இன்றைய இறைமொழி
திங்கள், 15 ஏப்ரல் 2024
பாஸ்கா காலம் 3-ஆம் வாரம் – திங்கள்
திப 6:8-15. யோவா 6:22-29
அடுத்த கட்டம்
நேற்றைய நம் நிலையை விட இன்றைய நம் நிலை – உடல் நலத்தில், உள்ள நலத்தில், சமூக நிலையில், ஆன்மிகத்தில் – மேன்மை அடைய வேண்டும் என நாம் விரும்புகிறோம். கீழானதை விடுத்து மேலானதைப் பற்றிக்கொள்தலே வளர்ச்சி.
இன்றைய முதல் வாசகத்தில், திருத்தூதர்களைத் தொடர்ந்து திருத்தொண்டர்களின் பணிகள் பற்றி வாசிக்கிறோம். திருத்தொண்டர் ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராக அரும் அடையாளங்களைச் செய்துவருகிறார். திருத்தூதர்களைப் போல இவரும் தலைமைச் சங்கத்தால் விசாரிக்கப்படுகிறார். இயேசு, இயேசுவைத் தொடர்ந்து அவரோடு உடனிருந்த திருத்தூதர்கள், இப்போது திருத்தொண்டர்கள் என பணி விரிவடைகிறது. இயேசுவுக்கும் நமக்கும் கால, இட இடைவெளி நிறைய இருந்தாலும் அவரைப் பற்றிய அறிவிப்பு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
நற்செய்தி வாசகத்தில் இரண்டு கேள்விகள் உள்ளன: ‘ரபி, எப்போது இங்கு வந்தீர்?’ ‘எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ இரண்டு கேள்விகளையும் மக்கள் இயேசுவை நோக்கிக் கேட்கிறார்கள். முதல் கேள்வி அறியாமையால் எழுகிறது. இரண்டாவது கேள்வி ஆர்வத்தால் எழுகிறது.
‘அழிந்து போகும் உணவுக்காக அல்ல, மாறாக அழியாத உணவுக்காக உழையுங்கள்’ என்று மக்களின் தேடலை நெறிப்படுத்துகிறார். நம்பிக்கை கொள்தலே நற்செயல் என அறிவுறுத்துகிறார்.
‘உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்’ எனப் பாடுகிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 119). உண்மையின் பாதையில் செல்பவர்கள் மேலானதை நோக்கி நடக்கிறார்கள்.
‘என் நெஞ்சே! நீ எதிர்நோக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு. என் மீட்பராம் கடவுளை இன்னும் நான் போற்றுவேன். என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்’ (திபா 42:11). (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 72)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment