இன்றைய இறைமொழி. செவ்வாய், 9 ஏப்ரல் 2024. மறுபடியும் பிறத்தல்!

இன்றைய இறைமொழி
செவ்வாய், 9 ஏப்ரல் 2024
பாஸ்கா காலம் 2-ஆம் வாரம் – செவ்வாய்
திப 4:32-37. யோவா 3:7-15

மறுபடியும் பிறத்தல்!

நாம் பார்த்துப் பார்த்து வாங்கிய கணினியில் வைரஸ் ஒன்று ஒட்டிக்கொண்டு, நம் சேர்த்து வைத்த கோப்புகள் எல்லாம் அழிந்துகொண்டே இருக்க, அதை மறுபடியும் ரீஸெட் செய்து அதை மீண்டும் மறுபடியும் பிறக்க வைக்கிறோம். அதே போல நம் திறன்பேசியையும் சில நேரங்களில் ஃபேக்டரி ரீஸெட் செய்துகொள்கிறோம். நம் வாகனத்தைப் புதுப்பித்தல், வீட்டைப் புதுப்பித்தல் என நாம் பயன்படுத்தும், வாழும் இடங்களைப் புதுப்பித்துக்கொள்கிறோம். பிறந்தநாள், திருமணநாள், அர்ப்பண நாள், சிறப்பு தியானம், ஆன்மிக வழிபாடு போன்ற நாள்களிலும் நிகழ்வுகளிலும் நம்மையே புதுப்பித்துக்கொள்கிறோம்.

இப்போது நமக்கு ஒரு ஆசை வரும். புதுப்பித்துக்கொள்வதற்குப் பதிலாக புதிதாகவே இருந்தால் எப்படி இருக்கும்? புதிய கணினி, புதிய திறன்பேசி, புதிய வாகனம், புதிய வீடு. புதிய பிறப்பு. மீண்டும் குழந்தையாகவே நாம் பிறந்து முதலிலிருந்து வாழ்க்கையைத் தொடங்கினால் எப்படி இருக்கும்? நாம் தவறவிட்டவற்றைப் பற்றிக்கொள்ளலாம். தவறுகளைத் திருத்திக்கொள்ளலாம். யாரையும் காயப்படுத்தாமல் வாழலாம்.

இரவில் இயேசுவைச் சந்திக்க வருகிறார் நிக்கதேம். அவரோடு உரையாடுகிற இயேசு, ‘மறுபடியும் பிறத்தல்’ பற்றிப் பேசுகிறார். ஆனால், இயேசுவைத் தவறாகப் புரிந்துகொள்கிற நிக்கதேம், ‘ஒருவர் தாயின் வயிற்றில் மீண்டும் சென்று பிறக்க முடியுமா?’ என்று சொல்வதோடு, ‘இது எப்படி நிகழும்?’ எனக் கேட்கிறார்.

‘காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால், அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் சொல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்.’

நேரடியாக இந்த உருவகம் இயேசுவுக்குத்தான் பொருந்துகிறது. அதாவது, உரையாடலின் தொடக்கத்தில், நிக்கதேம் இயேசுவிடம், ‘கடவுளிடமிருந்து வந்தாலன்றி,’ என்று இயேசு கடவுளிடமிருந்து வந்ததை அடிக்கோடிடுகின்றார். ஆனால், அவரின் வார்த்தைகளில் ஐயம் கொஞ்சம் இருக்கவே செய்கிறது. இந்த ஐயத்தைப் போக்கும் முகத்தான், இயேசு தான் காற்றைப் போல இருப்பதாகவும், தான் விரும்பியதைச் செய்கிறார் எனவும், தான் எங்கிருந்து வருகிறேன் என்பதும், தான் எங்கே செல்கிறேன் என்பது வேறு யாருக்கும் தெரியாது என்றும் சொல்கிறார்.

ஆனால், ‘தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும்’ என்று சொல்வதன் வழியாக, தன்னைத் தவிர மற்றவர்களும் தூய ஆவியால் பிறக்க முடியும் என்பதையும் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றார் இயேசு.

இயேசு கொணர்கின்ற மீட்பு, கட்டின்மை அல்லது சுதந்திரம் என்ற பொருளில் தரப்படுகிறது. காற்றின் தொடக்கம் யாருக்கும் தெரியாது. அதன் முடிவும் யாருக்கும் தெரியாது. அதை யாரும் வேலி போட்டு நிறுத்தவோ, அதன் போக்கை மாற்றவோ இயலாது.

இந்தக் கட்டின்மைதான் மீட்பு.

கட்டின்மையில் இருக்கிற ஒருவர் மறுபடியும் பிறந்தவராக இருக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், தொடக்கக் கிறிஸ்தவர்களின் புதிய வாழ்க்கை முறைபற்றி வாசிக்கக் கேட்டோம். ‘ஒரே உள்ளமும் ஒரே உயிரும் கொண்டவர்களாக’ வாழ்கிற தொடக்கக் கிறிஸ்தவர்கள், தங்களுடைய சொத்துகளும் பணமும் தங்களை நிர்ணயிப்பதில்லை என்ற நிலையில், அனைத்தையும் பொதுவில் வைக்கிறார்கள். ‘நான், எனது, எனக்கு’ என்னும் நிலையிலிருந்து அவர்கள் பெறுகிற விடுதலையே மீட்பு.

‘ஆண்டவர் ஆட்சி செய்கிறார்!’ என மொழிகிறது இன்றைய திருப்பாடல் (காண். 93). அவர் ஆட்சி செய்வதால், அவர் நம்மைக் காப்பாற்றுகிறார் (மீட்கிறார்!) என்பதை நினைவுகூர்ந்து வாழ்வோம்.

‘நானோ, ஆண்டவரை விழிப்புடன் நோக்கியிருப்பேன். என்னை மீட்கும் என் கடவுளை எதிர்நோக்கியிருப்பேன். என் கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள்வார்’ (மீக் 7:7). (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 68)

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment