இன்றைய இறைமொழி
புதன், 3 ஏப்ரல் 2024
பாஸ்கா எண்கிழமை – புதன்
திப 3:1-10. லூக் 24:13-35
ஆண்டவரின் உடனிருப்பில்
- ‘கால்கள் நடந்தன’
பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவருக்கு எருசலேமின் அழகு வாயிலுக்கு அருகே, இயேசுவின் பெயரால் நலம் தருகிறார்கள் பேதுருவும் யோவானும். இயேசுவுக்குப் பின்னர் திருத்தூதர்கள் பணியைத் தொடங்குகிறார்கள். இயேசுவைப் போல அவர்களும் வல்ல செயல்கள் செய்கிறார்கள். இயேசுவின் பெயரால் வல்ல செயல் நடந்தேறுகிறது. எருசலேம் ஆலயத்தில் ஆண்டவராகிய கடவுள் ‘யாவே’யின் பெயர் குடியிருப்பதாக இஸ்ரயேல் மக்கள் நம்பினார்கள். புதிய இஸ்ரயேல் மக்களாகிய நம்பிக்கையாளர்களுக்கு இயேசுவின் பெயரே நலமும் வாழ்வும் தரும் பெயராக மாறுகிறது. ஆள்வோரின் பார்வையில் எருசலேமில் தோல்வியாக மரித்த இயேசு, அதே எருசலேமில் சீடர்கள் வழியாக வல்ல செயல்கள் நிகழ்த்துகிறார்.
- ‘ஆண்டவரைத் தேடுங்கள்’
ஆண்டவருக்கு நம்மை எந்நாளும் நன்றி செலுத்துவதற்கு அழைக்கிற திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 105), அவரையே நாம் தேட வேண்டும் என அறிவுறுத்துகிறார். கால் ஊனமுற்ற நபர் தனக்கு வெள்ளியும் பொன்னும் எனக் கிடைக்கும் எனத் தேடுகிறார். ஆனால், அவற்றைவிட மேலான உடல்நலத்தைப் பெறுகிறார். தங்களோடு நடந்த உடன் பயணியில் இயேசுவைக் கண்டுகொள்கிறார்கள் எம்மாவு சீடர்கள்.
- ‘கண்கள் திறந்தன’
சோகத்தாலும், வாட்டத்தாலும் மூடியிருந்த எம்மாவு சீடர்களின் கண்கள் திடீரெனத் திறக்க, அவர்கள் இயேசுவைக் கண்டுகொள்கிறார்கள். இயேசுவைக் கண்டுகொண்ட அந்த நொடி அவர்களுடைய வாழ்வின் திசை மாறுகிறது. எருசலேமை நீங்கிச் சென்றவர்கள் எருசலேமை நோக்கிப் புறப்படுகிறார்கள். ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு இருந்தவர்கள் அனைவருக்குமாய் நற்செய்தியை அறிவிக்கிறார்கள். நம் மலைப்பு அனைத்தையும் திகைப்பாக மாற்றக் கூடியவர் நம் ஆண்டவர். நம் ஆண்டவரின் உடனிருப்பில் நம் கண்கள் திறக்கின்றன, கால்கள் நடக்கின்றன, வாய் அவருடைய புகழ்ச்சியை எடுத்துரைக்கிறது.
நிற்க.
‘எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள். துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள். இறைவேண்டலில் நிலைத்திருங்கள்.’ (உரோ 12:12). (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 64)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment