இன்றைய இறைமொழி. வியாழன், 4 ஏப்ரல் 2024. நகர்தலின் அவசியம்!

இன்றைய இறைமொழி
வியாழன், 4 ஏப்ரல் 2024
பாஸ்கா எண்கிழமை – வியாழன்
திப 3:11-26. லூக் 24:35-48

நகர்தலின் அவசியம்

குழந்தைகளாக நாம் கொண்டிருந்த, வளர வளர நாம் இழந்த ஒரு பண்பு நகர்தல். சிறு குழந்தைகளை யாரும் தங்கள் கட்டுக்குள் வைக்க முடிவதில்லை. அவர்கள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். கையை இறுகப் பிடித்தாலும் நழுவி ஓடுகிற அந்த நகர்தல் நம் மனித வாழ்வுக்கு அவசியம்.

‘இயேசு இறந்துவிட்டார், எல்லாம் முடிந்துவிட்டது’ என்று தேங்கி நின்ற தம் சீடர்களுக்குத் தோன்றுகிற இயேசு, தாம் உயிர்த்துவிட்டதை அவர்களுக்கு அறிவிப்பதோடு, அவர்கள் அடுத்துச் செய்ய வேண்டியவற்றையும் அவர்களுக்குக் கட்டளையிடுகிறார். ‘நீங்கள் ஏன் ஐயம் கொள்கிறீர்கள்? நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்?’ எனக் கேட்கிற அவர், அவர்கள் முன்பாக வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவர்களிடமிருந்து வாங்கி உண்கிறார் – என்னதான் தங்கள் தலைவர் இறந்துவிட்ட சோகம் இருந்தாலும், சீடர்கள் மீன் பொறித்துத்தான் வைத்துள்ளார்கள். இந்த மனப்பாங்கைத்தான் ஆண்டவர் விரும்புகிறார் – உண்ணுதல் என்பது விவிலியத்தில் தொடர்ந்து பயணித்தலுக்கான அடையாளம். விலக்கப்பட்ட கனியை உண்டபின்னர்தான் முதற்பெற்றோரின் வாழ்வு நகரத் தொடங்குகிறது. அவர்கள் அக்கனியை உண்ணவில்லை என்றால், இன்று நாம் ஒரு தோட்டதிற்குள்ளேயே திரிந்துகொண்டிருப்போம்! சோர்ந்து போன எலியாவுக்கு உணவு தருகிற ஆண்டவராகிய கடவுள், ‘எழுந்து உண். நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்’ எனக் கட்டளையிடுகிறார் (காண். 1 அர 19:7).

தம் சீடர்களின் மனக் கண்களைத் திறந்து அவர்கள் மறைநூலைப் புரிந்துகொள்ளத் தூண்டுகிற இயேசு, ‘மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் உயிர்த்தெழ வேண்டும் என்றும், பாவ மன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்’ என அவர்களை நகர்த்துகிறார்.

எங்கே எல்லாம் முடிந்தது என நினைத்தார்களோ, அங்கேயே – எருசலேமில் – தங்கள் பணியை அவர்கள் தொடங்க வேண்டும் எனக் கட்டளையிடுகிறார்.

இயேசுவின் சீடர்களில் முதல்வரான சீமோன் பேதுரு இயேசுவின் சொற்களுக்குச் சான்று பகர்வதை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம். கால் ஊனமுற்ற நபருக்கு நலம் தரும் நிகழ்வு மக்கள் நடுவே வியப்பை ஏற்படுத்துகிறது. இந்த வியப்பை தயார்நிலையாகக் காண்கிற பேதுரு, ‘வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்’ என அவர்களுடைய தவற்றைச் சுட்டிக்காட்டினாலும், தொடர்ந்து, ‘நீங்கள் உங்கள் அறியாமையால்தான் செய்தீர்கள் … மனம் மாறுங்கள்’ என நம்பிக்கையை நோக்கி அவர்களை நகர்த்துகிறார் பேதுரு.

இன்றைய பதிலுரைப்பாடலில் (காண். திபா 8) மனிதப் படைப்பின் மேன்மையை எண்ணிப்பார்க்கிற ஆசிரியர், மனிதர்கள் அனைத்துப் படைப்புப் பொருள்களையும் விட மேலானவர்களாக இருக்கிறார்கள் என மொழிகிறார். மற்றப் படைப்புப் பொருள்கள் தங்கள் உந்துணர்வைத் தாண்டி ஒன்றும் செய்ய இயலாது. ஆனால், மனிதர்கள் தங்களுடைய விருப்புரிமையால் தங்கள் வாழ்வை மாற்றிக்கொள்ள இயலும்.

இறப்பு, இழப்பு, நோய், மற்றவர்களின் கண்டுகொள்ளாத்தன்மை, சோர்வு, முதுமை போன்றவை நம்மை உறையச் செய்யும்போது, இயேசு உண்ட பொறித்த மீன் துண்டை நினைவில் கொள்வோம். எழுந்து உண்போம். தொடர்ந்து நகர்வோம். சைக்கிள் ஓட்டுவதை நினைத்துக்கொள்வோம். ஓட்டிக்கொண்டே நகரும் வரை நாம் விழுவதில்லை. நகரும் வரையே வாழ்க்கை!

நிற்க.

‘ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது’ (1 கொரி 13:13). (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 65)

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment