இன்றைய இறைமொழி
புதன், 17 ஏப்ரல் 2024
பாஸ்கா காலம் 3-ஆம் வாரம் – புதன்
திப 8:1அ-8. யோவா 6:35-40
பணியும் உடனிருப்பும்
வாழ்வுதரும் உணவு பற்றிய இயேசுவின் பேருரை தொடர்கிறது. தம்மை அனுப்பிய தந்தைக்கும் தமக்கும் உள்ள உறவுநிலையை மூன்று நிலைகளில் எடுத்துரைக்கிறார் இயேசு: (அ) தந்தை இயேசுவிடம் சிலரை ஒப்படைத்திருக்கிறார் – அதாவது, நிலைவாழ்வு என்பது சிலருக்கு முன்குறித்துவைக்கப்பட்டதாக இருக்கிறது. (ஆ) இயேசு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார். (இ) அனைவரும் மீட்படைய வேண்டும் என்பது தந்தையின் திருவுளமாக இருக்கிறது.
அதாவது, ஒரு சிலர் மட்டும்தான் மீட்படைவர் என்னும் நிலையிலிருந்து, அனைவரும் மீட்படைவர் என்னும் நிலைக்குக் கடந்து செல்வதே இயேசு செய்கிற பணியாக இருக்கிறது. நிலைவாழ்வு என்பதை நிறைவாழ்வு என்றும், இறப்புக்குப் பின்னர் வாழ்வு என்றும் புரிந்துகொள்ளலாம்.
இன்றைய நற்செய்திப் பகுதியில், இயேசுவுக்கும் தந்தைக்குமான உறவுநிலையை தெளிவுபடுத்துகிறார் இயேசு. ‘அனுப்பியவர்,’ ‘தந்தை’ என்று சொல்வதன் வழியாக, தாம் இந்த உலகத்திற்கு வந்தவர் என்பதையும், தாம் தனியாக இல்லை என்பதையும் எடுத்துரைக்கிறார் இயேசு.
‘அனுப்பியவர்’ என்னும் சொல் இயேசு பணி செய்ய வேண்டியதன் அவசியத்தையும், ‘தந்தை’ என்னும் சொல் அவர் அனுபவிக்கிற கடவுளின் உடனிருப்பையும் எடுத்துரைக்கிறது.
பணி, உடனிருப்பு – இவை இரண்டும் நமக்குப் பாடங்களாக அமைகின்றன.
இந்த உலகிற்கு வந்துள்ள ஒவ்வொருவரையும் கடவுள்தாமே அனுப்புகிறார். அவர் அனுப்புவதால் நமக்கென ஒரு பணியை அவர் நிர்ணயம் செய்திருக்கிறார். அந்தப் பணியின் வழியாக நாம் முழுமையான மனிதர்களாக மாறுகிறோம். அவர் நம்மோடு உடனிருக்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில், திருத்தொண்டர் பிலிப்பு ஆற்றுகிற பணிகளின் தொடக்கத்தை வாசிக்கிறோம். கடவுளின் உடனிருப்பால் பிலிப்பு வல்ல செயல்களை ஆற்றுகிறார்.
‘திருச்சபை பெரும் இன்னலுக்கு உள்ளாகியது’ என்ற எதிர்மறை உணர்வுடன் தொடங்குகிற வாசகம், ‘இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று’ என நிறைவுபெறுகிறது. திருச்சபை அடைந்த இன்னலால் மக்கள் சிதறடிக்கப்படுகிறார்கள். இது அவர்களுக்குத் துன்ப அனுபவமாக இருந்தாலும், அது மகிழ்ச்சியாக மாறக் காரணம், அவர்கள் தங்களுடைய பிரச்சினையையும் வாய்ப்பாக மாற்றியதுதான்.
இவ்வுலகில் தன் பணி என்ன என்பதை உணர்ந்தவரும், கடவுளின் உடனிருப்பை அனுபவிப்பவரும் தாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளையும் வாய்ப்பாகக் கருதும் பக்குவம் பெறுகிறார். இந்தப் பக்குவம் பெற்றவருக்கும் நிலைவாழ்வு இப்போதே சாத்தியமாகிறது.
நிற்க.
‘ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே, நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள்’ (திபா 31:24). (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 74)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment