இன்றைய இறைமொழி. சனி, 23 மார்ச் 2024. ஒன்றாய்ச் சேர்ப்பதற்காக ஒருவர்

இன்றைய இறைமொழி
சனி, 23 மார்ச் 2024
தவக்காலம் ஐந்தாம் வாரத்தின் சனி
எசேக்கியேல் 37:21-28. யோவான் 11:45-57

ஒன்றாய்ச் சேர்ப்பதற்காக ஒருவர்

புனித வாரத்திற்குள் நுழைய நாம் தயாராகி நிற்கும் வேளையில், யூதர்களுக்கும் இயேசுவுக்கும் உள்ள விவாதம் மறைந்து, யூதர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் தயாராகின்றார்கள் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் (யோவா 11:45-57) நமக்குச் சொல்கிறது.

‘இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை’ என்னும் தலைமைக்குரு கயபாவின் வார்த்தைகள் இறைவாக்காகச் சொல்லப்பட்டதாக எழுதுகின்றார் யோவான்.

இந்த இறைவாக்கை இரண்டு நிலைகளில் புரிந்துகொள்ளலாம்: (அ) ஒருவருடைய அழிவில் அனைவரும் ஒன்று சேர்வர். அல்லது சிதறிப் போனவர்களை இணைப்பதற்காக ஒருவர் பலியாக வேண்டிய சூழல் உருவாகிறது. (ஆ) பெரிய இனம் அழிந்துபோவதற்குப் பதிலாக அந்த இனத்தைச் சார்ந்த ஒருவர் அழிந்து போவது நல்லது.

இதை வாசிக்கும்போது நம்மை அறியாமல் சோகம் நம்மைப் பற்றிக்கொள்கிறது. நாம் விரும்புகிறோமோ, விரும்பவில்லையோ வாழ்க்கை இப்படித்தான் நடத்துகிறது. இனம் பாதுகாக்கப்படும் என்னும் நோக்கம் சரி என்றாலும், ஒருவருடைய அழிவு என்னும் கருவி தவறாக இருக்கிறது. பெரியவற்றைக் காப்பதற்காக சிறியவர் இறப்பது என்பது நம் தனிப்பட்ட அனுபவமாக மாறும்போது வலி இன்னும் அதிகமாகிறது.

ஒரு பெரிய நிறுவனம் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக, அதில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் தன்னையே அழித்துக்கொள்கிறார்கள்.

குடும்பம் என்னும் அமைப்பு அழிந்துவிடக் கூடாது என்பதற்காக, கணவனும் மனைவியும் தங்களையே அழித்துக்கொள்கிறார்கள்.

பெரிய உடலைக் காப்பாற்றுவதற்காக சிறிய உறுப்பு அல்லது உடலின் பகுதி அகற்றப்படுகிறது.

பெரிய மனிதரின் நலனுக்காக சிறிய கோழி அல்லது ஆட்டுக்குட்டி பலியிடப்படுகின்றது.

இப்படியாக பெரியவற்றுக்காகச் சிறியவை எப்போதும் பலியாகிக்கொண்டே இருக்கின்றன.

பெரியவை பக்கம் நியாயம் இருப்பதாகவும், இதில் ஒரு நல்ல நோக்கம் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

பெரியவர்களுக்காகவும், பெரிய இனத்துக்காகவும் சிறியது ஒன்று அழிக்கப்படலாம் என்பதைக் கேட்ட நாள் முதல் இயேசு பெரியவர்களின் கண்களிலிருந்து தப்பிச் செல்கின்றார். வெளிப்படையாக அவர் நடமாடவில்லை.

பாலைநிலப் பகுதிக்குப் போகிற இயேசு அங்கே தம்மை மறைத்துக்கொள்கிறார். தேடுகிற மக்களால் அவரைக் காண இயலவில்லை. தம்மை மறைத்துக்கொள்வதன் வழியாக ஒருவகையான இறப்பு அனுபவத்தை வாழ்கிறார் இயேசு.

முதல் வாசகத்தில் (எசேக்கியேல் 37:21-28), ‘நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன். அவர்கள் என் மக்களாக இருப்பர்’ என்று சிறியவர்களின் சார்பாகக் கடவுள் நிற்பதைப் பார்க்கின்றோம். சிதறுண்ட மக்களினங்களைக் கடவுள்தாமே கூட்டிச் சேர்க்கின்றார்.

இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) இயேசுவின் இறப்புக்கான நோக்கம் மனிதர்களை ஒன்றிணைப்பதற்காக என்பது இங்கே சொல்லப்படுகிறது. ஆண்டவராகிய கடவுள் தாமே சிதறுண்ட மக்களை ஒன்றிணைப்பதாக இன்றைய முதல் வாசகத்தில் உரைக்கிறார். இந்த இறைவாக்கு இயேசுவில் நிறைவேறுகிறது. இயேசுவின் இறப்பில் அவருடைய இனத்தார் இணைந்து வருகிறார்கள். ஆன்மிக அளவில், இயேசுவின் இறப்பை அனைவரையும் ஒன்று சேர்த்துக் கடவுளோடு ஒப்புவரவாக்குகிறது.

(ஆ) பலிகடா மனநிலை, தலைவர் மனநிலை. இயேசுவை அவருடைய சமகாலத்து யூதர்களும் தலைமைக்குருவும் பலிகடா என நினைத்தாலும், அவர் தம்மை தலைவர் என்றே நினைத்தார். பலிகடா மனநிலையில் இருப்பவர் தமக்கு எல்லாம் நிகழ்வதாக உணர்கிறார். தலைவர் மனநிலையில் இருப்பவர் அனைத்தையும் தம் கட்டுக்குள் வைத்திருக்கிறார். இயேசுவே விரும்பினால் ஒழிய அவருடைய உயிரை யாரும் அவரிடமிருந்து எடுக்க முடியாது.

(இ) இறப்பு அனுபவம். இஸ்ரயேல் மக்கள் அசீரிய மற்றும் பாபிலோனியப் படையெடுப்புகளின்போது தங்கள் நாட்டிலிருந்து மறைந்து போகிறார்கள். அவர்கள் அனுபவிக்கிற இந்த இறப்பு அனுபவம் அவர்களை புதிய வாழ்வுக்கு உயிர்பெறச் செய்கிறது. எல்லாரோடும் எல்லார் முன்னிலையிலும் நடமாடிக்கொண்டிருந்த இயேசு தம்மையே மறைத்துக்கொள்கிறார். தம்மையே மறைத்துக்கொள்கிற நிலையில் அவர் உயிர்ப்புக்குத் தயாராகிறார்.

நிற்க.

நம் கண்களை விட்டுக் கடவுள் மறைந்ததுபோல இருந்தாலும், அவர் தம்மையே நமக்காக வெளிப்படுத்துவதற்காகத் தயாரித்துக்கொண்டிருக்கிறார் என்னும் எதிர்நோக்கைப் பெற்றுக்கொள்வோம். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 61)

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment