இன்றைய இறைமொழி
செவ்வாய், 16 ஏப்ரல் 2024
பாஸ்கா காலம் 3-ஆம் வாரம் – செவ்வாய்
திப 7:51-8:1அ. யோவான் 6:30-35
கடவுள் தரும் உணவு
‘நானே வாழ்வுதரும் உணவு’ என்னும் பேருரை இன்றைய நற்செய்தி வாசகத்தில் தொடங்குகிறது. யோவான் நற்செய்தியில் இயேசு மொழிகிற ‘நானே’ வாக்கியங்களில் முதன்மையாக இருக்கிறது இது. ‘உணவு’ என்னும் சொல் மூன்று தளங்களில் கையாளப்படுகிறது: (அ) பசி தீர்க்கும் உணவு, (ஆ) கடவுளின் பராமரிப்பை உணர்த்தும் உணவு, (இ) கடவுளே தம்மைப் படைக்கும் உணவு.
(அ) பசி தீர்க்கும் உணவு. ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளிக்கிற, பெருக்கிக்கொடுக்கிற இயேசு, மக்களின் பசி தீர்க்கிறார். அவர்கள் பசியோடு இருக்கிறார்கள் என்பதை தாமாகவே கண்டு, அவர்களுடைய பசிக்குத் தீர்வு காண்கிறார் இயேசு. இயேசுவால் பசி நீங்கிய மக்கள் மீண்டும் அவரைத் தேடி வருகிறார்கள். அவர்களுடைய தேடலின் திசையைத் திருப்புகிறார் இயேசு.
(ஆ) கடவுளின் பராமரிப்பை உணர்த்தும் உணவு. இயேசுவின் சொற்களுக்குச் செவிகொடுக்கிற மக்கள் தங்களுக்கென ஓர் அடையாளத்தைக் காட்டுமாறு இயேசுவிடம் கேட்டு, அவர்களுடைய முன்னோர் பாலைநிலத்தில் உண்ட ‘மன்னா’ என்னும் உணவைச் சுட்டிக்காட்டுகிறார்கள். வானிலிருந்து மன்னா பொழிந்தவர் மோசே அல்ல, மாறாக, தம் தந்தையே என அவர்களுடைய புரிதலைத் திருத்துகிறார் இயேசு. மன்னா என்னும் உணவு பசி தீர்க்கும் உணவாகவும், கடவுளின் பராமரிப்பை உணர்த்தும் அடையாளமாகவும் இருந்தது.
(இ) கடவுளே தம்மைப் படைக்கும் உணவு. மக்கள் உண்ட அப்பம், முன்னோர்கள் உண்ட மன்னா ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது உணவு நோக்கி தம் சமகாலத்தவரை அழைக்கிற இயேசு, ‘கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது. வாழ்வு தரும் உணவு நானே’ என மொழிகிறார். ‘என்னிடம் வருபவருக்குப் பசியே இராது. என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது’ என்னும் வாக்கியத்தில், ‘நம்பிக்கை கொள்தல்’ என்பதை ‘இயேசுவை இறைமகன் என ஏற்றுக்கொள்தல்’ என்றும், ‘பசி, தாகம்’ என்னும் சொற்களை ஆன்மிகம் சார்ந்த நிறைவு எனவும் எடுத்துக்கொள்ளலாம்.
‘வாழ்வு தரும் உணவு’ என்னும் சொல்லாடலை அருளடையாள இறையியலின் பின்புலத்தில் ‘நற்கருணை’ என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இயேசு இவ்வாக்கியத்தை மொழிந்தபோது ‘அருளடையாளம்’ பற்றிய புரிதல் அந்நாள்களில் இல்லை என்பதையும் கருத்தில் கொள்வோம்.
‘நற்கருணை,’ ‘இறைவார்த்தை,’ ‘அயலார்,’ ‘நம் உள்ளத்தில் தோன்றும் ஒளி,’ ‘மதிப்பீடு,’ ‘நற்சிந்தனை,’ ‘விடுதலை’ என இயேசு வாழ்வுதரும் உணவாக நம் நடுவில் இருக்கிறார்.
உடல், உள்ளம், உணர்வு ஆகியவற்றைக் கடந்து ஆன்மா சார்ந்த தளத்திற்குச் செல்லுகிற ஒருவர் அவரால் நிறைவு பெறுகிறார். அப்படி நிறைவுபெறுகிற ஒருவரையும், நிறைவுக்காகக் காத்திருக்கிற ஒருவரையும் இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம்.
திருத்தொண்டர் ஸ்தேவான் ஆண்டவராகிய இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கைக்குச் சான்று பகர்கிறார். இறப்பில் அவர் இயேசுவைப் போல ஒத்திருந்ததாகப் பதிவு செய்கிறார் லூக்கா. இயேசு மன்னித்தது போல அனைவரையும் மன்னிக்கிறார். இயேசுவையே கடவுளாக அறிக்கையிட்டு, அவரிடம் தன் ஆவியை ஒப்படைக்கிறார்.
சவுல் என்னும் இளைஞர் நகரத்தாரின் மேலுடைகளுக்குக் காவல் காக்கிறார். நம்பிக்கையாளர்களை அழிப்பதன் வழியாக புதிய நம்பிக்கையை அழித்துவிடலாம் என எண்ணிக்கொண்டிருந்தார் சவுல். உடைகளைக் காவல் காக்கும்பொருட்டு அவற்றின்மேல் தன் கண்களைப் பதித்து நின்ற சவுலின்மேல் பதிந்திருக்கின்றன கடவுளின் கண்கள்.
கடவுளின் அருள்கரமே கடைசியில் வெல்கிறது.
அவர் தருகிற உணவே நம் ஆன்மாவின் பசி-தாகம் போக்குகிறது.
திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து நாமும், ‘உமது பேரன்பில் களிகூர்வேன்!’ (காண். திபா 31) எனப் பாடுவோம்.
நிற்க.
‘உம்மையே நாங்கள் எதிர்நோக்கியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மேல் இருப்பதாக!’ (திபா 33:22). (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 73)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment