இன்றைய இறைமொழி. வெள்ளி, 15 மார்ச் 2024. பொல்லாரும் நல்லாரும்

இன்றைய இறைமொழி
வெள்ளி, 15 மார்ச் 2024
தவக்காலம் நான்காம் வாரத்தின் வெள்ளி
சாலமோனின் ஞானம் 2:1, 12-22. யோவான் 7:1, 2, 10, 25-30

பொல்லாரும் நல்லாரும்

‘நாம் இறைச்சி சாப்பிடாதவர்கள் என்பதற்காக மாடு நம்மை முட்டாமல் இருப்பதில்லை’ என்பது பழமொழி. நாம் நல்லவர்களாக இருப்பதால் நமக்கு நல்லது மட்டுமே கிடைக்கும் என நினைப்பதும், கெட்டவர்கள் நமக்குத் தீங்கிழைக்க மாட்டார்கள் அல்லது கெட்டது எதுவும் நமக்கு நடக்காது என நினைப்பதும் தவறு என உரைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

முதல் வாசகம் சாலமோனின் ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இது ஓர் இணைத்திருமுறை நூல். ‘இறைப்பற்றில்லாதவர்கள்’, ‘நீதிமான்கள்’ என்னும் இரு குழுவினரைப் பற்றிப் பேசுகிற ஆசிரியர், இந்த இரு குழுவினருக்கும் இடையே உள்ள முரண்களையும், வேறுபாடுகளையும், உரசலையும் எடுத்துரைக்கிறார். இந்நூலின் பின்புலம் பேரரசர் அலெக்ஸாண்டர் தெ கிரேட் முன்மொழிந்த கிரேக்கமயமாக்கல். கிரேக்க மொழி, கிரேக்க பண்பாடு, கிரேக்க சமயம், கிரேக்க மெய்யியல் எனப் புகுத்தப்பட்ட அந்நாள்களில் சில யூதர்கள் இவற்றின்பால் ஈர்க்கப்பட்டு, எபிரேயம் விடுத்து கிரேக்கம் பற்றிக்கொள்கிறார்கள். இவர்கள் ‘இறைப்பற்றில்லாதவர்கள்’ அல்லது ‘பொல்லார்.’ யாவே கடவுளையும், எபிரேய மொழியையும், யூத சமயம் முன்மொழிந்த சட்டம் இறைவாக்குகளையும் பற்றிக்கொண்டவர்கள் ‘நீதிமான்கள்’ அல்லது ‘நல்லார்.’

பொல்லாரைவிட நல்லார் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், தங்களுடைய கண்களில் விழுந்த தூசி போலவும், தங்கள் செருப்புகளுக்குள் நுழைந்த குட்டிக்கல் போலவும் அவர்களை உணர்கிறார்கள் பொல்லார்கள். அவர்களை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்களுக்குப் பயந்து அவர்கள் பக்கம் சேர்ந்தவர்களை மீண்டும் இறைவன் பக்கம் கொண்டுவருகிற விரும்புகிற ஆசிரியர், அவர்களுக்கு ஊக்கம் தருகிறார். நல்லாருக்குக் கடவுள் துணைநிற்கிறார் என்றும், நல்லாருக்குக் கைம்மாறு கிடைக்கும் என்றும் அவர்கள் உணர வேண்டும்.

பொல்லார் செய்கிற தீங்குகள் எவை? (அ) நீதிமான்களின் இருத்தல் தங்களுக்குத் தொல்லை என நினைக்கிறார்கள். (ஆ) நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருக்கிறார்கள். (இ) நீதிமான்களின் அழிவுக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஆனால், இறுதியில் கடவுளின் மறைவான திட்டமே வெல்கிறது என வாசகம் நிறைவுபெறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவுக்கும் யூதர்களுக்குமான முதல் மோதல் நிறைவுக்கு வருகிறது. முடக்குவாதமுற்ற நபர் ஓய்வுநாளில் நலம் பெற்ற நிகழ்வு தொடங்கி, அப்பம் பலுகுதல் நிகழ்வில் தொடர்ந்த வாக்குவாதத்தின் இறுதியில், அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயற்சி செய்கிறார்கள்.

எருசலேம் நகரத்தவர் இயேசுவைப் பற்றிய குழப்பமான எண்ணங்களில் இருக்கிறார்கள். அவரை மெசியா என ஏற்றக்கொள்ளத் தயங்குகிறார்கள். அவரைத் தங்கள் கட்டுக்குள் கொண்டுவர விரும்புகிறார்கள்.

இவ்விரண்டு வாசகங்களிலும், நல்லாருக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் பொல்லார்.

நமக்கு எந்தத் தீங்கு நேர்ந்தாலும், ‘உடைந்த உள்ளத்தோர்க்கு அருகில் இறைவன் உள்ளார்’ என்ற ஆறுதல் பெறுதலும், அவரே அனைத்தையும் தம் திருவுளத்திற்கேற்றாற்போல நடத்துகிறார் என்ற உணர்வைப் பெறுதலும் இன்று நாம் கற்க வேண்டிய பாடங்கள்.

நிற்க.

நல்லார்-பொல்லார் முரண் இயல்பானது. பொல்லாரின் தீங்கை நாம் எதிர்கொள்கிறோம். சில நேரங்களில் நாமும் பொல்லார்போல நல்லாருக்குத் தீமை செய்கிறோம். நன்மை செய்யத் தவறுவதும், தீமையைத் தடுத்து நிறுத்தாததும் ஏற்புடையவை அல்ல. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 55).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment