இன்றைய இறைமொழி. சனி, 9 மார்ச் 2024. இரக்கம் உணர்தல்

இன்றைய இறைமொழி
சனி, 9 மார்ச் 2024
தவக்காலம் மூன்றாம் வாரத்தின் சனி
ஓசேயா 6:1-6. லூக்கா 18:9-14

இரக்கம் உணர்தல்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் இரண்டு பேரைச் சந்திக்கின்றோம். ஒருவர் ஆலயத்தின் உள்ளே இருக்கிறார். இன்னொருவர் ஆலயத்தின் வெளியே நிற்கிறார். ஆலயத்தின் உள்ளே நிற்பவர் பரிசேயர். வெளியே நிற்பவர் வரிதண்டுபவர். இருவருமே இறைவேண்டல் செய்கின்றனர். முதலாம் நபர் தன்னை மட்டும் அறிந்தவராக இருக்கின்றார். இரண்டாம் நபர் தன்னையும் இறைவனையும் அறிந்தவராக இருக்கிறார். இரண்டாம் நபர் கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்புகின்றார்.

முதலாம் நபர் தன்னுடைய செயல்களால் இறைவனுக்கு ஏற்புடையவராக விரும்புகின்றார். இரண்டாம் நபரோ இறைவனின் இரக்கத்தால் அவருக்கு ஏற்புடையவராகின்றார்.

முதலாம் நபர் தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு, அவர்களைவிட தானும் தன் அறநெறியும் மேன்மையானது என மொழிகிறார். இரண்டாம் நபருடைய ஒப்பீடு கடவுளுக்கும் அவருக்குமானதாக இருக்கிறது. கடவுள்முன்னிலையில் நிற்கும் தனக்கு அந்த நிலை சாத்தியமல்ல எனச் சொல்லி நகர்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், ஓசேயா இறைவாக்கினர் தன் மக்களிடம், ‘நம்மைக் காயப்படுத்தியவர் அவரே. அவரே நம்மைக் குணமாக்குவார்’ என்று அழைத்து இறைவனை நோக்கி அழைக்கின்றார். ‘நான் விரும்புவது பலியை அல்ல. இரக்கத்தையே! எரிபலிகளை விட கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகிறேன்’ என்கிறார் ஆண்டவராகிய கடவுள்.

கடவுளுடைய இரக்கத்தை அறியவும், அவருடைய இரக்கத்தை மையப்படுத்திய இறைவேண்டல் செய்யவும், அவர் முன்னிலையில் நம்மைத் தாழ்த்தவும் கற்றுக்கொள்வோமாக!

நிற்க.

‘யூபிலி 2025-க்கான தயாரிப்பாக அமைகிற இறைவேண்டல் ஆண்டில், இறைவேண்டல் பற்றிய இயேசுவின் உருவகங்களை நாம் கற்றுக்கொள்தல் நலம். இறைவனுக்கு நாம் ஏற்புடையவராவதற்கு வழிசெய்கிறது இறைவேண்டல். தாழ்ச்சியான இறைவேண்டலும், கடவுளின் இரக்கத்தை மையப்படுத்திய இறைவேண்டலும் அவரை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன.’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 50).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment