இன்றைய இறைமொழி. செவ்வாய், 26 மார்ச் 2024. மூன்று கேள்விகள்

இன்றைய இறைமொழி
செவ்வாய், 26 மார்ச் 2024
புனித வாரத்தின் செவ்வாய்
எசாயா 49:1-6. யோவான் 13:21-33, 36-38

மூன்று கேள்விகள்

சீடர்களின் காலடிக் கழுவியபின் இயேசு அவர்களோடு உரையாடிக்கொண்டிருக்கிறார். உரையாடலின்போது பேதுரு கேட்கும் மூன்று கேள்விகளை இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம். அவருடைய மூன்று கேள்விகளுமே ஆண்டவரை நோக்கியதாக இருக்கின்றன: (அ) ‘ஆண்டவரே, அவன் யார்?’ (ஆ) ‘ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?’ (இ) ‘ஆண்டவரே, ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது?’

(அ) ‘ஆண்டவரே, அவன் யார்?’

பேதுருவின் சார்பாக அன்புச் சீடர் இயேசுவிடம் இக்கேள்வியைக் கேட்கிறார். இக்கேள்வி இயேசுவைக் காட்டிக் கொடுப்பவர் யார் என்னும் ஆர்வத்தில் எழுகிறது. இக்கேள்விக்கு நேரடியாக விடை தராத இயேசு, அப்பத்தைத் தோய்த்து யூதாசு இஸ்காரியோத்துக்கு கொடுக்கிற செயலால் விடை தருகிறார்.

(ஆ) ‘ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?’

இக்கேள்வியை சீமோன் பேதுரு நேரடியாக இயேசுவிடம் கேட்கிறார். தாம் செல்லுமிடம் பற்றி நேரடியாக விடையளிக்காத இயேசு, சீமோன் பேதுரு செல்லும் பாதை பற்றி முன்னுரைக்கிறார்.

(இ) ‘ஆண்டவரே, ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது?’

பேதுருவின் இந்த நேரடிக் கேள்வியில் ஒரு வித ஏக்கமும் தயக்கமும், எந்த நிலையிலும் இயேசுவைத் தன்னால் பின்பற்ற முடியும் என்னும் துணிச்சலும் இருக்கிறது.

பன்னிருவருள் ஒருவர் தம்மைக் காட்டிக்கொடுப்பார் எனவும், ஒருவர் தம்மை மறுதலிப்பார் எனவும் இயேசு இங்கே முன்னுரைக்கிறார்.

முதல் வாசகத்தில், தம் அழைத்தல் பற்றி மொழிகிற இறைவாக்கினர் எசாயா, ‘கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார். என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார் … ஆண்டவர் பார்வையில் நான் மதிப்பு பெற்றவன்’ என தன் வாழ்வின் நோக்கம் ஆண்டவராகிய கடவுளால் நிர்ணயம் செய்யப்பட்டது என உரைக்கிறார்.

முதல் வாசகத்தின் ஒளியில் யூதாசு, பேதுரு என்னும் கதைமாந்தர்களைப் பார்க்கும்போது, இவர்கள் இயேசுவை காட்டிக்கொடுப்பதும் மறுதலிப்பதும் ஏற்கெனவே நிர்ணயம் செய்யப்பட்டதாக இருக்கிறது என உணர்கிறோம். யூதாசின் செயல் அவரே விரும்பிச் செய்வதுபோலவும், பேதுருவின் செயல் சூழலின் காரணமாக அவர் செயல்பட்டதுபோலவும் தெரிகிறது. ஆனால், இவர்கள் செயல்படுவதற்கு முன்னரே இவர்களுடைய செயல்களை அறிந்தவராக இருக்கிறார் ஆண்டவர். மற்ற சீடர்களும் இயேசுவை விட்டுத் தப்பி ஓடுகிறார்கள்.

பல நேரங்களில் யூதாசின் காட்டிக்கொடுத்தலையும், பேதுருவின் மறுதலித்தலையும், சீடர்களின் நிராகரிப்பையும் நாம் வெகுவாக விமர்சிக்கிறோம். நம் சிலுவைப் பாதைச் சிந்தனைகளில் அவர்களைக் கடிந்துகொள்கிறோம், முத்திரையிடுகிறோம், சபிக்கிறோம். இவர்களைச் சற்றே இரக்கத்துடன் பார்ப்போம். கடவுளுடைய நீண்ட மீட்புத் திட்டம் என்னும் நாடகத்தில், தங்களுடைய பகுதியை நடித்துவிட்டு மறைந்தவர்கள் இவர்கள். நாம் இப்போது நம் பகுதியை நடித்துக்கொண்டிருக்கிறோம். நாமும் மறைவோம்!

பன்னிருவரும் தம்மை விட்டு ஓடினாலும், அவர்கள் காட்டிக்கொடுத்தாலும் மறுதலித்தாலும் அவர்களை இறுதிவரை அன்பு செய்கிறார் இயேசு. இவர்களுடைய செயல்கள் இயேசுவின் அன்பை ஒருபோதும் குறைக்கவில்லை. நம் செயல்களை முன்னிட்டு அல்ல, கடவுளுடைய பேரிரக்கத்தை முன்னிட்டே நாம் அன்பு செய்யப்படுகிறோம்.

இரண்டாவதாக, நம் ஒவ்வொருவரும் இந்த உலகுக்கு வரும்போது நம் பிறப்புக்கு எனக் கடவுள் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். அத்திட்டம் சிலருக்கு தூதர்கள் வழியாகவோ – சக்கரியா-எலிசபெத்து, மரியா, யோசேப்பு, ஆண்டவர் வழியாகவோ – யூதாசு, பேதுரு, வெளிப்படுத்தப்படுகிறது. பல நேரங்களில் நம் வாழ்வின் நோக்கத்தை அறிந்து வாழ்வதை விடுத்து, மற்றவர்களைப் போல இருக்க விரும்பி நம் வாழ்க்கையை வீணடிக்கிறோம். நம் வாழ்வின் நோக்கம் வெளிப்படுத்துமாறு இறைவனிடம் வேண்டுவோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தம் வாழ்வின் இலக்கை நோக்கி மெதுவாக நகர்கிறார் இயேசு. ‘நீ செய்ய இருப்பதை விரைவில் செய்’ என யூதாசை அனுப்புகிறார் இயேசு. நாமும் நம் வாழ்வில் செய்ய வேண்டியதை விரைவில் செய்வோம். ஏனெனில், நமக்கான நேரம் குறைவாகவே உள்ளது.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment