இன்றைய இறைமொழி. செவ்வாய், 2 ஏப்ரல் 2024. கடவுளை நோக்கி

இன்றைய இறைமொழி
செவ்வாய், 2 ஏப்ரல் 2024
பாஸ்கா எண்கிழமை – செவ்வாய்
திப 2:36-41. யோவா 20:11-18

கடவுளை நோக்கி

  1. ‘இயேசுவின் பெயரால் திருமுழுக்கு’

இயேசுவைக் கொன்றதால் அவருடைய பெயரை அழித்துவிடலாம் என நினைத்த எருசலேம் நகரத்தார் நடுவே, இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கிறார் பேதுரு. ‘நீங்கள் சிலுவையில் அறைந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்’ என்னும் பேதுருவின் செய்திக்குப் பதிலிறுப்பு செய்கிற மக்கள் ஏறக்குறைய மூவாயிரம் பேர் திருமுழுக்கு பெறுகிறார்கள். ‘சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்னும் தயார் நிலை நமக்கான சவால்.

  1. ‘நாம் ஆண்டவரையே நம்பியிருக்கிறோம்’

ஆண்டவருடைய நம்பகத்தன்மை, பேரன்பு, பராமரிப்பு ஆகியவற்றை எடுத்துரைக்கிற திபா 33, ஆண்டவரையே நம்பியிருக்க நம்மை அழைக்கிறது.

  1. ‘கல்லறையை நோக்கியவர் கடவுளை நோக்குகிறார்’

கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருக்கிற மகதலா மரியா தன் கடவுளைக் கண்டுகொள்கிறார். ‘மரியா, தன் திசையைத் திருப்பவில்லை. மாறாக, தன் இதயத்தைத் திருப்புகிறாள். நம் திசையைத் திருப்புவதால் அல்ல, இதயத்தைத் திருப்புவதால்தான் ஆண்டவரைக் கண்டுகொள்கிறோம்!’ என்கிறார் புனித அகுஸ்தினார். மரியா இயேசுவைக் கண்டுகொள்வது நான்கு நிலைகளில் நடக்கிறது: முதலில், அவர் இயேசுவைக் காணவில்லை. இரண்டாவதாக, அவர் இயேசுவைத் தோட்டக்காரர் போலக் காண்கின்றார். மூன்றாவதாக, அவர் அவரை ரபூனி (‘போதகர்,’ ‘என் போதகர்’) எனக் காண்கின்றார்.இறுதியாக, அவர் அவரை ஆண்டவர் எனக் காண்கின்றார். யோவான் நற்செய்தியில், ‘காணுதல்’ என்பது ‘நம்புதலுக்கான’ தொடக்கநிலை. கிரேக்கர் சிலர் இயேசுவைக் காண விரும்புகிறார்கள். கண்டவுடன் நம்பிக்கை கொள்கிறார்கள். அன்புச் சீடர் கல்லறையைக் காண்கிறார், நம்புகிறார். நம் முகத்தின் திசையை அல்ல, இதயத்தின் திசையைத் திருப்பிக் கடவுளைக் காண்போம்.

நிற்க.

‘எதிர்நோக்கைத் தரும் கடவுள், நம்பிக்கையால் உண்டாகும் பெருமகிழ்ச்சியாலும் அமைதியாலும் உங்களை நிரப்புவாராக! அவ்வாறு தூய ஆவியின் வல்லமையால் நீங்கள் இன்னும் மிகுதியான எதிர்நோக்குடன் வாழ அருள்புரிவாராக!’ (உரோ 15:13). (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 63)

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment