இன்றைய இறைமொழி. சனி, 30 மார்ச் 2024. கல்லை நமக்கு யார் புரட்டுவார்?

இன்றைய இறைமொழி
சனி, 30 மார்ச் 2024
ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா – நள்ளிரவுத் திருப்பலி
தொநூ 1:1-2:2 விப 14:15-15:1 எசே 36:16-17,18-28 உரோ 6:3-11 மாற் 16:1-7

கல்லை நமக்கு யார் புரட்டுவார்?

திருவிழிப்புகளின் தாய் என அழைக்கப்படுகிற பாஸ்கா திருவிழிப்பு நிகழ்வில் பங்கேற்க நாம் கூடி வந்துள்ளோம்.

‘கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்’ (காண். 1 கொரி 15:14) என்ற புனித பவுலின் கூற்றுப்படி, கிறிஸ்துவின் உயிர்ப்பே நம் நம்பிக்கையின் அடித்தளமாக இருக்கிறது. இந்த உயிர்ப்பை ‘வெறும் வதந்தி’ என்று இயேசுவின் எதிரிகள் பரப்பி விட்டதாகவும், அது இந்நாள் வரை யூதரிடையே பரவி இருப்பதாகவும் பதிவு செய்கின்றார் மத்தேயு (மத் 28:15).

இயேசுவின் உயிர்ப்பு நம் நம்பிக்கையின் அடித்தளமா? அல்லது ஒரு வதந்தியா?

இன்று நாம் எங்கு பார்த்தாலும் வைத்திருக்கும் கண்காணிக்கும் சிசிடிவி காமராக்கள் அன்று இயேசுவின் கல்லறைக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்தால் இயேசுவின் உயிர்ப்பை நாம் எளிதாக அறிந்திருக்கலாமே என்று சொல்கிறது நம் மூளை.

ஆனால், மூளையையும் தாண்டிய விடயங்களை இதயம் நம்புகிறது என்ற கூற்றுக்கிணங்க உயிர்ப்பு என்னும் உண்மையை நம் இதயம் மூன்று நிலைகளில் நம்புகிறது:

ஒன்று, உயிர்ப்பு கதையாடல்கள். இயேசுவின் உயிர்ப்பை ஒட்டி நிகழ்ந்த கதையாடல்கள் – மகதலா மரியா, தோமா, சீடர்கள், பேதுரு, எம்மாவு போன்ற கதையாடல்கள் – இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்றாக அமைகின்றன. அவை இயேசு உயிர்த்தார் என்பதைச் சொல்வதோடல்லாமல், இயேசு உயிர்த்தபோது அவர் எத்தகைய உடலைக் கொண்டிருந்தார், அந்த உடல் எப்படி பூட்டிய கதவுகளை ஊடுருவியது, அந்த உடல் எப்படி வழி நடந்தது, மீன் சாப்பிட்டது, தழுவிக்கொள்ளும் நிலையிலும் விரலை இடும் நிலையிலும் இருந்தது என்று பதிவு செய்கின்றன.

இரண்டு, அறிக்கை கதையாடல்கள். தொடக்கத் திருஅவையில், திருமுழுக்கு பெறுகின்ற ஒவ்வொருவரும் இயேசுவின் உயிர்ப்பு பற்றிய நம்பிக்கையை அறிக்கை செய்தனர். இப்படிப்பட்ட நம்பிக்கை அறிக்கையை புனித பவுல் எழுதுகின்றார்: ‘நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக்கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறு மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்’ (1 கொரி 15:3-4). இயேசுவின் உயிர்ப்பு என்பது ஓர் அறிக்கைக் கோட்பாடாகத் தொடக்கத் திருஅவையில் இருந்தது இயேசுவின் உயிர்ப்புக்கு இரண்டாவது சான்றாக அமைகின்றது.

மூன்று, மாற்றக் கதையாடல்கள். அதாவது, இயேசுவின் திருத்தூதர்கள் ஒரு மாபெரும் மாற்றத்திற்கு ஆளாகிறார்கள். யூதர்களுக்கு அஞ்சி கதவுகளை அடைத்துக்கொண்டிருந்தவர்கள், தலைமைச்சங்கத்தையும் எதிர்த்து நிற்கும் அளவுக்குத் துணிவு பெறுகின்றனர். பெரிய மக்கள் கூட்டத்திற்கு கற்பிக்கின்ற அவர்கள், ‘நீங்கள் நாசரேத்து இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால், கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் சாட்சிகள்’ என சான்று பகர்கின்றனர். ‘உயிர்ப்புக்குப் பின் தோன்றிய இயேசுவைக் கண்ட திருத்தூதர்கள் புதிய மனிதர்களாக மாறுகின்றர். பயம், தயக்கம், கோபம் மறைந்து, நம்பிக்கை, துணிச்சல், மற்றும் மன்னிப்பு அவர்கள் உள்ளங்களில் பிறப்பதால் கிறிஸ்து திருத்தூதர்களின் உள்ளங்களில் உயிர்க்கிறார்’ என்று கூறுகின்றார் இறையியலாளர் ஷில்லிபெக்ஸ். திருத்தூதர்களின் வாழ்வியல் மாற்றமே இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்றாக அமைகின்றது.

இத்திருவிழிப்புத் திருப்பலியில் நாம் வாசிக்கக் கேட்ட முதல் வாசகங்கள், குளிர்காலத்திலிருந்து வசந்தகாலத்திற்கு பூவுலகும் மானுடமும் கடந்து வந்த பாதையை நம் கண்முன் கொண்டு வந்தன. முதல் வாசகத்தில் (தொநூ), ‘இல்லாமையிலிருந்து இருத்தலுக்கும், குழப்பத்திலிருந்து தெளிவுக்கும், இருளிலிருந்து ஒளிக்கும்’ உலகம் கடந்து வருகிறது. இரண்டாம் வாசகத்தில் (விப) ‘எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கும், பாரவோனை அரசனாகக் கொண்டதிலிருந்து யாவேயை அரசராகக் கொள்வதற்கும், வாக்குறுதிக்கான காத்திருத்தலிலிருந்து வாக்குறுதி நிறைவேறியதற்கும்’ இஸ்ரயேல் மக்கள் கடந்து வருகின்றனர். மூன்றாம் வாசகத்தில் (எசே) ‘உலர்ந்த நிலையிலிருந்து உயிர்பெற்ற நிலைக்கும், பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து சொந்த நாட்டிற்கும்’ திரும்புகின்றனர் இஸ்ரயேல் மக்கள். இது அவர்களுடைய இரண்டாம் மீட்பு. முந்தைய நிலை மறைந்து புதிய நிலை மலர்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பெண்கள் சிலர் இயேசுவின் கல்லறைக்கு வருகின்றனர். இறந்த உடலுக்கு மூன்று நாள்கள் நறுமணத் தைலம் பூசுவது அவர்களுடைய அடக்கச் சடங்கின் ஒரு பகுதியாக இருந்தது. ‘வாரத்தின் முதல் நாள் கதிரவன் எழும் வேளையில்’ என்னும் சொல்லாடல் வழியாக இருண்டு நேர்முகமான காரணிகளைச் சுட்டுகிறார் மாற்கு: ‘புதிய வாரம் தொடங்குகிறது, புதிய ஒளி எழுகின்றது.’ பழைய வாரத்தின் நிகழ்வுகள் மறைந்துவிட்டன, பழைய இருள் மறைந்துவிட்டது. இருந்தாலும் அந்தப் பெண்களின் உள்ளத்தில் ஒரு கலக்கம்: ‘கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?’

நம் வாழ்விலும் ஏதோ ஒரு கல் நம்மை அடைத்திருப்பதாக நாம் அடிக்கடி உணர்ந்து, அந்தக் கல்லை அகற்றுபவர் யார் எனப் புலம்புகின்றோம். முதல் வாசகத்தில், இருள் ஒரு கல் போல இருக்கிறது. இரண்டாம் வாசகத்தில், எகிப்தின் அடிமைத்தனம் கல் போல இருக்கிறது. மூன்றாம் வாசகத்தில், பாபிலோனிய நாடுகடத்துதல் கல் போல இருக்கின்றது. ஆனால், ‘கல்லை நமக்காக யார் புரட்டுவார்?’ என்று கலங்கத் தேவையில்லை. கற்கள் புரட்டப்படும் நாள்தான் ஈஸ்டர். மிகவும் கடினமான கற்கள் என நினைக்கும் இறப்பு, பாவம், பயம், மற்றும் உலகியல் பேரார்வம் அனைத்தையும் கடவுள் மிக எளிதாகப் புரட்டிவிடுகின்றார். மானுட வரலாறு ஒரு கல் முன் பயந்து நிற்பதில்லை. ஏனெனில், அது வாழ்வின் கல்லான (காண். 1 பேது 2:4) கிறிஸ்துவின்மேல் கட்டப்பட்டுள்ளது. நாம் ஒவ்வொருவரும் இன்று இரவு உயிர்த்த ஆண்டவரைக் காண வேண்டும் – தனித்தனியாக. முதலில், நான் அகற்ற விரும்பும் அல்லது அகற்ற வேண்டிய கல் எது என்று அந்தக் கல்லுக்குப் பெயரிடுவோம்.

நம் நம்பிக்கையைத் தடுக்கின்ற கல் ஊக்கமின்மைதான். வாழ்வின் நிகழ்வுகள் நம் கைகளை மீறிச் செல்லும்போது, எல்லாம் நம்மை விட்டுப் போய்விட்டது போலவும், இறப்பு சூழ்ந்துவிட்டது போலவும் உணர்கின்றோம். நம்மேல் நாமே கற்களை அடுக்கிக்கொண்டு நம்பிக்கையைப் புதைத்துவிடுகிறோம். நம்மை எதிர்கொள்கிற தூதர் நம் தேடுபொருளை அறிந்தவராக இருக்கிறார்: சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்தூர் இயேசு. சிலுவையில் அறையப்பட்டவரை நாம் தேடுகிறோமா? நம் இதயத்தை மூடிவிடும் இன்னொரு கல் பாவம். பாவம் நம்மை மயக்குகிறது. எளிதான மற்றும் வேகமான வழியில் நமக்கு இன்பத்தையும், வெற்றியையும், வளமையையும் வழங்குகிறது. ஆனால், சற்று நேரத்தில் தனிமையையும் சாவையும் விட்டுச் செல்கின்றது. பாவம் இறப்பின் நடுவே வாழ்வைத் தேடுகிறது. தேடிச் சோர்ந்து போய், நம்மைச் சோர்வுக்கு ஆளாக்குகிறது. இன்று ஏன் பாவத்தை நாம் விடக் கூடாது? பாவம் என்னும் கல்லை இன்னும் நாம் ஏன் நம் இதயக் கதவுக்கு முன் வைக்க வேண்டும்?

கல்லறைக்குச் செல்கின்ற பெண்கள் திகிலுறுகிறார்கள். அச்சத்தின் பெரிய நிலைதான் திகில்.

‘உங்களுக்கு முன்பாக கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்’ என்று சொல்கின்றார் வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர்.

கல்லறைக்குள் குனிந்து பார்க்கும் நம்மிடமும் இன்று தூதர் பேசுகின்றார். சில நேரங்களில் நாமும் இத்தூதர் போல மற்றவர்களுக்கு நம்பிக்கையின் செய்தியைத் தருகின்றோம்.

‘கலிலேயாவுக்குப் போங்கள்!’ என அனுப்புகின்றார் தூதர்.

கலிலேயா என்பது எருசலேமின் எதிர்ப்பதம். கலிலேயா இயேசுவின் பணித் தொடக்கம். அங்கேதான் திருத்தூதர்களை இயேசு அழைத்தார். தங்கள் தலைவரின் இறுதியைக் கண்டு பயந்து போய்க் கிடந்த திருத்தூதர்களை மீண்டும் தொடக்கத்துக்கு அழைத்துச் செல்கின்றார் இயேசு.

ஆனால், யோவான் நற்செய்தியாளர் வேறொரு நிலையில் இதைப் பதிவு செய்கின்றார். மகதலா மரியா இயேசுவைத் தோட்டக்காரர் என நினைத்து அவரோடு உரையாடிக் கொண்டிருக்கின்றார். ‘மரியா!’ என்று இயேசு அழைத்தவுடன், ‘இரபூணி’ எனத் திரும்புகின்றார். அவர் ஏற்கெனவே இயேசுவைப் பார்த்துக்கொண்டே தானே இருக்கின்றார். பின் ஏன் அவர் திரும்ப வேண்டும்? ‘தன் திசையை அல்ல, தன் இதயத்தை அவரை நோக்கித் திருப்பினாள்’ என இதற்கு விளக்கம் தருகின்றார் புனித அகுஸ்தினார். நம் இதயத்தை நாம் அவரை நோக்கித் திருப்பினால், நாம் வாழ்க்கையை கலிலேயா நோக்கித் திருப்ப முடியும்.

நாம் பல நேரங்களில் நம் கல்லறையின் திசை நோக்கியே செல்கின்றோம். வாழ்பவரை இறந்தோரிடம் தேடுகிறோம். அல்லது இயேசுவைக் கண்டாலும் நாம் இறந்தவற்றின் பக்கமே நம் இதயத்தைத் திருப்பிக் கொள்கின்றோம். ஏனெனில், பழைய பாதை நமக்கு இனிக்கிறது, இன்பம் தருகிறது. அல்லது நம் குற்றவுணர்வு, காயம், அதிருப்தி ஆகியவற்றைத் தழுவிக்கொள்கிறோம். அவை நமக்கு பாதுகாப்பு வளையும் என உணர்கின்றோம்.

தனிப்பட்ட மனிதர்களும், ஒட்டுமொத்த மனுக்குலமும் தங்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்த கதையாடல்களைத்தான் விவிலியம் தாங்கி நிற்கிறது. எல்லாம் முடிந்தது என்ற கல்லறையிலிருந்து இனிதான் எல்லாம் தொடக்கம் என்ற வாழ்வுக்கு நகர்கின்றனர் நம் முதற்பெற்றோர். நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு நகர்கின்றார் ஆபிரகாம். ஏமாற்றுகின்ற நிலையிலிருந்து பிளவுபடாத வாழ்வுக்கு மாறுகின்றார் யாக்கோபு. பெலிஸ்தியச் சிறையில் தள்ளப்பட்ட சிம்சோனின் தலைமுடி முளைக்க ஆரம்பிக்கின்றது. தாவீது தன் பிரமாணிக்கமின்மையிலிருந்து உடன்படிக்கை அன்புக்கு கடவுளால் நகர்த்தப்படுகின்றார். திருத்தூதர்கள், சக்கேயு, பவுல் போன்றோர் தங்கள் வாழ்வுப் பாதையை மாற்றுகின்றனர்.

உயிர்ப்பு என்பது நம் வாழ்வியல் அனுபவமாக மாறாத வரை அது ஒரு வதந்தியே. உயிர்ப்பின் ஆற்றல் நம்மைப் புதிய மனிதர்களாக்கும். துன்பங்களை எதிர்கொள்ள நமக்குக் கற்றுக்கொடுக்கும். ஆகையால்தான் புனித பவுல், ‘கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் விரும்புகிறேன்’ (பிலி 3:10) என்கிறார்.

‘மேலும் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் நான் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்’ (காண். திபா 23:4) என்கிறார் தாவீது. அவரின் உடனிருப்பில் நமக்கு எல்லா நாளும் உயிர்ப்பு நாளே.

உயிர்ப்புப் பெருநாள் வாழ்த்துகள்!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment