இன்றைய இறைமொழி
ஞாயிறு, 7 ஏப்ரல் 2024
பாஸ்கா காலம் 2-ஆம் ஞாயிறு
இறைஇரக்கத்தின் ஞாயிறு
திப 4:32-35. 1 யோவா 5:1-6. யோவா 20:19-31
என் ஆண்டவர், என் கடவுள்!
பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிற்றை இறைஇரக்கத்தின் ஞாயிறு எனக் கொண்டாடுகிறோம். ஒப்புரவு அருளடையாளத்திற்கான உறுதிவாக்கியம் – ‘எவருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ …’ – இன்றைய நற்செய்திப் பகுதியில் காணப்படுவதால், ஒப்புரவு அருளடையாளம் இறைவனின் இரக்கத்தை உணரும் தளமாக இருப்பதால், இந்த ஞாயிறு இறைஇரக்கத்தின் ஞாயிறு என அழைக்கப்படுகிறது.
‘இரக்கம்’ என்பதன் எபிரேயப் பதம் ‘ரஹேம்‘ – இந்தச் சொல் ‘வயிறு’ என்னும் சொல்லோவியத்தால் அடையாளப்படுத்துகிறது. ஒரு குழந்தை அதனுடைய தாயின் வயிற்றில் உணரும் பாதுகாப்பைப் போல, மனிதர்கள் கடவுளுடைய பராமரிப்பை உணர்கிறார்கள். மேலும், வயிறு அனைத்து உணர்வுகள் தங்கும் இடம், அதுவே ஒரு மனிதரின் ஆழமான இயல்பு என்றும் இஸ்ரயேல் மக்கள் கருதினார்கள். ‘இரக்கம்’ என்பதற்கு இணையான கிரேக்கச் சொல் ‘எலேயோஸ்‘. இச்சொல் ‘ஒலிவ எண்ணெய்’, ‘ஒலிவ எண்ணெய் தரும் இதம், நலம்’ ஆகியவற்றைக் குறிக்கிறது. மனிதர்களுக்கு இதமும் நலமும் தருவது இரக்கம்.
- மனித வலுவின்மையைத் தழுவுதல்
கடவுள் மனிதர்களின் வலுவின்மையைத் பொறுத்துக்கொண்டு தழுவுதலே இறைஇரக்கத்தின் முதல் பரிமாணம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் உயிர்ப்புத் தோற்றமளித்தல் நிகழ்வு ஒன்றை வாசிக்கிறோம். நிகழ்வு இரண்டு வாரங்களில் நடைபெறுகிறது. இயேசு உயிர்த்த அதே நாளில் ஒன்று, எட்டாம் நாளில் இன்னொன்று. முதல் நிகழ்வில் தோமா இல்லை. இரண்டாவது நிகழ்வில் தோமா இருக்கிறார். மகதலாவின் சொற்கள், வயலுக்குச் சென்ற இருவரின் சான்று, பத்துச் சீடர்களின் சான்று என எதுவும் தோமாவைத் தொடவில்லை. அவற்றை நம்புவதற்கு வலுவற்றவராக இருக்கிறார் தோமா. இரண்டாவதாக தோன்றுகிற ஆண்டவராகிய இயேசு தோமாவின் வலுவின்மையைத் தாமே தழுவிக்கொள்கிறார்.
- தீர்ப்பிடாத அன்பு
இரண்டாவது நிகழ்வில் தோன்றுகிற இயேசு, ‘என்னை நம்புகிறவர்கள் எனக்கு வலப்புறம் வாருங்கள்!,’ ‘நம்பாதவர்கள் இடப்புறம் நில்லுங்கள்!’ எனச் சொல்லி அவர்களைத் தீர்ப்பிடவில்லை. தம்மை நம்பியவர்கள் கண்டு அவர் வியக்கவில்லை. தம்மை நம்பாதவர்கள் கண்டு அவர் சோர்வடையவில்லை. எந்தவிதத் தீர்ப்பிடுதலும் இல்லாமல் சீடர்களை, குறிப்பாக தோமாவை, ஏற்றுக்கொள்கிறார் இயேசு. இது இறைஇரக்கதின் இரண்டாவது பரிமாணம்.
- இதயம் தொடும் நெருக்கம்
இயேசு சிலுவையில் அறையப்படும் நிகழ்வில், சிலர் அவரைத் தூரத்திலிருந்து பார்க்கிறார்கள். அவரை ஊடுருவக் குத்திய நூற்றுவர் தலைவர், அவரைச் சற்றே அருகில் வந்து பார்த்து, ‘இவர் உண்மையாகவே இறைமகன்’ எனச் சான்று பகர்கிறார். தம் கையை நீட்டி இயேசுவின் விலாவுக்குள் இட்டு அவரின் இதயம் தொட்ட தோமா, ‘நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்!’ எனச் சரணாகதி அடைகின்றார். மனுவுருவாதலில் மனித இயல்பை ஏற்கிறார் கடவுள். உயிர்ப்பு நிகழ்வில் மனிதர்கள் தங்கள் கைகளை நீட்டி தம் இதயத்தைத் தொடும் அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமாக வருகிறார் கடவுள்.
இரண்டாவது படைப்பு நிகழ்வில் ஆதாமின் விலா திறக்கிற கடவுள் புதிய படைப்பை உருவாக்குகிறார். உயிர்ப்பு நிகழ்வில் இயேசுவின் விலா திறக்கிற தோமா புதிய படைப்பாக உருவாகிறார். இறைவனின் இரக்கம் நம்மைப் புதிய படைப்பாக உருவாக்குகிறது.
இயேசுவின்மேல் நாம் கொள்ளும் நம்பிக்கை செயல்களாக வெளிப்பட வேண்டும் என உரைக்கிறது இன்றைய முதல் வாசகம். நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கை முறையும், செயல்களும் மாற்றம் பெறுகின்றன. தங்களையும் தங்களுடைய தேவைகளையும் மையமாக வைத்துச் சிந்தித்தவர்கள் மற்றவர்களையும் மற்றவர்களின் தேவைகளையும் முன்வைத்துச் சிந்திக்கிறார்கள். ‘இவருக்கு இதைச் செய்வதால் எனக்கு என்ன கிடைக்கும்’ என்று கேட்பதைவிட, ‘இவருக்கு இதைச் செய்யாவிட்டால் இவருக்கு என்ன ஆகும்’ எனக் கேட்கும் மனிதர் மற்றவர்மேல் இரக்கம் காட்டுகிறார்.
‘கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்’ என மொழிகிறது இரண்டாம் வாசகம். கடவுளின் இரக்கத்தைப் பெறுகிற நாமும் நம் இரக்கத்தால் உலகை வெல்கிறோம்.
இந்த ஞாயிறு நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன?
(அ) இறைவனின் இரக்கத்தை நாம் எப்படி அனுபவிக்கிறோம்? அதை அனுபவிப்பதற்கான சிறந்த தளமாக ஒப்புரவு அருளடையாளம் இருக்கிறது என்பதை நாம் உணர்கிறோமா? கடவுளோடு ஒப்புவரவாகி, அவருடைய இரக்கத்தை அனுபவிப்பதற்கான தடைகள் எவை? சோம்பல், தள்ளிப்போடுதல், கண்டுகொள்ளாத்தன்மை, தன்-நியாயப்படுத்துதல் போன்றவையா?
(ஆ) இறைவனின் இரக்கத்தை அனுபவிக்கிற நாம் அதை நம் வாழ்வியல் தளங்களில் எப்படி மற்றவர்களோடு பகிர்கிறோம்?
(இ) ‘என் ஆண்டவரே, என் கடவுளே!’ எனச் சரணாகதி ஆகும் நான், ஒவ்வொரு பொழுதும் அவருடைய எண்ணங்களை என் வாழ்வாக்க முயற்சி செய்கிறேனா?
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment