இன்றைய இறைமொழி
ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
பாஸ்கா காலம் 3-ஆம் ஞாயிறு
திப 3:13-15, 17-19. 1 யோவா 2:1-5. லூக் 24:35-48
நீங்கள் சாட்சிகள்!
‘சான்று பகர்தல்,’ ‘சாட்சியாக இருத்தல்’ என்னும் சொல்லாடல்களை நாம் அதிக முறை கேட்டிருக்கிறோம். ‘சொற்கள் அல்ல, மாறாக, சான்று வாழ்வே நற்செய்திக்கு உகந்தது’ என திருஅவையின் ஏடுகளும் நமக்குக் கற்பிக்கின்றன.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் சீடர்களுக்குத் தோன்றுகிற இயேசு, ‘இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்’ என்கிறார். முதல் வாசகத்தில், தூய ஆவியாரின் வருகைக்குப் பின்னர் எருசலேம் நகரில் உரையாற்றுகிற பேதுரு, ‘இதற்கு நாங்கள் சாட்சிகள்’ என அறிவிக்கிறார். இயேசுவின் அழைப்புக்குப் பதிலிறுப்பு செய்கிறார்கள் சீடர்கள்.
முதலில், ‘சாட்சி’ என்னும் சொல்லை விவிலியப் பின்புலத்தில்புரிந்துகொள்வோம்.
(அ) உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துதல்
ரூத்து நூலில், ரூத்தை திருமணம் செய்ய விரும்புகிற போவாசு ஊரின் பெரியவர்களை அழைத்து நிகழ்வுக்குச் சான்று பகருமாறு அமர்த்துகிறார். நடக்கிற ஒன்று உண்மையானது என் ‘சான்று’ பகர்கிறார்கள் இவர்கள் (காண். ரூத் 4:9).
(ஆ) அனுபவித்ததை மற்றவருக்கு அறிவித்தல்
ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை வியத்தகு முறையில் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கிறார். சீனாய் மலையில் அவர்களோடு உடன்படிக்கை செய்துகொள்கிறார். தாம் தேர்ந்துகொண்ட மக்கள் தாங்கள் அனுபவித்ததை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பது ஆண்டவரின் விருப்பமாக இருக்கிறது.
(இ) எச்சரித்தல்
காலப்போக்கில் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளை மறந்து மற்ற கடவுளர்களை வழிபடத் தொடங்குகிறார்கள். கடவுளை விட்டு அவர்கள் தூரமாகச் சென்றபோது இறைவாக்கினர்கள் வழியாக அவர்களை எச்சரிக்கிறார் கடவுள்.
(ஈ) உயிர்துறத்தல்
ஆண்டவராகிய கடவுள்மேல் கொண்ட நம்பிக்கைக்காகத் துன்பம் ஏற்பதும், அவருக்காக உயிர் துறப்பதும் மறைசாட்சியம் எனக் கருதப்படுகிறது.
முதல் மற்றும் இரண்டாவது பொருள்களில், ‘சாட்சி’ என்னும் சொல் இன்றைய நற்செய்தி மற்றும் முதல் வாசகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சீடர்கள் இயேசுவுடைய உயிர்ப்பின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துபவர்களாகவும், தாங்கள் அனுபவித்ததை மற்றவர்களுக்கு அறிவிப்பவர்களாகவும் மாற வேண்டும்.
சீடர்கள் என்ன அனுபவித்தார்கள்?
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவராகிய இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றுகிறார். உயிர்த்த ஆண்டவரைக் காண்கிற சீடர்கள் மகிழ்ச்சியும் அச்சமும் வியப்பும் கொள்கிறார்கள். தாம் ஆவி அல்ல, மாறாக தமக்கு உடல் இருக்கிறது என்பதை உணர்த்த விரும்புகிற இயேசு, பொறித்த மீன் துண்டு ஒன்றை அவர்கள் முன்பாக உண்கிறார். தொடர்ந்து, மறைநூலைப் புரிந்துகொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறக்கிறார். தாங்கள் கண்ட அனைத்தையும் மற்றவர்களுக்கு அறிவிக்கும் சாட்சிகளாக அவர்களை அறிவிக்கிறார்.
‘இயேசு இல்லை’ என்னும் நிலையிலிருந்து ‘இயேசு இருக்கிறார்’ என்னும் நிலைக்குக் கடந்து போகிறார்கள் சீடர்கள். இயேசு உயிர்த்துவிட்டார் என்று தாங்கள் கேள்வியுற்றது வதந்தி அல்ல, மாறாக, உண்மை நிகழ்வு என்பதைத் தங்கள் கண்களால் கண்டு உறுதி செய்துகொள்கிறார்கள். தாங்கள் வெறும் சீடர்கள் அல்ல, மாறாக, சாட்சிகள் என்னும் புதிய அழைப்பைப் பெற்றுக்கொள்கிறார்கள். ‘பாவ மன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என அறிவிக்கப்பட வேண்டும் என்னும் கட்டளையைப் பெறுகிறார்கள்.
சீடர்கள் எப்படி சான்று பகர்ந்தார்கள்?
‘இதற்கு நீங்கள் சாட்சிகள்’ என்னும் அழைப்பை அவர்கள் பெற்றாலும், தூய ஆவியாரின் வருகைக்குப் பின்னரே ஆற்றல் பெற்றவர்களாக வெளியே சென்று அறிவிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஓர் அறிவித்தல் நிகழ்வையே இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம். எருசலேமில் கூடியிருந்த மக்களை நோக்கி உரையாடுகிற பேதுரு, ‘வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்’ என மக்களின் தவற்றைச் சுட்டிக்காட்டுவதோடு, அவர்களுடைய அறியாமையின் பொருட்டு அவர்கள் ஆற்றிய செயலுக்கு தீர்வு உண்டு என்று அறிவித்து, மனமாற்றத்தை முன்மொழிகிறார்கள்.
இயேசுவிடம் திரும்பி வருவதே மனமாற்றம் என்னும் திருத்தூதர்களின் அறிவிப்பை இன்றைய இரண்டாம் வாசகத்தில் உறுதிப்படுத்துகிறார் யோவான். ஏனெனில், இயேசுவே பாவக்கழுவாயாக இருக்கிறார்.
நாம் சான்று பகர்வது எப்படி?
(அ) சாட்சிகள் என்பவர்கள் அனுபவம் பெற்றவர்கள்
நீதிமன்ற வழக்காற்றில், ‘சாட்சி’ என்பவர் நிகழ்ந்த ஒன்றை நேரில் கண்டவராக இருக்கிறார். நிகழ்வை அவர் அனுபவித்தவராக இருக்கிறார். ‘இவற்றுக்கு’ என்று இயேசு சொல்வது வெறும் உயிர்ப்பு நிகழ்வுக்கு மட்டுமல்லாமல், சீடர்கள் தொடக்கமுதல் அனுபவித்த அனைத்துக்கும் என்று புரிந்துகொள்ளலாம். இயேசு கிறிஸ்து அனுபவம் பெறுபவர்களே அவருக்குச் சான்று பகர முடியும். அனுபவம் என்பது வெறும் நம் எண்ணத்தில் தோன்றுகிற எண்ணம் அல்ல, மாறாக, நம்மில் நிகழ்கிற ஓர் அடிப்படை மாற்றம். ஒரு சாட்சி எந்த அளவுக்கு நிகழ்வில் பங்கேற்கிறாரோ, அந்த அளவுக்கு மட்டுமே அவரால் சான்று பகர முடியும். இயேசு என்னும் நபருடைய விழுமியங்கள், மதிப்பீடுகள், பண்புகள், அவர் கொண்டு வருகிற மீட்பு அனைத்தையும் நாம் அனுபவித்தால் நம் சாட்சியம் ஆழமானதாகவும் மேன்மையாகவும் இருக்கும். ஆண்டவராகிய இயேசு நம் மனக்கண்களைத் திறந்தால்தான் நாம் அவரை அறிந்துகொள்ள முடியும். இன்றைய பதிலுரைப்பாடலில் திருப்பாடல் ஆசிரியரும் (காண். 4), ‘உமது முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும்!’ என இறைவேண்டல் செய்கிறார். அவருடைய முகத்தின் ஒளி நம்மீது விழத் தொடங்கும்போது நாம் அவரை அறியத் தொடங்குகிறோம்.
(அ) சாட்சிகள் என்பவர்கள் பாலங்கள்
சாட்சிகள் என்னும் நிலையில் திருத்தூதர்கள் இயேசுவுக்கும் மற்றவர்களுக்கும் இடையே பாலங்களாக, இணைப்புக் கோடுகளாக நிற்கிறார்கள். மற்றவர்களை இயேசுவை நோக்கியும், இயேசுவை மற்றவர்களிடமும் கொண்டு செல்வது அவர்களுடைய பணியாக இருக்கிறது. நீதிமன்ற வழக்காற்றில் நீதிமன்றத்துக்கும் நிகழ்வுக்கும் இடையே உள்ள பாலமாக இருக்கிறார்கள் சாட்சிகள். நாம் பெற்றுள்ள இயேசு அனுபவத்தைப் பல நேரங்களில் நமக்கு நாமே வைத்துக்கொள்கிறோம். அல்லது, நம் வாழ்வை மேன்மைப்படுத்திக்கொள்ளவும், நம்மையே வலுப்படுத்திக்கொள்ளவும் அதைப் பயன்படுத்துகிறோம். இயேசு அனுபவம் என்பது வெளியே அறிவிக்கப்பட வேண்டியது. இப்படிப்பட்ட அறிவித்தால்தான் இன்றைய முதல் வாசகத்தில் நடந்தேறுகிறது.
(இ) சாட்சிகள் என்பவர்கள் வெளியே நகர்பவர்கள்
சாட்சிகள் என்பவர்கள் இயங்குபவர்கள். வெறும் அறைக்குள் மூடிக்கிடந்தவர்களை வெளியே நகர்த்துகிறார் இயேசு. வெளியே நோக்கி நகர்வதில்தான் வாழ்வு உண்டு என அறிவிக்கிறார். மூடிய அறைக்கு உள்ளே இயேசு நுழைந்ததற்கான காரணம், அந்த அறையிலிருந்து அவர்களை வெளியேற்றுவதற்காகவே. குழந்தைகளாக நாம் கொண்டிருந்த, வளர வளர நாம் இழந்த ஒரு பண்பு நகர்தல். சிறு குழந்தைகளை யாரும் தங்கள் கட்டுக்குள் வைக்க முடிவதில்லை. அவர்கள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். கையை இறுகப் பிடித்தாலும் நழுவி ஓடுகிற அந்த நகர்தல் நம் மனித வாழ்வுக்கு அவசியம்.
‘இயேசு இறந்துவிட்டார், எல்லாம் முடிந்துவிட்டது’ என்று தேங்கி நின்ற தம் சீடர்களுக்குத் தோன்றுகிற இயேசு, தாம் உயிர்த்துவிட்டதை அவர்களுக்கு அறிவிப்பதோடு, அவர்கள் அடுத்துச் செய்ய வேண்டியவற்றையும் அவர்களுக்குக் கட்டளையிடுகிறார். ‘நீங்கள் ஏன் ஐயம் கொள்கிறீர்கள்? நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்?’ எனக் கேட்கிற அவர், அவர்கள் முன்பாக வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவர்களிடமிருந்து வாங்கி உண்கிறார் – என்னதான் தங்கள் தலைவர் இறந்துவிட்ட சோகம் இருந்தாலும், சீடர்கள் மீன் பொறித்துத்தான் வைத்துள்ளார்கள். இந்த மனப்பாங்கைத்தான் ஆண்டவர் விரும்புகிறார் – உண்ணுதல் என்பது விவிலியத்தில் தொடர்ந்து பயணித்தலுக்கான அடையாளம். விலக்கப்பட்ட கனியை உண்டபின்னர்தான் முதற்பெற்றோரின் வாழ்வு நகரத் தொடங்குகிறது. அவர்கள் அக்கனியை உண்ணவில்லை என்றால், இன்று நாம் ஒரு தோட்டதிற்குள்ளேயே திரிந்துகொண்டிருப்போம்! சோர்ந்து போன எலியாவுக்கு உணவு தருகிற ஆண்டவராகிய கடவுள், ‘எழுந்து உண். நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்’ எனக் கட்டளையிடுகிறார் (காண். 1 அர 19:7).
தம் சீடர்களின் மனக் கண்களைத் திறந்து அவர்கள் மறைநூலைப் புரிந்துகொள்ளத் தூண்டுகிற இயேசு, ‘மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் உயிர்த்தெழ வேண்டும் என்றும், பாவ மன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்’ என அவர்களை நகர்த்துகிறார்.
எங்கே எல்லாம் முடிந்தது என நினைத்தார்களோ, அங்கேயே – எருசலேமில் – தங்கள் பணியை அவர்கள் தொடங்க வேண்டும் எனக் கட்டளையிடுகிறார்.
இறப்பு, இழப்பு, நோய், மற்றவர்களின் கண்டுகொள்ளாத்தன்மை, சோர்வு, முதுமை போன்றவை நம்மை உறையச் செய்யும்போது, இயேசு உண்ட பொறித்த மீன் துண்டை நினைவில் கொள்வோம். எழுந்து உண்போம். நமக்குக் கொடுக்கப்பட்ட பணியை நினைவில் கொள்வோம். தொடர்ந்து நகர்வோம். நம்மைக் காண்கிற எவரும் நம்மில் கடவுளைக் காணுமாறு நம் வாழ்க்கையைத் தகவமைத்துக்கொள்வோம்.
‘இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்!’ என்னும் இயேசுவின் கட்டளை ‘இதற்கு நாங்கள் சாட்சிகள்’ என்னும் அறிவிப்பாக மாறுவதே நகர்வு, இயக்கம், வாழ்வு.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment