இன்றைய இறைமொழி. திங்கள், 18 மார்ச் 2024. கருணையும் காயமும்

இன்றைய இறைமொழி
திங்கள், 18 மார்ச் 2024
தவக்காலம் ஐந்தாம் வாரத்தின் திங்கள்
தானியேல் (இ) 2:1-9, 15-17, 19-30, 33-62. யோவான் 8:1-11

கருணையும் காயமும்

‘முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இறுதியில் இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் நின்றுகொண்டிருந்தார்’ என்னும் நற்செய்திப் பகுதிக்கு விளக்கம் தருகிற புனித அகுஸ்தினார், ‘இறுதியில் கருணையும் காயமும் (இலத்தீனில், மிஸெரிகோர்தியா எத் மிஸெரா) நின்றுகொண்டிருந்தன. கருணை காயத்திற்குக் கட்டுப்போட்டு அனுப்பியது’ என எழுதுகிறார். ‘கருணையும் காயமும்’ என்னும் சொல்லாடலையே தன் திருத்தூது ஊக்கவுரையின் தலைப்பாகக் கொண்டு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரு பெண்கள். இருவருமே கையறுநிலையில் இருக்கிறார்கள். இரண்டுபேர் மேலும் குற்றம் சுமத்தப்படுகிறது. இரண்டு நிகழ்வுகளிலும் பிறழ்வு உள்ளது: விபசாரம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட பெண்களோடு இருந்த ஆண்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படவில்லை. இருவருமே விடுவிக்கப்படுகிறார்கள். சூசன்னாவை விடுவிக்க வருகிறார் தானியேல். விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை விடுவிக்கிறார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்தில் சூசன்னா என்னும் இளவலையும் நற்செய்தி வாசகத்தில் அனாமிகா (‘பெயரில்லாதவர்’) என்னும் இளவலையும் சந்திக்கிறோம்.

நிகழ்வின்படி இயேசு எருசலேம் கோவிலில் போதித்துக்கொண்டிருக்கிறார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணைக் கொண்டுவந்து நிறுத்தி, மோசேயின் சட்டத்தின்படி அவர் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும் என மொழிந்து இயேசுவின் கருத்தைக் கேட்கிறார்கள். அப்பெண்ணுக்கான வலை அல்ல. மாறாக, இயேசுவுக்கான வலை.

மோசேயின் சட்டத்தின் நோக்கத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என உணர்கிற இயேசு அமைதி காக்கிறார். சட்டத்தின் நோக்கம் கடவுளுடைய அன்பை உணர்வது. ‘பாவத்துக்கும் நீதிக்குமான போராட்டமல்ல இது. மாறாக, பாவியும் மீட்பரும் மேற்கொள்ளும் சந்திப்பு. பாவத்தின் காயம் அன்பிரக்கத்தால் மூடப்பட்டது’ என எழுதுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் மௌனமும் அங்கு நிலவிய மௌனமும் அவர்களுக்கு அச்சுறுத்தல் தருகிறது. ஏனெனில், அந்த மௌனத்தில் ஒவ்வொருவரும் தங்களைக் காணத் தொடங்குகிறார்கள். காண இயலாத நிலையில், இயேசுவை நோக்கியே கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ‘உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்’ என்று அவர்களை நோக்கியே திருப்புகிறார் இயேசு.

முதல் வாசகத்தில், முதியோர் இருவரின் தவறான குற்றச்சாட்டிலிருந்து சூசன்னாவை விடுவிக்கிறார் தானியேல்.

இந்த வாசகங்களில் வருகிற இரு பெண்களும் இயேசுவின் உருவகங்களாக இருக்கிறார்கள். தவறான குற்றச்சாட்டுகளால் தீர்ப்பிடப்படுகிற இயேசு வலுவற்ற நிலையில், கையறுநிலையில் இருக்கிறார். தந்தையாகிய கடவுள் அவரை இறப்பிலிருந்து விடுவித்து உயிர்த்தெழச் செய்கிறார்.

நாம் கற்றுக்கொள்கிற ஆன்மிகப் பாடங்கள் எவை?

(அ) கையறுநிலையில் இருப்பவர்களுக்குத் துணைநிற்றல். அரசியல், பொருளாதார, சமூக தளங்களில் நாமும் பல நேரங்களில் ஆற்றல் இழந்து கையறுநிலையில் இருக்கிறோம். நம்மைப் போல மற்றவர்களும் நிற்கிறார்கள். அவர்களுக்குத் துணை நிற்கும்போது நாமும் ஆற்றல் பெறுகிறோம்.

(ஆ) பாவத்தைத் தாண்டிய பார்வை. பாவம், குற்றம், தவறு என்று நம்மையும் மற்றவர்களையும் பார்க்கும் மனப்பாங்கை விடுத்து அன்பு கொண்டு பார்க்கக் கற்றுக்கொள்வோம். இறைவனின் முன்னிலையில் அனைவரும் அன்புக்கு உரியவர்கள். ‘அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்!’ (காண். 1 கொரி 13).

(இ) முடிவு என நினைத்தவர்களுக்கு விடிவு. சூசன்னாவும் அனாமிகாவும் தங்கள் வாழ்க்கை இத்தோடு முடிந்தது என நினைத்தார்கள். ஆனால், அவர்களுடைய வாழ்க்கை புதிய விடியலைப் பெறுகிறது. சூசன்னாவின் எதிரிகள் தண்டிக்கப்படுகிறார்கள். அனாமிகா பாவமற்ற வாழ்க்கை நோக்கிப் புறப்படுகிறார். நமக்கு முன்னால் நிற்பது சுவர் என்றாலும், அதைத் தாண்டிச் செல்வதற்கான பாதை திறக்கும் என்னும் எதிர்நோக்கை நாம் இழத்தல் கூடாது.

நிற்க.

இரக்கத்தின் ஆன்மிகம். இச்சொல்லாடலைப் பயன்படுத்துகிற திருத்தந்தை பிரான்சிஸ் நம் ஒவ்வொருவரும் இந்த ஆன்மிகத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார். நீதியையும் தாண்டிய பயணமே இரக்கம். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 57).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment