இன்றைய இறைமொழி. சனி, 13 ஏப்ரல் 2024. முறைப்படுத்துதல்

இன்றைய இறைமொழி
சனி, 13 ஏப்ரல் 2024
பாஸ்கா காலம் 2-ஆம் வாரம் – சனி
திப 6:1-7. யோவா 6:16-21

முறைப்படுத்துதல்

ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்த தொடக்கக் கிறிஸ்தவர்களுடைய வாழ்வில் சில நேரங்களில் சறுக்கல்களும் சங்கடங்களும் இருக்கவே செய்தன. மொழி அடிப்படையிலான பிரச்சினை எழுகிறது. பிரச்சினை உணவு சார்ந்ததாக இருப்பதால் மிகவும் நெருடல்தரக்கூடியதாகவும் அவசரமாகத் தீர்க்க வேண்டியதாகவும் இருக்கிறது.

பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க நினைப்பதோடு, நீண்டதொரு தீர்வையும் காண விரும்புகிறார்கள் சீடர்கள். தங்களுடைய பணிகளைப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, முதன்மையான பணி எது என்பதைத் தங்களுக்கென வரையறுத்துக்கொள்கிறார்கள். மேலும், வலுவற்றவர்களுக்குத் துணைநின்று தங்களுடைய தோழமை உணர்வைக் காட்டுகிறார்கள்.

பிரச்சினையை வாய்ப்பாக நாம் மாற்றிக்கொள்ள முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

‘ஆடமிக் ஹேபிட்ஸ்’ (Atomic Habits) என்னும் நூலின் ஆசிரியர் வாழ்வின் வெற்றி பற்றிப் பேசும்போது, நாம் அனைவரும் அனைத்திலும் வெற்றி பெற்றுவிட முடியாது. நமக்கென சில தளங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் அடையாளம் கண்டு அவற்றில் வெற்றி பெற வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர் திருத்தூதர்கள் உலகத்தையே மாற்றி விடலாம் என நினைக்கின்றனர். இதை, அதை என எல்லாவற்றையும் செய்கின்றனர். ஏழைகளுக்கு உணவு, வீடற்றோருக்கு வீடு, அநாதைகளுக்கு ஆதரவு, குழந்தைகளுக்குப் பாதுகாப்பு, முதியோருக்கு ஆறுதல், நற்செய்தி அறிவித்தல், இறைவேண்டல் என வாழ்க்கை வேகமாக நகர்கிறது. இந்த நேரத்தில் ஒரு பிரச்சினை எழுகிறது. மொழி அடிப்படையிலும் உணவு அடிப்படையிலும் பிரச்சினை எழுகின்றது. வழக்கமாக எல்லாக் குழுமங்களிலும் இந்த இரண்டின் அடிப்படையில்தான் பிரச்சினை எழுகின்றது. இரண்டும் வாய் சம்பந்தப்பட்டதுதான்.

‘எங்கள் கைம்பெண்கள் பந்தியில் கவனிக்கப்படவில்லை’ என்று கிரேக்க மொழி பேசுவோர் எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுக்கின்றனர். இந்தப் பிரச்சினையை கடவுளின் கண் கொண்டு பார்க்கின்ற திருத்தூதர்கள், ‘நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டு பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல’ என்று உணர்கின்றனர். மேலும், ‘நாங்களோ இறைவேண்டலிலும் வார்த்தைப் பணியிலும் ஈடுபட்டிருப்போம்’ என்கின்றனர். மேலும், ‘நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்த எழுவர்களைத் தெரிந்தெடுத்து’ அவர்களைத் திருத்தொண்டர்களாக ஏற்படுத்துகின்றனர்.

‘திருத்தொண்டர்’ என்னும் குருத்துவ அமைப்பு இங்கே தொடங்குகிறது.

மற்றவர்களுடைய வாழ்வை முறைப்படுத்த வேண்டுமெனில், தங்களுடைய வாழ்க்கையை முதலில் முறைப்படுத்த வேண்டுமென உணர்கிறார்கள் திருத்தூதர்கள். முதன்மைகளைச் சரி செய்கிறார்கள். தங்களுடைய பணியைக் கூர்மைப்படுத்துகிறார்கள். ‘இறைவார்த்தை அறிவித்தலும் இறைவேண்டலும்’ தங்களுடைய முதன்மையான பணிகள் எனக் கட்டமைக்கிறார்கள்.

நற்செய்தி வாசகமும் உணவு நிகழ்வின் தொடர்ச்சியாக உள்ளது. இயேசு அப்பங்களைப் பலுகச் செய்யும் நிகழ்வில் பன்னிரண்டு கூடைகள் நிறைய அப்பங்கள் மிஞ்சுகின்றன. இங்கே பசி அல்ல, மாறாக, நிறைவே பிரச்சினையாக மாறுகிறது. வயிறுகள் நிறைந்தவுடன் இயேசுவை அரசராக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இயேசு தனிமையான ஓர் இடத்திற்குச் செல்கிறார். இயேசு தம் முதன்மைகளை அறிந்தவராக இருக்கிறார்.

முதன்மைகள் சரி செய்யப்படாதபோது நிறைய முணுமுணுப்புகள் எழுகின்றன. நம் ஆற்றல் வீணாகிறது. நாள்கள் நகர நகர வாழ்க்கை ஓட்டம் வேகமாகிறது.

திருத்தூதர்கள் அனைவரும் கூடி வந்து பிரச்சினைக்கான தீர்வைக் கண்டுபிடிக்கிறார்கள். கூட்டுமுயற்சியும் அனைவரையும் உள்ளடக்கிய போக்கும் நம் சிந்தனையை விரிவாக்குவதோடு, தீர்வை அனைவரும் கடைப்பிடிக்கவும் உதவுகின்றன.

எல்லாராலும் முடியும் என நினைக்கிறார்கள் திருத்தூதர்கள். ஆகையால்தான், தங்களுடைய உடனுழைப்பாளர்களாகத் திருத்தொண்டர்களை ஏற்படுத்துகிறார்கள். இந்த உலகத்தில் நம்மைப் போலவே ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையின் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் நம் ஓட்டத்தில் இணைத்துக்கொள்தல் நலம்.

இயேசு ஏறுவதற்கு முன்னதாகவே படகு கரையில் சேர்ந்தது என எழுதுகிறார் யோவான். இயேசு இல்லாத படகு போல நம் வாழ்க்கையும் சில நேரங்களில் வெறுமையாக இருக்கிறது. அந்த நேரத்தில் நாம் நினைத்துக்கொள்வோம். அவர் நமக்காக இறைவேண்டல் செய்துகொண்டிருக்கிறார் என உணர்வோம். முடிந்த வரையில் இயேசுவை ஏற்றிக்கொள்வோம். அல்லது இயேசுவோடு கரையில் அமர்ந்துவிடுவோம்.

நிற்க.

‘நீரே என் புகலிடம். நீரே என் கேடயம். உமது வாக்கில் நான் நம்பிக்கை வைக்கிறேன்’ (திபா 119:114). (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 71)

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment