இன்றைய இறைமொழி. திங்கள், 11 மார்ச் 2024. அவரிடம் வாழ்வு

இன்றைய இறைமொழி
திங்கள், 11 மார்ச் 2024
தவக்காலம் நான்காம் வாரத்தின் திங்கள்
எசாயா 65:17-21. யோவான் 4:43-54

அவரிடம் வாழ்வு

தன் நற்செய்தியின் முகவுரையில், இயேசுவைப் பற்றி எழுதுகிற யோவான், ‘அவரிடம் வாழ்வு இருந்தது. அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது’ (யோவா 1:4) என எழுதுகிறார். இயேசுவின் வல்ல செயல்களை அறிகுறிகள் என அழைக்கிற யோவான், அவற்றில் ஏழு அறிகுறிகளைப் பதிவு செய்கிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் இயேசு ஆற்றிய இரண்டாவது வல்ல செயலை (அறிகுறியை) வாசிக்கிறோம்.

கானாவூர் திருமண நிகழ்வில் தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றிய அறிகுறி வழியாக, தம்மிடம் நிறைவு இருக்கிறது என்பதை வெளிப்படுத்திய இயேசு, இரண்டாவது அறிகுறி வழியாக தம்மிடம் வாழ்வு இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறார்.

அரச அலுவலர் ஒருவர் தன் மகனுக்கு நலம் வேண்டி இயேசுவிடம் வருகிறார். ‘ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்!’ என்று தம்மை அழைத்தவரிடம், ‘நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்’ என அனுப்புகிறார் இயேசு.

இந்த அறிகுறி வழியாக மூன்று விடயங்களை வெளிப்படுத்துகிறார் நற்செய்தியாளர்: (அ) இயேசு நோய்கள்மேலும், இறப்பின்மேலும் அதிகாரம் கொண்டிருந்தார். (ஆ) தூரத்திலிருந்தும் அவரால் வல்ல செயல்கள் ஆற்ற முடியும். (இ) இயேசு ஆற்றிய அறிகுறிகளைக் கண்டுகொள்ள நம்பிக்கை அவசியம். மேலும், அறிகுறிகள் வழியாக நம்பிக்கையை ஒருவர் ஆழப்படுத்திக்கொள்ள முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில், ‘புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்’ எனச் சொல்கிற ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேல் மக்கள் பெறவிருக்கிற நிறைவையும், நோய்களற்ற நல்வாழ்வையும், நீடிய ஆயுளையும், அவர்கள் அனுபவிக்கிற அமைதியையும் இறைவாக்கினர் எசாயா வழியாக எடுத்துரைக்கிறார்.

இவ்விரு வாசகங்களும் உரைப்பவை ஒன்றே: கடவுளிடம் வாழ்வு இருக்கிறது. கடவுளை நோக்கி வருபவர்கள் வாழ்வு பெறுவார்கள்.

தவக்காலத்தில் இருக்கும் நமக்கு இவ்வாசகங்கள் தரும் செய்தி என்ன?

(அ) ஆண்டவரின் உயிர்ப்பை எதிர்நோக்கியிருக்கிற நாம், நம் கடவுள் வாழ்வின் கடவுள் என்பதை மனத்தில் இருத்த வேண்டும். இறப்பு அவர்மேல் வெற்றி கொள்ள இயலவில்லை எனில், நம்மேலும் அது வெற்றி கொள்ள இயலாது. கடவுளோடு இணைந்திருக்கிற ஒருவர் எப்போதும் வாழ்வுடன் இருக்கிறார்.

(ஆ) வாழ்வின் கடவுளோடு இருக்கிற நாம் இறப்பின் காரணிகளை விடுக்க வேண்டும். தயக்கம், பயம் கொண்டவராக இயேசுவிடம் வருகிற அரச அலுவலர் திரும்பிச் செல்லும்போது நம்பிக்கையுடன் செல்கிறார்.

(இ) நம் இருத்தல் வழியாக மற்றவர்களுக்கு நாம் வாழ்வை வழங்க வேண்டும். நம் உடனிருப்பில் அனைவரும் மகிழ்வதோடு நம் வழியாக தங்கள் வாழ்க்கையை அவர்கள் புதுப்பித்துக்கொள்ளவும் மேம்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இறப்பைப் பற்றிய சிந்தனைக்கான காலம் இது என்றாலும், அவர் உயிர்த்துவிட்டார் என்பதையும், அவர் வாழ்வின் கடவுளாக நம்மோடு இருக்கிறார் என்பதையும் நாம் மறந்துவிட வேண்டாம்.

நிற்க.

‘யூபிலி 2025-ஐ நோக்கிய நம் பயணம் இயேசுவை நோக்கிய பயணமாக இருத்தல் வேண்டும். அவரை நோக்கி வந்த அரச அலுவலரை அவருடைய இல்லத்திற்கே திருப்பி அனுப்பியதுபோல, நம்மையும் இயேசு நம் இல்லத்திற்கு அனுப்புகிறார். அவரை நோக்கிய நம் பயணம் நம்மை நோக்கியே, நம் இல்லம் நோக்கியே திரும்புகிறது.’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 51).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment