இன்றைய இறைமொழி
புதன், 20 மார்ச் 2024
தவக்காலம் ஐந்தாம் வாரத்தின் புதன்
தானியேல் 3:14-20, 24-25, 28. யோவான் 8:31-42
விடுதலை
இயேசு தன் வாழ்வில் எப்போதும் தக்க வைத்துக்கொண்ட ஒரு மேன்மையான பண்பு ‘கட்டின்மை’ அல்லது ‘விடுதலை.’ மற்றவர்களும் தங்களுடைய கட்டின்மை அல்லது விடுதலையை அனுபவிக்க வேண்டும் என்றும், அதை மேன்மையாகக் கருதிப் போற்ற வேண்டும் என்றும், ஒருவர் மற்றவரின் விடுதலையை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
பெத்சதா குளத்தருகில் 38 ஆண்டுகளாகக் கிடந்த உடல்நலமற்றவருக்கு உடல்சார்ந்த விடுதலை அளிக்கின்றார் (காண். யோவா 5). மெசியா என்பது அரச நிலை என்று நினைத்த தன் சீடர்களிடம் மெசியா என்பது துன்புறும் நிலை என்று விளக்கியதன் வழியாக அவர்களுக்கு அறிவுசார்ந்த விடுதலை அளிக்கின்றார். பாவிகளோடும் வரி தண்டுபவரோடும் உணவருந்தியதன் வழியாக அவர்களும் சமத்துவத்தின் மக்கள் என உணர்த்தி, உணர்வுசார் விடுதலைக்கு அனைவரையும் அழைக்கின்றார். ‘ஆனால் தேவையானது ஒன்றே!’ என்று மார்த்தாவை ஆன்மிக விடுதலைக்கு அழைக்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகம் (யோவா 8:31-42), ‘விடுதலை’ என்னும் சொல்லை மையமாக வைத்துச் சுழல்கிறது. ‘உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்’ என்று இயேசு ஒரு நிலையில் சொல்ல, ‘நாங்கள் யாருக்கும் அடிமைகளாக இருந்ததில்லையே!’ என்று இன்னொரு நிலையில் புரிந்துகொள்கின்றனர் யூதர்கள். ஆனால், யூதர்கள் எகிப்திலும், அசீரியாவிலும், பாபிலோனியாவிலும் அடிமைகளாக இருந்தவர்கள். மேலும், இயேசுவின் சமகாலத்தில் அவர்கள் உரோமையர்களுக்கும் அடிமைகளாக இருந்தனர்.
‘ஆபிரகாமே எங்கள் தந்தை’ என்று சொல்கின்றனர். ஆனால், ஆபிரகாம் கொண்டிருந்த நம்பிக்கை இவர்களில் இல்லை என்பதால், அதிலும் பொய்யுரைக்கின்றனர்.
‘உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்’ எனச் சொல்லும் இயேசு, ‘பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை’ என்கிறார். புற விடுதலை பற்றி நினைத்துக்கொண்டவர்களை அக விடுதலை நோக்கி அழைக்கிறார். இன்றைய முதல் வாசகத்தில் (தானி 3) உடல்சார் கட்டுகளோடு இருந்த சாத்ராக்கு, மேசாக்கு, மற்றும் ஆபேத்நெகோ என்னும் மூன்று இளவல்களை ஆண்டவராகிய கடவுள் வியத்தகு முறையில் விடுவிக்கின்றார். அவர்கள் அகத்தில் விடுதலை பெற்றிருந்ததால் – உண்மைக் கடவுளை வழிபட்டதால் – புறவிடுதலையும் அவர்களுக்குச் சாத்தியமாகிறது.
மனித வாழ்வில் நாம் போற்ற வேண்டிய மிகப்பெரிய உணர்வு சுதந்திரம் அல்லது விடுதலை அல்லது கட்டின்மை. அதே வேளையில் நாம் மற்றவர்களுக்குத் தர வேண்டியதும் இதே கட்டின்மை அல்லது விடுதலையையே.
தம் இறப்பு, உயிர்ப்பு வழியாக ஆண்டவராகிய இயேசு நமக்குப் பாவத்திலிருந்து விடுதலை தந்துள்ளார். ஆக, எந்தப் பாவமும் நம்மேல் ஆதிக்கம் செலுத்தாமல் இருக்கக் கற்றுக்கொள்வோம். பாவத்திற்குத் தண்டனை என எதுவுமே இல்லை. ஏனெனில், நாம் செய்யும் பாவமே நமக்குத் தண்டனையாக மாறுகிறது. சவுல் தாவீதுமேல் கொண்டிருந்த பொறாமைக்குத் தண்டனை எதுவும் இல்லை. அவருடைய பொறாமையே அவருடைய தண்டனையாக மாறியது. அதுபோல, தாவீது பெத்சபாமேல் கொண்டிருந்த ஆசைக்குத் தண்டனை எதுவும் இல்லை. அந்த ஆசையே அவருக்குத் தண்டனையாக மாறியது.
புனித அகுஸ்தினார் குறிப்பிடுவதுபோல, ‘கட்டுக்குள் வைக்கப்படாத எந்தப் பழக்கமும் தேவையாக மாறிவிடக் கூடும்!’ அதாவது, திருடுவதைப் பழக்கமாகக் கொண்டிருக்கிற ஒருவர் அப்பழக்கத்தை நிறுத்தாவிட்டால், அதுவே அவருடைய தேவையாக மாறிவிடுகிறது.
ஒட்டுமொத்த பாவத்திலிருந்து ஆண்டவர் நமக்கு விடுதலை தந்தாலும், நம் தனிப்பட்ட பாவங்களிலிருந்து நாம்தான் நம்மையே விடுவிக்க முடியும். அந்த விடுதலையைப் பெறுவதற்கு துணிச்சலும், விடாமுயற்சியும் அவசியம்.
நிற்க.
‘கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார். அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்’ (கலா 5:1) (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 58).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment