இன்றைய இறைமொழி. திங்கள், 8 ஏப்ரல் 2024. இதோ வருகிறேன்!

இன்றைய இறைமொழி
திங்கள், 8 ஏப்ரல் 2024
கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு – பெருவிழா
எசாயா 7:10-14, 8:10. எபிரேயர் 10:4-10. லூக்கா 1:26-38

இதோ வருகிறேன்!

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா இந்த ஆண்டு புனித வாரத்தில் வந்ததால், அப்பெருவிழாவை இன்றைய நாளில் கொண்டாடுகிறோம்.

மனுக்குலத்தை மீட்க ‘இதோ வருகிறேன்!’ எனக் கடவுள் சொல்ல, அன்னை கன்னி மரியா, உம் திருவுளம் ஏற்குமாறு ‘இதோ வருகிறேன்!’ எனப் பதில்மொழி தருகிறார். இதுதான் இன்றைய பெருவிழாவின் மையச் செய்தி.

மங்கள வார்த்தை திருநாள் அல்லது கிறிஸ்து பிறப்பு முன்னறிவிப்பு மூன்று பின்புலங்களில் நிகழ்கிறது:

(அ) கடவுளின் முன்னெடுப்பு

கடவுள்தாமே தாம் விரும்பிய நேரத்தில் தாம் தேர்ந்துகொண்ட நபர்களைக் கொண்டு தம் மீட்புத் திட்டத்தை நிறைவேற்றுகிறார். கடவுளே இச்செயலைத் தொடங்குகிறார். கடவுளை இச்செயலை நிறைவுக்குக் கொண்டுவருகிறார். கடவுளின் அருட்பெருக்காலும் இரக்கத்தாலும் இது நடந்தேறுகிறது.

(ஆ) மனிதர்களின் ஒத்துழைப்பு

கடவுளோடு இணைந்து செயல்பட மனிதர்களின் ஒத்துழைப்பு அவர்களுக்குத் தேவைப்படுகிறது. மனிதர்களின் விடுதலையை அல்லது கட்டின்மையை மதிக்கிற கடவுள், அவர்களைத் தம் உடனுழைப்பாளர்களாக ஏற்றுக்கொள்ளுமாறு அவர்களை அழைக்கிறார். அவர்களும் கடவுளின் திட்டத்திற்கு நேர்முகமான பதிலிறுப்பு செய்கிறார்கள்.

(இ) கடவுள் நம்மோடு

கடவுள் நமக்காக என்ற நிலையில் மனிதர்களிடமிருந்து தூரமாக நிற்கிற கடவுள், ‘கடவுள் நம்மோடு’ என இறங்கி வருகிறார். இது முதல் கடவுளுடைய இருத்தல் நிலையிலும் மாற்றம் வருகிறது. அவர் மனிதர்களோடும் இயற்கையோடும் நெருக்கமாகிறார். அவரே அவர்களுடைய இயல்பையும் உருவையும் ஏற்கிறார்.

மூன்று பேர் ‘இதோ, வருகிறேன்!’ என்று சொல்வதை இன்றைய மூன்று வாசகங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

(அ) ஆகாசு

யூதாவை ஆட்சி செய்த அரசர் ஆகாசு தான் அனுபவித்த அரசியல்-சமய இக்கட்டான சூழலில், அவருடைய துணைக்கு வருகிற ஆண்டவராகிய கடவுள், ‘கன்னிப் பெண் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார்’ என்னும் அடையாளத்தை வழங்குகிறார். தன்னால் எல்லாமே இயலுமா என்ற ஐயத்தில் இருந்த ஆகாசு கடவுளின் துணையை வாக்குறுதியாகப் பெற்றுக்கொள்கிறார்.

(ஆ) இயேசு

இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்மொழிகிற எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், கிறிஸ்துவின் தனித்தன்மை எதில் அடங்கியுள்ளது என்பதை விளக்குகிறார். மற்ற தலைமைக்குருக்களுக்கும் அவர்கள் ஒப்புக்கொடுத்த பலிப்பொருளுக்கும் இடையே தூரம் இருந்தது. ஏனெனில், அவர்கள் தங்களுக்காக பலி ஒப்புக்கொடுத்தார்கள். ஆனால், இயேசுவோ தாமே பலி செலுத்துபவராகவும் பலிப்பொருளாகவும் இருக்கிறார். ‘உம் திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகிறேன்’ என்று தம்மையே சரணாதி ஆக்கி மனித உடல் ஏற்கிறார். அந்த மனித உடலையே அவர் பலியாகச் செலுத்துகிறார்.

(இ) மரியா

வானதூதர் கபரியேல் உரைத்த செய்தி கேட்கிற மரியா, ‘கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’ என்று தனக்குச் சொல்லப்பட்டவுடன், ‘நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ எனப் பதில் தருகிறார். மரியாவின் சொற்கள் இங்கே கவனிக்கத்தக்கவை. ‘உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்று செயப்பாட்டு வினையில் பதில் பகர்கிறார். ‘உம் சொற்படி நான் செய்கிறேன்’ என அவர் சொல்லவில்லை. பல நேரங்களில் கடவுளுக்காக நாம் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என நினைக்கிறோம். கடவுள் நம்மில் செயலாற்றுமாறு நாம் அனுமதித்தால் போதும் எனக் கற்றுத் தருகிறார் மரியா. ‘எனக்கு நிகழட்டும்’ என்பதில்தான் முழுமையான சராணகதி அமைந்துள்ளது.

பெருவிழா தருகிற செய்தி என்ன?

(அ) கடவுள் நம் மனித உரு ஏற்றதன் வழியாக நம் இயல்பையும் உருவையும் புனிதப்படுத்தியுள்ளார். மனித மாண்பும் இயற்கையின் மாண்பும் போற்றப்பட வேண்டும். பாலினம், வயது, பின்புலம், நிறம், சாதி என எந்த நிலையிலும் வேற்றுமை பாராட்டுவது கடவுளின் மனுவுருவாதலுக்கான எதிர்செயல்பாடு என்பதை உணர்வதோடு, கடவுளின் மனுவுருவாதலை அனைவரிலும் அனைத்திலும் கொண்டாடி மகிழ வேண்டும்.

(ஆ) வாழ்க்கையின் அழைப்புகள் நம்மை நோக்கி வந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு நொடியும், ‘இதோ வருகிறேன்!’ என அவற்றுக்குப் பதிலிறுப்பு செய்தவன் வழியாக வாழ்க்கையில் நாம் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறோம். ‘இதோ வருகிறேன்!’ என்று நாம் சொல்வதன் வழியாகவே நகரத் தொடங்குகிறோம். இதைச் சொல்லாத ஒவ்வொரு பொழுதும் நாம் தேக்கநிலையில் இருக்கிறோம். அல்லது பின்நோக்கிச் செல்கிறோம்.

(இ) அன்னை கன்னி மரியா போல, ‘உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்று வாழ்வின் எதார்த்தங்களுக்கான திறந்த மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும். ‘நான் எதையாவது செய்ய வேண்டும்’ என்ற எண்ணம் நம்மை பரபரப்பாக்கி, விரக்தியையும் சோர்வையும் உருவாக்குகிறது. ‘எனக்கு நிகழட்டும்’ என்ற சரணாகதி நமக்கு அமைதியைத் தருகிறது.

பெருவிழா வாழ்த்துகள்!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment