இப்படி முடிக்கிறார்:
‘என்னே மானுடத்தின் இரங்கத்தக்க நிலை! தங்களுடைய வயிற்றுக்குச் சோறு கிடைக்க வேண்டும் என நினைத்து, அவரை அரசராக்க நினைத்த மக்கள், அவர் அவர்களுடைய ஆன்மாவுக்கு உணவு தருகின்ற பேரரசர் என்று கண்டவுடன், அவரை விட்டு விலகிச் செல்கின்றனர்!’
‘நானே வாழ்வுதரும் உணவு’ பேருரையின் நிறைவில் சீடர்களும் பன்னிரு சீடர்களும் ஆற்றும் பதிலிறுப்பே இன்றைய நற்செய்தி வாசகம். இரண்டு வகையான பதிலிறுப்புகளைப் பதிவு செய்கிறார் யோவான். பெரும்பான்மையினர் எதிர்மறையாக பதிலிறுப்பு செய்கிறார்கள். இயேசுவை விட்டு விலகிச் செல்கிறார்கள். பன்னிரு சீடர்கள் நேர்முகமாகப் பதிலிறுப்பு செய்கிறார்கள். பேதுருவின் நம்பிக்கை அறிக்கையையும் இங்கே வாசிக்கிறோம்: ‘நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர்.’
இந்த நிகழ்வின் வழியாக இயேசு யார் என்பதை சீடர்கள் அறிந்துகொள்வதோடு அவரிடம் நெருங்கி வருகிறார்கள்.
பன்னிரு சீடர்கள் நேர்முகமாகப் பதிலிறுப்பு செய்யக் காரணங்கள் எவை?
(அ) நம்பிக்கைப் பார்வை. மற்றவர்கள் இயேசுவைப் போதகராக மட்டுமே பார்த்தார்கள். கண்களுக்கு தெரிவதை மட்டுமே அவர்களால் காண முடிந்தது. பன்னிருவரோ நம்பிக்கைக் கண்கள் கொண்டு பார்த்தார்கள். நம்பிக்கை என்பது கண்களால் பார்ப்பது அல்ல. கண்களை மூடியவுடன் பார்ப்பது. கண்களை மூடி அல்லது, கண்களைக் கடந்து பார்ப்பது. நம்பிக்கைப் பார்வை இருந்தால்தான் எந்த செயலும் சாத்தியம். இதையே பவுல், ‘நாங்கள் காண்பவற்றை அல்ல, நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை. காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை’ (காண். 2 கொரி 4:18) என்கிறார்.
(ஆ) தூய ஆவியும் ஊனியல்பும்
யோவான் நற்செய்தியின் சுருக்கக் குறியீட்டுச் செய்திகளில் இதுவும் ஒன்று. இங்கே, ஆவி-உடல், வாழ்வு-சாவு என்ற முரண் காட்டப்படுகிறது. ஒன்றை எடுக்கிறவர் இன்னொன்றை எடுக்க முடியாது. ஆக, இங்கே நம் தெரிவு அவசியம். ‘ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது’ என்ற செய்தி நமக்கு பெரிய நினைவூட்டலாக இருக்கிறது. ஏனெனில், ஊனியல்பு வரையறைக்கு உட்பட்டது. வரையறையைத் தாண்டி நம்மால் செல்ல முடியாது. ஆனால், ஊன் இல்லாமல் ஆவியை அனுபவிக்க முடியாது.நம் வாழ்வில் நாம் இவ்விரு தளங்களில் இயங்குகிறோம். ஊனியல்பு நம் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் செயலாற்றுகிறது. நமக்கு உகந்ததை மட்டுமே நாடுமாறு நம் இயல்பைச் சுருக்குகிறது. தூய ஆவியின் தளத்தில் இயங்குபவர் கடவுளின் விருப்பத்தைச் செயல்படுத்துகிறார். கடவுளுக்கு உகந்தவற்றையும் தனக்கு மேன்மை தருவதையும் நாடுகிறார்.
(இ) தந்தை அழைத்தாலன்றி
நம்பிக்கை என்பது ஒரு கொடை. அதை கடவுளே நமக்கு வழங்க வேண்டும். ‘என் தந்தை அருள்கூர்ந்தாலன்றி யாரும் என்னிடம் வர இயலாது’ என்கிறார் இயேசு. தந்தையின் அருள் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கான சூழலை நம்மில் உருவாக்கித் தருகிறது. தந்தையின் அழைப்பை ஒருவர் தன் உள்ளத்தில் உணர்கிறார். வார்த்தை என்ற நிலையில் இயேசு நம் உள்ளத்தில் உரையாடுகிறார்.
இன்றைய முதல் வாசகத்தில், திருத்தூதர் பேதுருவின் பணிகள் உருவாக்கத்தை வாசித்தறிகிறோம். திருச்சபை வேகமாக வளர்கிறது. பேதுரு இரண்டு வல்ல செயல்கள் நிறைவேற்றுகிறார்: உடல்நலமற்றோருக்கு நலம், இறந்தவர்க்கு வாழ்வு. இயேசுவின் பணிகளைத் திருத்தூதர்களும் செய்கிறார்கள். திருத்தூதர்கள் இயேசுவின் அதிகாரத்தால் வல்ல செயல்கள் நிறைவேற்றுகிறார்கள். பலரும் இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்கிறார்கள்.
இன்று நம் பயணம் இரண்டு திசைகளை நோக்கி இருக்கலாம்:
(அ) இயேசுவை விட்டு விலகிச் செல்தல் – மற்ற சீடர்கள்போல.
(ஆ) இயேசுவை நோக்கிச் செல்தல் – பன்னிரு சீடர்கள்போல.
ஊனியல்பால் இயக்கப்படுபவர் இயேசுவை விட்டுச் செல்கிறார். ஆவியால் வழிநடத்தப்படுபவர் இயேசுவை நோக்கி வருகிறார்.
நிற்க.
‘இறைவேண்டலே எதிர்நோக்கின் பள்ளிக்கூடம்’ – திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 77)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment