இன்றைய இறைமொழி. வியாழன், 21 மார்ச் 2024. உங்கள் தந்தை ஆபிரகாம்

இன்றைய இறைமொழி
வியாழன், 21 மார்ச் 2024
தவக்காலம் ஐந்தாம் வாரத்தின் வியாழன்
தொடக்கநூல் 17:3-9. யோவான் 8:51-59

உங்கள் தந்தை ஆபிரகாம்

யூதர்களுக்கும் இயேசுவுக்கும் இடையேயான விவாதம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவா 8:51-59) தொடர்கிறது.

‘நீ பேய்பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது’ … ‘எங்கள் தந்தை ஆபிரகாமை விட நீ பெரியவனோ?’ … ‘நீ யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?’ … ‘உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லை. நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?’ என்று சொற்களாகத் தொடர்கிறது விவாதம். இறுதியில் அவர்கள்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுக்கின்றனர். இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறுகின்றார்.

அவர்கள் கைகளில் ஏந்திய கற்களைப் போலவே அவர்கள் உள்ளமும் கடினமாக இருந்தது.

முதல் வாசகத்தில் (தொநூ 17:3-9), ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கின்ற கடவுள், அவருக்கு நிலத்தையும், வழிமரபையும் ஆசீராகக் கொடுக்கின்றார். தொடர்ந்து, தலைமுறைதோறும் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகிறார்.

யூதர்கள் தாங்கள் ஆபிரகாமின் வழிவந்தவர்கள் என்ற நிலையில் எப்போதும் பெருமிதம் கண்டனர். இயேசு தம்மை ஆபிரகாமுக்கு இணையாக்குவதை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. ஆனால், இயேசுவின் இறைத்தன்மையை அவர்கள் காண மறுக்கிறார்கள். உலகம் தோன்றுவதற்கு முன்பாக இருந்தவரைப் பார்த்து, ‘உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லை’ எனச் சொல்கின்றனர்.தங்கள் வசதிக்கேற்ப இயேசுவை வளைத்துப் பார்த்தனர். இன்னொரு பக்கம், இயேசுவும் தங்களைப் போல இருக்க வேண்டும் என நினைத்தனர். அவரின் மேன்மையை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

ஆண்டவராகிய கடவுள் தமக்கு வாக்களித்த எண்ணற்ற மக்களினத்தாரைத் தன் நம்பிக்கைக் கண்களால் கண்டார் ஆபிரகாம். ஆனால், இத்தகைய நம்பிக்கையை அவருடைய வழிவந்த யூதர்கள் பெற்றிருக்கவில்லை. இயேசுவில் கலிலேயர் ஒருவரைத்தான் அவர்களால் காண முடிந்ததே தவிர, கடவுளைக் காண இயலவில்லை.

நிற்க.

கடின உள்ளத்தின் விளைவு நம்பிக்கையின்மை. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 59).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment