இன்றைய இறைமொழி. புதன், 27 மார்ச் 2024. ரபி நானோ?

இன்றைய இறைமொழி
புதன், 27 மார்ச் 2024
புனித வாரத்தின் புதன்
எசாயா 50:4-9. யோவான் 26:14-25

ரபி நானோ?

இன்றைய நற்செய்தி வாசகம் யூதாசு இஸ்காரியோத்து என்னும் கதைமாந்தரை மையப்படுத்தியதாக இருக்கிறது. இவருடைய பெயரின் பொருள் என்ன? ‘யூதாசு’ அல்லது ‘யூதா’ என்பது இவருடைய பெயர். ‘இஸ்காரியோத்து’ என்பது மற்ற யூதாவிடமிருந்து இவரைப் பிரித்துக் காட்டும் அடைமொழி. ‘இஸ்காரியோத்து’ என்னும் சொல்லுக்கு பின்வரும் பொருள்கள் உண்டு: (அ) ‘கெரியோத்தின் நபர்’ – கெரியோத்து என்னும் இடத்தைச் சார்ந்தவர். (ஆ) ‘சிக்காரியுஸ் நபர்’ – எப்போதும் வாளேந்தி நிற்கிற ‘தீவிரவாதிகள்’ (உரோமைக்கு எதிரான) அமைப்பைச் சார்ந்தவர். (இ) பொய்யர் அல்லது போலியானவர். (ஈ) விடுவிப்பவர். (உ) நெருக்கப்பட்டவர்.

யூதாசு ஏன் இயேசுவைக் காட்டிக்கொடுத்தார் என்பதற்கு வரலாற்றில் மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன:

ஒன்று, அவர் 30 வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தார். அதாவது, தன் பணத் தேவைக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தார். இக்கூற்றுக்கு எதிராக வைக்கப்படும் காரணம்: அவர் பணத்துக்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்திருந்தால், இயேசு துன்புறுத்தப்படுதல் கண்டு அவர் காசுகளைத் தலைமைக் குருக்களிடம் திருப்பித் தரத் தேவையில்லை. தான் பணத்தைப் பெற்றுவிட்ட மகிழ்ச்சியில் அவர் தன் வாழ்க்கையை நடத்தியிருக்கலாம்.

இரண்டு, இயேசு ஓர் அரசியல் மெசியாவாக உருவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் யூதாசு. ஆனால், இயேசு தன்னையே ஓர் ஆன்மிக மெசியாவாக முன்வைக்கத் தொடங்கியதால் எதிர்பார்ப்பு ஏமாற்றமாக, ஏமாற்றம் கோபமாக மாற அவர் இயேசுவைக் காட்டிக்கொடுத்தார். இக்கூற்றும் ஏற்புடையது அல்ல. ஏனெனில், இயேசுவின் மேல் அவர் கோபம் கொண்டதாகவோ, அல்லது அவர் இயேசுவைத் தவறாகப் புரிந்துகொண்டதாகவோ நற்செய்தி நூல்களில் எந்தப் பதிவும் இல்லை.

மூன்று, இயேசு தம் மெசியா பணியேற்பில் தாமதிப்பதைக் காண்கின்ற யூதாசு, இயேசுவின் பணியைத் துரிதப்படுத்துவதற்காக அவரைக் காட்டிக்கொடுத்தார். இக்கூற்றே இன்று அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்கின்றது. ஏனெனில், இயேசுவின் பணியின்போது அவரைச் சுற்றியிருக்கின்ற கூட்டத்தைப் பார்க்கின்ற யூதாசு, இயேசு சென்றவிடமெல்லாம் நன்மை செய்துகொண்டே செல்வதைக் காண்கின்ற யூதாசு, இயேசுவுக்கு மக்களுடைய ஆதரவும் உடனிருப்பும் இருக்கும் என்று தவறாகக் கணக்கிட்டுவிடுகின்றார். ‘ஓசன்னா!’ பாடிய கூட்டத்தைக் கண்டவுடன் இன்னும் யூதாசுக்கு உற்சாகம் கூடியிருக்கும். ஆனால், ‘ஓசன்னா!’ பாடிய கூட்டம் ‘சிலுவையில் அறையும்!’ என்று பேசத் தொடங்கியடவுடன், யூதாசைப் பதற்றம் பற்றிக்கொள்கின்றது. தன் கணக்கு தவறிவிட்டதாக உணர்கின்றார். தான் தொடங்கிய கொடுமையைத் தானே முடித்து வைக்க நினைத்து தலைமைக் குருக்களிடம் செல்கின்றார். சென்று முறையிடுகின்றார். பெற்ற காசுகளைத் திரும்ப வீசுகின்றார். பாவம்! அவருடைய முயற்சிகள் அனைத்தும் தோற்கின்றன. விரக்தியில் தன்னைத் தானே மாய்த்துக்கொள்கின்றார். தன் தலைவரைக் காணவும் துணியாமல் போயிற்று அவருக்கு.

இந்த நிகழ்வைக் குறித்தே இயேசு, ‘அவன் பிறவாமல் இருந்திருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்!’ என்கிறார்.

நாம் ஒன்று நினைக்க, எதார்த்தம் வேறொன்றாக மாறுவது நம் வாழ்விலும் நடக்கின்ற ஒன்று. நல்லது என நினைத்து நாம் சொல்லும் ஒற்றைச் சொல் அடுத்தவருக்குத் தீயதாக மாறலாம். நல்லது செய்வதாக நினைத்து நாம் செய்த ஒற்றைச் செயல் அடுத்தவருக்குப் பெரிய கெடுதலாக மாறியிருக்கலாம். எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாக மாறும் என்பதற்கு யூதாசு என்னும் கதை மாந்தர் சிறந்த எடுத்துக்காட்டு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் இறுதி இராவுணவில் இருக்கின்றார். ‘உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்!’ என்று இயேசு சொன்னவுடன், சீடர்கள் ஒரு மாதிரியும், யூதாசு வேறு மாதிரியும் கேள்விகள் எழுப்புகிறார்கள். சீடர்கள் ஒவ்வொருவரும், ‘ஆண்டவரே, நானோ?’ என்கின்றனர். ஆனால் யூதாசு மட்டும், ‘ரபி, நானோ?’ என்கின்றார். உடனே இயேசு, ‘நீயே சொல்லிவிட்டாய்!’ என்கிறார்.

யூதாசு அப்படி என்ன சொன்னார்? ‘ரபி’ என்று சொன்னார். மற்றவர்கள் எல்லாம், ‘ஆண்டவரே!’ என, யூதாசு மட்டும், இயேசுவை, வெறும் ‘போதகர், ஆசிரியர், ரபி’ என்று பார்க்கின்றார். பாவம் அவர்! அவரால் இயேசுவை அப்படி மட்டுமே பார்க்க முடிந்தது. இயேசுவைத் தவறாகப் பார்க்கத் தொடங்கியதன் விளைவு, அவரைக் காட்டிக்கொடுக்கின்றார். மத்தேயு நற்செய்தியாளரின் இலக்கியச் சூழலின் பின்புலத்தில் பார்க்கும்போது, மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் எதிரிகளுடைய வாயிலிருந்து ‘ஆண்டவரே’ என்னும் சொல் வருவதே இல்லை.

இன்றைய முதல் வாசகத்தில், துன்புறும் ஊழியன் மூன்றாம் பாடலிலிருந்து (எசாயா 50:4-9) வாசிக்கின்றோம். துன்புறும் ஊழியனின் மூன்று பண்புகளை இப்பாடல் எடுத்துரைக்கிறது: (அ) ‘கற்றோனின் நாவை அவர் கொண்டிருக்கிறார்’ (50:4). ஆண்டவரால் அறிவுறுத்தப்படுகிறார், ஆண்டவரின் சொற்களையே பேசுகிறார். (ஆ) ஆண்டவரின் திருவுளத்துக்குப் பணிந்திருக்கிறார் (50:5-6). கிளர்ச்சி செய்யாத, முணுமுணுக்காத உள்ளம் கொண்டிருக்கிறார். (இ) கடவுளின் உதவியின்மேல் பற்றுறுதி கொண்டவராக இருக்கிறார் (50:7-9). கடவுளின் உடனிருப்பை துன்பத்திலும் உணர்கிறார்.

பன்னிருவருள் ஒருவர் தம்மைக் காட்டிக்கொடுக்கிறார் என்ற நிலையிலும், இயேசு மனம் தளர்ந்துவிடவில்லை. அவர் அனைவரையும் அனைத்தையும் அறிந்தவராக இருக்கிறார். அவருடைய உள்ளார்ந்த கட்டின்மையும், தந்தையின் உடனிருப்பை உணர்கிற பண்பும் நமக்கு ஆச்சர்யம் தருகின்றன.

இன்று நாம் இயேசு கிறிஸ்துவை எப்படி அறிக்கையிடுகிறோம்? ‘ஆண்டவர்’ என்றா? அல்லது ‘ரபி’ என்றா?

யூதாசின் கடின உள்ளம், இயேசுவைப் பற்றிய தவறான எதிர்பார்ப்பு, அல்லது இப்படித்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்னும் இறைத்திருவுளம் அனைத்தும் சேர, இயேசு கிறிஸ்துவை, ‘ரபி’ என அழைக்கிறார் யூதாசு.

கற்றுக்கொடுப்பவராக மட்டுமே இயேசுவைப் பார்த்த யூதாசு, கடவுளாக, கடவுளின் மகனாக அவரைக் காண இயலவில்லை என்பதே நிகழ்வின் சோகம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment