இன்றைய இறைமொழி. திங்கள், 25 மார்ச் 2024. நான் என்றும் இருக்கப்போவதில்லை!

இன்றைய இறைமொழி
திங்கள், 25 மார்ச் 2024
புனித வாரத்தின் திங்கள்
எசாயா 42:1-7. யோவான் 12:1-11

(25 மார்ச் அன்று வழக்கமாகக் கொண்டாடப்படுகிற ‘மங்கள வார்த்தை நாள்’ அல்லது ‘கிறிஸ்து பிறப்பு முன்னறிவிப்பு பெருவிழா‘, புனித வாரத்தில் வருவதால், இந்த ஆண்டு, இப்பெருவிழா ஏப்ரல் 8 அன்று கொண்டாடப்படுகிறது)

நான் என்றும் இருக்கப்போவதில்லை!

‘பாஸ்கா விழாவுக்கு ஆறு நாள்களுக்கு முன்’ என இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகிறது. தன் நற்செய்தியின் தொடக்கத்தில் மூன்றாம் நாள் என்று சொல்லிக்கொண்டே நகர்கிற யோவான், ‘ஆறு நாள்களுக்கு முன்’ நடந்த ஒரு நிகழ்வை இங்கே பதிவு செய்கிறார்.

பெத்தானியாவில் மார்த்தா-மரியா-இலாசர் இல்லத்தில் இயேசு விருந்துண்கிறார். பெத்தானியாவுக்கு இயேசு சென்றதை லூக்காவும் பதிவு செய்கிறார் (காண். லூக் 10). பெத்தானியா என்னும் சிற்றூர் யூதேய பாலைநிலத்தை ஒட்டி எருசலேமுக்கு மிக அருகில் இருந்தது.

‘எருசலேமுக்கு மிக அருகில்’ எனச் சொல்லும்போதே இயேசுவின் இறுதிநாள்களை நாம் நினைவுகூர முடிகிறது. பெத்தானியா விருந்து மூன்று நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது: மரியா இயேசுவின் காலடிகளைக் கழுவியது, இயேசு யூதாசைக் கடிந்துகொள்வது, இயேசுவின்மேல் கொண்டுள்ள யூதர்களின் வெறுப்பு வெளிப்படுவது.

(அ) மரியா இயேசுவின் காலடிகளைக் கழுவுகிறார்

பெண் ஒருவர் இயேசுவுக்கு நறுமணத் தைலம் பூசும் நிகழ்வை நான்கு நற்செய்தியாளர்களும் பதிவு செய்கிறார்கள். ஆனால், ஒவ்வொருவரும் இடம், நிகழ்வு தளம், சூழல் ஆகியவற்றைப் பதிவு செய்வதில் வேறுபடுகிறார்கள். மார்த்தாவின் சகோதரி மரியா இயேசுவின் காலடிகளுக்கு நறுமணம் பூசியதாக யோவான் பதிவு செய்கிறார். விருந்தோம்பலின் அடையாளமாக இது பூசப்பட்டது எனினும், இயேசு இதன் உள்ளார்ந்த பொருளை விளக்குகிறார்: ‘அடக்கநாளை முன்னிட்டே இது பூசப்பட்டது.’ மரியா இயேசுவின் காலடிகளைக் கழுவிய நிகழ்வே, இயேசு அவருடைய சீடர்களின் காலடிகளைக் கழுவுவதற்கான தூண்டுதலாக இருந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

(ஆ) இயேசு யூதாசைக் கடிந்துகொள்கிறார்

ஒவ்வொன்றின் விலையையும் அறிந்திருந்த யூதாசு, நறுமணத் தைலம் விற்கப்பட்டு ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம் என முன்மொழிகிறார். இந்த இடத்தில் யூதாசைப் பற்றிய குறிப்புகளையும் தருகிறார் யோவான். ‘ஏழைகள்மேல் கொள்ளும் அக்கறை’ என்னும் போலியான எண்ணத்தை யூதாசு கொண்டிருந்ததாக யோவான் எழுதுகிறார். இயேசு விரைவில் கொல்லப்படப் போகிறார் என்பதை யூதாசு அறிந்திருந்ததால், சீக்கிரம் இறக்கப் போகிறவருக்கு ஏன் இத்தனை கொண்டாட்டம் என்பது போல ஆதங்கப்படுகிறார். யூதாசைக் கடிந்துகொள்கிறார் இயேசு.

(இ) யூதர்களின் வெறுப்பு

பெத்தானியாவில் இயேசு இருப்பதை அறிந்து சில யூதர்கள், இயேசு உயிர்த்தெழச் செய்த இலாசரின் பொருட்டு வருகிறார்கள். மேலும், இலாசரின் பொருட்டு பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டதால் இலாசரை கொல்ல நினைக்கிறார்கள்.

‘நான் என்றும் உங்களோடு இருக்கப்போவதில்லை’ என்னும் இயேசுவின் சொற்கள் புனித வாரத்தில் அவருடைய இறப்பு நிகழ்வை நமக்கு எடுத்துரைக்கின்றன.

ஆண்டவர் என்றும் நம்மோடு இருக்கப்போவதில்லை என்பதால், அவருடைய உடனிருப்பை உடனடியாகப் பற்றிக்கொள்வோம். இந்தக் கூற்றைச் சற்றே திருப்பி, ‘நான் என்றும் ஆண்டவரோடு இருக்கிறேனா?’ எனக் கேட்கலாம். ஏழைகள்மேல் உள்ள அக்கறை சில நேரங்களில் ஆண்டவரிடமிருந்து நம் கவனத்தைத் திருப்பலாம்.

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் துன்புறும் ஊழியனுடைய வாழ்வின் நோக்கத்தை அவருக்கு எடுத்துரைக்கிறார். நம் வாழ்வின் நோக்கத்தை நிர்ணயிப்பவர் நம் கடவுளே.

மார்த்தாவின் கண்கள் இயேசுவின் கைகளை நோக்கியதாக இருந்தன. மரியாவின் கண்கள் இயேசுவின் கால்களை நோக்கி இருந்தன. யூதாசின் கண்கள் மரியாவின் கைகளிலிருந்து தைலக் குப்பியின்மேல் இருந்தன. வீட்டுக்கு வந்திருந்த யூதர்களின் கண்கள் இலாசரின்மேல் இருந்தன. இயேசுவின் கண்களோ சிலுவையின்மேல் இருந்தன.

இன்று நம் கண்கள் இயேசுவை நோக்கியதாக இருக்கட்டும்!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment