இன்றைய இறைமொழி. செவ்வாய், 12 மார்ச் 2024. அம்மனிதர் நலமடைந்தார்

இன்றைய இறைமொழி
செவ்வாய், 12 மார்ச் 2024
தவக்காலம் நான்காம் வாரத்தின் செவ்வாய்
எசேக்கியேல் 47:1-9, 12. யோவான் 5:1-3அ, 5-16

அம்மனிதர் நலமடைந்தார்

யோவான் நற்செய்தியில் இயேசு நிகழ்த்துகிற மூன்றாவது அறிகுறியை இன்று வாசிக்கின்றோம். இயேசுவின் முதல் மற்றும் இரண்டாம் அரும் அடையாளங்களுக்குப் பின்னர் சீடர்களும் மக்களும் அவர்மேல் நம்பிக்கை கொள்கின்றனர். ஆனால், மூன்றாவது முதல் ஏழாவது வரை உள்ள அறிகுறிகள் முந்தையவற்றை விட இரண்டு நிலைகளில் வேறுபடுகின்றன: ஒன்று, இனி வரும் ஒவ்வோர் அரும் அடையாளத்திற்குப் பின்னரும் இயேசு ஒரு நீண்ட உரை ஆற்றுவார். இரண்டு, அவரைச் சுற்றி இருப்பவர்கள் அவர்மேல் நம்பிக்கை கொள்வதற்குப் பதிலாக அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுவர்.

இயேசுவின் மூன்றாவது வல்ல செயல் எருசலேமில் நடக்கிறது. பெத்சதா குளம் அருகே வருகின்ற இயேசு முப்பத்து எட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரை அங்கு கண்டு அவருக்கு நலம் தருகின்றார். அந்தச் செயல் ஓய்வு நாளில் நடந்தேறியதால் யூதர்கள் இயேசுவைத் துன்புறுத்தத் தொடங்கினார்கள்.

பாஸ்கா (உயிர்ப்பு) பெருவிழாவில் பயன்படுத்தப்படுகிற இரண்டாவது பெரும் அடையாளம் (முதல் பெரும் அடையாளம் ஒளி) தண்ணீர். விடுதலை, மீட்பு, புது வாழ்வு ஆகியவற்றைக் குறித்துக் காட்டுகிறது தண்ணீர்.

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசேக்கியேல் காண்கிற இறுதிக் காட்சியை வாசிக்கின்றோம். ஆண்டவரின் மாட்சி எருசலேமை விட்டு நீங்கியிருந்தது. ஆனால், பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின்னர் மீண்டும் ஆண்டவரின் மாட்சி எருசலேமை நிரப்புகிறது. தண்ணீர் உருவகத்தின் வழியாக ஆண்டவரின் மாட்சி அந்த நகருக்கு நலமும், வளமும், உயிரும் தந்தது என்பதைக் காட்சியாகக் காண்கிறார் இறைவாக்கினர்.

எருசலேமில் ஊற்றெடுக்கும் தண்ணீர் நலமும் வளமும் உயிரும் தருகிறது.

வானதூதர் இறங்கி கலக்கிவிடும் பெத்சதா குளத்துத் தண்ணீரும் நலம் தருகிறது.

வானதூதர் இறங்கிக் கலக்குமுன், இறைமகனே அங்கு வருகிறார். வாழ்வு தரும் தண்ணீராக சமாரியப் பெண்ணுக்குத் தன்னை முன்வைத்தவர், நலம் தரும் தண்ணீராக இங்கே மாறி நிற்கிறார். இயேசுவின் வருகையினால் தண்ணீர் பெத்சதா குளத்தின் ஐந்து மண்டபங்களிலும் பாய்ந்தோடுகிறது.

முப்பத்தெட்டு ஆண்டுகளாய் படிகளில் கிடந்தவர் நலம் பெறுகிறார். ஆனால், தங்களுடைய ஓய்வுநாள் சட்டங்கள் என்னும் படிகளில் கிடந்த யூதர்கள் நலம் பெறாமல் நிற்கின்றனர்.

இங்கே, ‘யூதர்கள்’ என்னும் வார்த்தை, ஓர் இனத்தை அல்ல, மாறாக, இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்களைக் குறிக்கிறது. மேலும், ‘பாவம்’ என்பது இயேசுவின் மேல் நம்பிக்கை இல்லாத நிலையைக் குறிக்கிறது. ஆக, தம்மேல் நம்பிக்கை கொள்ளுமாறு அந்த மனிதரை அழைக்கிறார் இயேசு.

இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) பாழாய்க் கிடந்த எருசலேம் நகரம் ஆண்டவரின் வருகையால் தண்ணீர் நிரம்பிய நகரமாக மாறும். முப்பெத்தெட்டு ஆண்டுகளாய் தண்ணீருக்கு அருகில் செல்ல இயலாதவர் இயேசு என்னும் வாழ்வுதரும் தண்ணீரால் நலம் பெறுகிறார். ஆண்டவருடைய உடனிருப்பு நம் வாழ்விலும் மாற்றத்தைக் கொண்டுவரும்.

(ஆ) நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் பெயரில்லாத அந்த நபர் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் ஒரே இடத்தில் கிடக்கிறார். அவருக்கு அந்த வாழ்க்கை பழகிப்போய்விட்டது. இன்று நான் என் வாழ்வில் பழகிப்போன நிலைகள் எவை?

(இ) என் கண்முன் ஒருவர் நலமும் வளமும் வாழ்வும் பெறும்போது நான் ஆற்றும் எதிர்வினை என்ன? அதைக் குறித்து, அவரைக் குறித்து நான் மகிழ்கிறேனா? அல்லது அன்றைய யூதர்கள்போல இடறல்படுகிறேனா?

நிற்க.

‘முப்பத்தெட்டு ஆண்டுகளாய் நோய்வாய்ப்பட்டிருந்தவர் நலம் பெற்றதைக் கண்டு மகிழ்வதற்குப் பதிலாக, அவரைப் பற்றி இடறல்படுகிறார்கள் யூதர்கள். அவர்கள் கண்முன் நடக்கும் மாற்றம் அவர்களுக்கு எரிச்சலைத் தருகிறது. கூட்டியக்கத் திருஅவையில் நிகழும் மாற்றங்கள் தேவையானவை என்றாலும், பாரம்பரியத்தைப் பற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு அவை இடறலாகவே தோன்றும்.’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 52).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment