இன்றைய இறைமொழி
சனி, 16 மார்ச் 2024
தவக்காலம் நான்காம் வாரத்தின் சனி
எரேமியா 11:18-20. யோவான் 7:40-53
பிடிவாதமும் மனவுறுதியும்
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிற யூதர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்கள்முன் மூன்று நேர்முகமான சான்றுகள் முன்வைக்கப்படுகின்றன:
(அ) ‘வர வேண்டிய இறைவாக்கினர் இவரே!’ – கூடாரத் திருவிழாவுக்காக எருசலேமுக்கு வந்த நபர்கள் இயேசுவின் உரையைக் கேட்டு, ‘இவர் இறைவாக்கினர்’ என்று சான்று பகர்கிறார்கள்.
(ஆ) ‘அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை’ – இயேசுவைப் பிடித்துக் கொண்டுவருவதற்காக அனுப்பப்பட்ட தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் வெறுங்கையராய்த் திரும்பி வந்ததுடன், இயேசுவின் உரை கேட்டு மெய்மறந்தவர்களாக அவரைப் பாராட்டிப் பேசுகிறார்கள்.
(இ) ‘ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?’ – தலைமைச்சங்கத்தின் உறுப்பினரும் இயேசுவைச் சந்திக்க முன்னொரு இரவில் வந்தவருமான நிக்கதேம், இயேசுவுக்காகப் பேசுகிறார்.
மக்கள், காவலர்கள், தலைமைச் சங்கத்தின் உறுப்பினர் என நேர்முகமான சான்றுகள் வந்தாலும், ஒவ்வொன்றையும் மறுக்கிறார்கள் தலைமைக்குருக்களும் பரிசேயர்களும்!
இயேசுவின் எளிய பின்புலம் குறித்து அவர்கள் இடறல்படுகிறார்கள்.
இது பிடிவாதம்!
முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எரேமியாவின் முதல் புலம்பலை வாசிக்கிறோம். ஆண்டவராகிய கடவுளின் செய்தியை இறைவாக்காக உரைக்கிற எரேமியா அவருடைய சொந்த மக்களால் எதிர்க்கப்படுகிறார். ‘வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறி போல’ உணர்கிறார்.
ஆனாலும், ஆண்டவராகிய கடவுளிடம் தன் வழக்கை எடுத்துரைத்தவுடன் எதையும் எதிர்கொள்ளத் தயாராகிறார்.
இது மனவுறுதி!
ஆன்மிக வாழ்வில் நாம் கொண்டிருப்பது என்ன? பிடிவாதமா? மனவுறுதியா?
நிற்க.
‘பிடிவாதத்துக்கும் மனவுறுதிக்கும் ஒரு சிறிய வித்தியாசம்தான். பிடிவாதம் கொண்டிருப்பவர் தன்னையே சுருக்கிக்கொள்கிறார். தன் கருத்துகளுக்குள் தன்னையே சிறைப்பிடித்துக்கொள்கிறார். மனவுறுதியுடன் இருப்பவர் தன்னையே விரித்துக்கொடுக்கிறார். மற்றவர்களுடைய கருத்துகளுக்குச் செவிமடுக்கிறார்.’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 56).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment