இன்றைய இறைமொழி
சனி, 6 ஏப்ரல் 2024
பாஸ்கா எண்கிழமை – சனி
திப 4:13-21. மாற் 16:9-15
அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள்!
இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர் நடந்த நிகழ்வுகளை மாற்கு நற்செய்தியாளர் சற்றே வித்தியாசமாகப் பதிவு செய்கிறார். ‘மகதலா மரியா இயேசுவை உயிரோடு கண்டதாகச் சொன்னதை அவர்கள் நம்பவில்லை,’ ‘வயல்வெளிக்கு நடந்து சென்றபோது (எம்மாவு!) இருவருக்கு இயேசு தோன்றியதை அவர்கள் அறிவித்தபோது அதையும் சீடர்கள் நம்பவில்லை.’ இறுதியில் இயேசு அவர்களுக்குத் தோன்றி அவர்களுடைய கடின உள்ளத்தைக் கடிந்துகொள்கிறார். ‘உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்’ எனக் கட்டளையிடுகிறார்.
மாற்கு நற்செய்தி முழுவதுமே சீடர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ளாதவர்களாகவும், புரிந்துகொள்ள இயலாதவர்களாகவும், தவறாகப் புரிந்துகொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். சீடர்கள் என்பதை நாம் இங்கே உருவகமாகவும் புரிந்துகொள்ளலாம். அதாவது, இயேசுவின் இறப்புக்குப் பின்னர் நிலவிய சூழலைத்தான் சீடர்களைப் பயன்படுத்தி மாற்கு உருவகமாகப் பதிவு செய்கிறார்.
சீடர்கள் அறிவித்தவுடன் அனைவரும் நம்பினார்கள், திருமுழுக்கு பெற்றார்கள் என அனைத்தும் எளிதாக நடந்தேறியதாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. மக்களின் கடின உள்ளத்தை உடைத்து இயேசுவை அதில் நுழைக்க சீடர்கள் பெரும்பாடுபட்டிருப்பார்கள். மற்றவர்கள் கடின உள்ளம் கொண்டிருந்தாலும் தொடர்ந்து நற்செய்தி அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பது இயேசுவின் கட்டளை. ‘நற்செய்தி’ என்னும் சொல்லால் தன் நற்செய்தியைத் தொடங்கி, அதே சொல்லால் நற்செய்தியை நிறைவுசெய்கிறார் மத்தேயு.
‘இயேசு கிறிஸ்துவே நற்செய்தி,’ ‘இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி,’ ‘இயேசு மொழிந்த நற்செய்தி’ என நாம் ‘நற்செய்தி’ என்னும் சொல்லைப் புரிந்துகொள்ளலாம்.
நற்செய்தி அறிவிக்கப்பட்டது என்பதை நாம் எப்படி உறுதிசெய்வது?
‘அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள்’ என்று எப்போது மற்றவர்கள் நம்மைப் பார்த்துச் சொல்கிறார்களோ, அப்போதுதான் நற்செய்தி முழுமையாக அறிவிக்கப்படுகிறது.
முதல் வாசகத்தில், தலைமைச்சங்கத்தின் விசாரணை தொடர்கிறது. பேதுரு மற்றும் யோவான் விசாரிக்கப்படுகிறார்கள். பேதுரு மட்டுமே பதில்கூறுகிறார். ‘அவர் கல்வியறிவற்றவர் … ஆனால் துணிவோடு பேசுகிறார்’ எனச் சொல்கிற தலைமைச்சங்கத்தார், ‘அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள்’ என்பதை உணர்ந்துகொள்கிறார்கள்.
இயேசுவைப் பற்றிய அறிவிப்பை அவர்கள் தடை செய்தபோது சீடர்கள் மறுபடியும் துணிவுடன், ‘நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க எங்களால் முடியாது’ என்கிறார்கள்.
நம்பிக்கைக் குறைவோடு இருந்த சீடர்கள், நம்பிக்கை பெற்றதோடு, அந்த நம்பிக்கையைத் துணிவுடன் அறிவிக்கவும் செய்கிறார்கள்.
இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்லும் செய்தி என்ன?
உயிர்த்த இயேசுவை எதிர்கொள்கிற ஒருவர் முழுமையான மாற்றம் பெறுகிறார். முந்தைய நிலை மறைந்து புதிய நிலை பிறக்கிறது. அவருடைய சொற்களும் செயல்களும் அவர் பெற்றுள்ள இறையனுபவத்தை மற்றவர்களுக்குச் சுட்டிக்காட்டுகின்றன. அவர் முழுமையான விடுதலையும் கட்டின்மையும் பெறுகிறார். இதுவே உயிர்ப்பு அனுபவம்.
‘ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது. ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது’ எனப் பாடுகிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 118).
பூட்டியிருக்கும் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் இயேசு நுழைகிறார். நம் கடின உள்ளத்தைக் கடிந்துகொள்கிறார். ‘நற்செய்தியைப் பறைசாற்று!’ எனக் கட்டளையிட்டு மறைகிறார். அவருடைய உடனிருப்பு எவ்வகையான ஆற்றலையும் எதிர்த்து நிற்கும் துணிவைத் தருகிறது.
இறந்த அவர் உயிர்த்ததுபோல, தயக்கம், பயம் போன்றவற்றிலிருந்து நாமும் அன்றாடம் உயிர்க்கிறோம்.
‘நீ இயேசுவோடு இருந்தாய்!’ என்று பணிப்பெண் சொன்னபோது அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கிய பேதுரு, ‘அவர் இயேசுவோடு இருந்தவர்’ என்று தான் தலைமைச்சங்கத்தாரால் அறிந்துகொள்ளப்பட்டதை நினைத்து பெருமிதம் கொள்கிறார். நம் தயக்கத்தையே பெருமிதமாக மாற்றக்கூடியவர் நம் கடவுள்.
நிற்க.
‘நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார். இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம்.’ (1 பேதுரு 1:3).(யூபிலி கி.பி. 2025, துணுக்கு 67)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment