இன்றைய இறைமொழி. வியாழன், 14 மார்ச் 2024. கடின உள்ளம்

இன்றைய இறைமொழி
வியாழன், 14 மார்ச் 2024
தவக்காலம் நான்காம் வாரத்தின் வியாழன்
விடுதலைப்பயண நூல் 32:7-14. யோவான் 5:31-47

கடின உள்ளம்

முதல் ஏற்பாட்டு நூல்களில் இஸ்ரயேல் மக்களைப் பற்றிச் சாடும் இடங்களில் எல்லாம் அவர்களைப் பற்றிய குறிப்பு ‘வணங்காக் கழுத்தினர்’, ‘பிடிவாத உள்ளத்தினர்,’ ‘கடின உள்ளத்தினர்’ என்று உள்ளது. ‘வணங்காக் கழுத்து’ என்பது ஒரு விவசாய உருவகம். கடினமான கழுத்து நுகம் அமர்வதற்கு ஏற்றது அல்ல. கடினமான கழுத்து உள்ள மாட்டை வண்டியிழுக்கவோ, நிலத்தை உழுவதற்கோ பயன்படுத்துவது எளிதன்று. மேலும், ‘கடினமான கழுத்து’ என்பது ‘திருப்புவதற்கு இயலாத’ எனவும் பொருள் தரப்பட்டது.

முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் தம் வியத்தகு செயல்களால் இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவித்தார் என்பதை மறக்கிற இஸ்ரயேல் மக்கள் அவர்களுக்கென பொன்னாலான கன்றுக்குட்டியை செய்து வணங்கினார்கள். மோசே அவர்களுக்காக பரிந்துபேசி இறைவனின் இரக்கத்தைப் பெற்றுத் தருகிறார்.

யோவான் நற்செய்தியில் சான்று பகர்தல் என்பது ஒரு முக்கியமான கருத்துரு. இயேசுவை அவருடைய சமகாலத்தவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். ஒருவர் ஒரு நற்செயல் செய்தால், அது அவரால் செய்யப்பட்டது என்பதற்கு இன்னொருவர் சான்றளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய மரபாக இருக்கிறது.

இயேசு தம் சமகாலத்து மக்களிடம் பேசும்போது தனக்கான சான்று என நான்கு விடயங்களைக் குறிப்பிடுகின்றார்:

ஒன்று, யோவான். இவர் உண்மைக்குச் சான்று பகர்ந்தார் என்று சொல்லும் இயேசு, அந்த உண்மை என்பது தானே என்று மறைமுமாகக் குறிப்பிடுகின்றார்.

இரண்டு, என்னுடைய செயல்களே சான்று. தந்தையின் திருவுளப்படி இயேசு இங்கே ஆற்றும் நற்செயல்கள் சான்றாக அமைகின்றன.

மூன்று, என்னை அனுப்பிய தந்தை சான்று. இந்த தந்தை இயேசுவைத் தவிர மற்றவர்களுக்கு மறைவாக இருக்கின்றார்.

நான்கு, மறைநூல் சான்று. மறைநூல் வாழ்வு தருவதாக இருந்தாலும் அவர்கள் இயேசுவைத் தேடி வரத் தயங்கினர்.

மேற்காணும் நான்கு சான்றுகளில், முதல் சான்றை, ‘மனிதர் தரும் சான்று’ எனக் குறிப்பிடுகின்றார் இயேசு. முதற் சான்று நேரிடையாக இருந்தாலும், மக்கள் சிறிது காலமே ‘அந்த ஒளியில் தங்க விரும்பினர்’ என்று அவர்களுடைய கடின உள்ளத்தைக் கடிந்துகொள்கின்றார் இயேசு.

மேலும், மோசேயையும் மக்கள் நம்பவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார் இயேசு.

இங்கே, நம்புதல், ஏற்றுக்கொள்தல், சான்றுகொள்தல் என்ற மூன்று வார்த்தைகளாக கருத்துரு நகர்கிறது.

இயேசுவை அவருடைய சமகாலத்தவர்கள் நம்பவில்லை. ஆகையால், அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. விளைவு, அவர்கள் சான்று பகரவில்லை. மொத்தத்தில் அவர்களுடைய கடின உள்ளத்தால் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். நம்புவதற்குப் போதுமான சான்றுகள் இருந்தும் அவர்கள் இயேசுவை நம்பாமல் கடின உள்ளம் கொண்டிருக்கிறார்கள். பழைய ஏற்பாட்டில் மோசே இஸ்ரயேல் மக்கள்சார்பாகப் பேசி கடவுளின் இரக்கத்தைப் பெற்றுத் தருகிறார். புதிய ஏற்பாட்டில் மோசே மக்களைக் குற்றம் சுமத்துகிறார். ஏனெனில், அவர்கள் சான்றுகளை ஏற்றுக்கொள்ளவில்லை.

இஸ்ரயேல் மக்களும் இயேசுவின் சமகாலத்து யூதர்களும் வணங்காகக் கழுத்துடன் இருக்கக் காரணங்கள் எவை?

(அ) தாங்களாக ஒன்றை நினைத்து அதுவே சரி என முடிவு எடுத்துக்கொள்கிறார்கள்.
(ஆ) தாங்கள் கடவுளை விட, இயேசுவை விட ஆற்றல் மிகுந்தவர்கள் என நினைத்து, கடவுளையும் இயேசுவையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
(இ) உறுதியற்ற அல்லது பிளவுபட்ட மனம் கொண்டிருக்கிறார்கள்.

நிற்க.

நம் நம்பிக்கை வாழ்வில் நாம் களைய வேண்டிய பெரிய எதிர்மiறைச் சூழல் நம் கடின உள்ளமே. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 54).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment