இன்றைய இறைமொழி. புதன், 10 ஏப்ரல் 2024. ஒளியை நோக்கி

இன்றைய இறைமொழி
புதன், 10 ஏப்ரல் 2024
பாஸ்கா காலம் 2-ஆம் வாரம் – புதன்
திப 5:17-26. யோவா 3:16-21

ஒளியை நோக்கி

இன்றைய நற்செய்தியில், இயேசு-நிக்கதேம் உரையாடல் தொடர்கிறது. இந்த உரையாடலில் மிக முக்கியமான இறையியல்கூற்றை யோவான் பதிவு செய்கின்றார்: ‘தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்’ (யோவா 3:16). யோவான் நற்செய்தியாளரின் சுருக்கக் கூற்றுக்களில் இதுவும் ஒன்று.

இங்கே, இயேசு கடவுளின் மகன் என்றும், அவர் மேல் நம்பிக்கை கொள்தல் என்றும், நிலைவாழ்வு என்பது நம்பிக்கையாளர்களுக்கு உண்டு என்றும், கடவுள் உலகின்மேல் அன்புகூர்கின்றார் என்றும், அந்த அன்பு அவருடைய தற்கையளிப்பில் வெளிப்படுகிறது என்றும் பல இறையியல் உண்மைகள் புதைந்து கிடக்கின்றன.

‘நம்பிக்கை கொள்தல்’ பற்றிய இரண்டு புரிதல்கள் தெளிவாக இருக்கின்றன. ஒன்று, ‘நம்பிக்கை கொள்தல் என்றால் ஒளிக்கு வருதல்.’ இரண்டு, ‘நம்பிக்கை கொள்ளாமல் இருத்தல் என்றால் தண்டனைத் தீர்ப்பு பெறுதல்.’ நம்பிக்கை கொள்ளாமல் இருத்தலால் தண்டனைத் தீர்ப்பு வருவதில்லை. ஏனெனில், நம்பிக்கை கொள்ளாமல் இருத்தலே தண்டனைத் தீர்ப்புதான் என்பதுதான் இயேசுவின் புதிய பகிர்வு.

‘ஒளிக்கு வருதல்’ என்னும் சொல்லாடலை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். முதன்முதலாக, மனிதர்கள் கொண்டிருக்கிற விருப்புரிமை அல்லது விடுதலை இங்கே முன்வைக்கப்படுகிறது. நாம் ஒளியாகிய கடவுளின் சாயலைக் கொண்டிருந்தாலும், ஒளிக்குரிய செயல்களையே செய்ய வேண்டுமென எந்தவொரு நிலையிலும் எதுவும் நம்மேல் திணிக்கப்படவில்லை. நாமாகவே விரும்பிச் செயல்பட முடியும். ஒளியையோ அல்லது இருளையோ தேர்ந்துகொள்வது நம் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது.

(அ) கடவுள்தான் ஒளி. அவரே உண்மை. அவரோடு இணைந்து மனிதர்கள் செயல்படும்போது அவர்கள் நன்மையானதைச் செய்கின்றனர்.

(ஆ) தீங்கு செய்யும் மனிதர்கள் ஒளியிடம் வர அஞ்சுகிறார்கள். ஏனெனில், வந்தால் அவர்களுடைய செயல்கள் வெளியாகிவிடும். அவர்கள் நிந்தனைக்கும் வெட்கத்திற்கும் ஆளாக வேண்டும். நிந்தனையும் வெட்கமும் பொய்மையின் கனிகள்.

ஒளி என்றால் என்ன? ஒளி என்பது வெளியே எரியும் வெளிச்சம் அல்ல. மாறாக, அது நன்மை அல்லது உண்மையை நோக்கி என்னைத் தூண்டி எழுப்பும் ஒரு தீப்பொறி.

அகுஸ்தினார் தன்னுடைய வாழ்வின் மனமாற்றம் பற்றி எழுதும்போது, இனி தன்னாளுகையோடும் உடல் இன்பங்களை அடக்கியும் அவர் முடிவெடுக்கும் தருணத்தில் நடந்த மனப்போராட்டை இப்படி எழுதுகின்றார்:

‘நான் எழுந்தேன். எழுந்து உம்மிடம் (இறைவனிடம்) வந்தேன். இனி என் பழைய வாழ்க்கையை வாழப் போவதில்லை என முடிவெடுத்தேன். ஆனால், நான் எடுத்த முடிவு என்னுடைய இச்சைக்கும், பேராசைக்கும், ஆணவத்திற்கும் பிடிக்கவில்லை. அவை என் மேலாடையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டே, ‘எங்களைவிட்டு போகப் போகிறாயா? உண்மையிலேயே போகப் போகிறாயா? நாங்கள் இல்லாமல் உன்னால் வாழ முடியுமா? சீக்கிரம் திரும்பிவந்துவிடுவாய்தானே? ஒருமுறை கூட திரும்ப வரமாட்டாயா? இன்றைக்கே போக வேண்டுமா? நாளை பார்த்துக்கொள்ளக் கூடாதா?’ என்று கேட்டன.’

ஆக, ஒளியை நோக்கி நாம் வருவதற்குத் தயாராக இருந்தாலும், இருளின் செயல்கள் தரும் இன்பம், ‘இவை இல்லாமல் எப்படி நம்மால் இருக்க முடியும்?’ என்ற அச்சத்தையும், ‘நாளை பார்த்துக்கொள்ளலாம்’ என்ற தயக்கத்தையும் தருகின்றன.

ஒளி எல்லார்மேலும் ஒளிர்கிறது. சிலரே அதைக் கண்டு அதனிடம் வருகிறார்கள். இருளின் செயல்களுக்குத் தண்டனை என்று எதுவுமே இல்லை. ஏனெனில், இருளின் செயல்களே தண்டனை. ஒளி மட்டுமே உண்மை. ஒளி மட்டுமே விடுதலை.

முதல் வாசகத்தில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீடர்கள் கடவுளின் வல்ல செயலால் விடுதலை செய்யப்படுகிறார்கள். அகத்தில் விடுதலை கொண்டவர்களை புறத்தில் எவரும் கட்டி வைக்க இயலாது.

பதிலுரைப் பாடலில் (காண். திபா 34), தன்னை எல்லாவித நெருக்கடியினின்றும் காப்பாற்றும் ஆண்டவரைப் போற்றுகிறார் ஆசிரியர்.

நிற்க.

‘ஆண்டவரை எதிர்நோக்கியிருப்பவர்கள் புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர். அவர்கள் ஓடுவர். களைப்படையாளர். நடந்து செல்வர். சோர்வடையார்.’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 69)

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment