இன்றைய இறைமொழி
வெள்ளி, 22 மார்ச் 2024
தவக்காலம் ஐந்தாம் வாரத்தின் வெள்ளி
எரேமியா 20:10-13. யோவான் 10:31-42
இரு புலங்கள்
நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் பணியும் உரையும் இரண்டு வகையான எதிர்வினைகளைத் தோற்றுவிப்பதைக் காண்கிறோம். அவர்மேல் கற்களை எறியத் தயாராகிறார்கள் ஒரு குழுவினர். இன்னொரு குழுவினர் அவர்மேல் நம்பிக்கை கொள்கிறார்கள்.
முதல் வாசகத்தில், தன் சொந்த ஊரில் இறைவாக்குரைக்கிற எரேமியா, ஒரு பக்கம் மக்களுடைய எதிர்ப்பை எதிர்கொள்ள நேர்ந்தாலும் இன்னொரு பக்கம் ஆண்டவராகிய கடவுளை வலிமை வாய்ந்த படைவீரராகக் கண்டுகொள்கிறார்.
எதிர்மறையான பதிலிறுப்பிலிருந்து நேர்முகமான பதிலிறுப்புக்கு எப்படிக் கடந்து செல்வது?
(அ) மனப்பாங்கு மாற்றம்
தனக்கு வெளியே உள்ள மனிதர்களையும் அவர்களுடைய எதிர்வினையையும் முதன்மைப்படுத்துகிற எரேமியா, சட்டெனத் தன் மனப்பாங்கை மாற்றியவராக, தனக்குள்ளேயே காணத் தொடங்குகிறார். அந்த நொடியே அவர் தெளிவு பெறுகிறார். மனப்பாங்கு மாற்றம் பெற்றவுடன், அவர் கடவுளுடைய உடனிருப்பை அதிகமாக உணர்கிறார்.
(ஆ) உள்ளடக்கிய பார்வை
‘நீ உன்னையே கடவுளின் மகனாக்கிக்கொண்டாய்’ என இயேசுவின்மேல் பழி சுமத்துகிறார்கள் யூதர்கள். ஆனால், இயேசுவோ, ‘நான் மட்டுமல்ல. நீங்களும் கடவுளின் புதல்வர்கள், புதல்வியர்கள்’ என்று அவர்களையும் உள்ளடக்கிய பார்வையை நோக்கி அழைத்துச் செல்கிறார்: ‘நீங்கள் தெய்வங்கள் எனக் கூறினேன்.’
(இ) நகர்தல்
நம் வாழ்வில் எப்போதும் எதிர்மறை, நேர்முகம் என்னும் புலங்களுக்கு இடையே நாம் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். எதிர்மறையான சூழலை உணர்கிற இயேசு, உடனடியாக வேறு இடத்திற்கு, தம்முடைய அடையாளம் உறுதிசெய்யப்படும் இடத்திற்கு நகர்கிறார். நகர்ந்துகொண்டே இருப்பதே நல்ல வாழ்க்கை.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்னும் நம் யூபிலி பயணத்தில் நாம் தேக்கநிலையை அல்ல, நகர்வுநிலையையே கொண்டாடுகிறோம். அன்றாட வாழ்வின் நகர்வுகள் நம்மையும் நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் மேம்படுத்துகின்றன. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 60)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment