இன்றைய இறைமொழி
வியாழன், 7 மார்ச் 2024
தவக்காலம் மூன்றாம் வாரத்தின் வியாழன்
எரேமியா 7:23-28. லூக்கா 11:14-23
வலியவர்
இயேசு தம் அதிகாரத்துடன் பேயை ஓட்டுகிறார். பேச்சிழந்தவர் பேசுகிறார். இதைக் காண்கிற மக்கள் இரண்டு வகை எதிர்வினை ஆற்றுகிறார்கள்: சிலர் வியந்து பார்க்கிறார்கள். பரிசேயர்கள் சிலர் இயேசுவின் அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். பேய்களின் தலைவனான பெயல்செபூலைக் கொண்டு இயேசு பேய்களை ஓட்டுகிறார் எனச் சொல்வதன் வழியாக, இயேசு கடவுளிடமிருந்து வந்தவர் என மறுப்பதோடு, அவரை தீய ஆவி பிடித்தவர் எனவும் சொல்கிறார்கள்.
பரிசேயர்களுக்குப் பதில் தருகிற இயேசு இரண்டு சொல்லோவியங்களை முன்மொழிகிறார்: ஒன்று, ‘தனக்குத் தானே பிளவுபடும் வீடு.’ இரண்டு, ‘அரண்மனையைக் காக்கும் வலியவர்.’ பிளவுபடாத வீடு நிலைத்திருக்கும். வலியவரை அழிக்க வேண்டும் எனில், அவரைவிட வலிமை பெற்றிருக்க வேண்டும். தீமை என்ற வலிமையை அழிக்க வந்த இயேசு அதனிலும் வலியவர்.
இயேசுவின் அதிகாரத்தை பரிசேயர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இவ்வாறாக, இயேசுவோடு இல்லாமல் அவருக்கு எதிராக இருக்கிறார்கள்.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுளுக்கு எதிராக இஸ்ரயேல் மக்கள் செயல்பட்டதை எடுத்துரைக்கிறார் இறைவாக்கினர் எரேமியா. அவர்களுடைய பிடிவாத குணத்தையும் தீய உள்ளத்தையும் ஆண்டவராகிய கடவுள் கடிந்துகொள்கிறார்.
இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?
(அ) இயேசு வழியாக நமக்கும் தீமையின்மேல் அதிகாரம் உண்டு. தீமையின்மேல் அதிகாரம் செலுத்துவதற்குப் பதிலாக தீமைக்கு நாம் உடன் நிற்கும்போதெல்லாம் தீமை நம்மேல் அதிகாரம் செலுத்த அனுமதிக்கிறோம்.
(ஆ) இன்று எனக்கு நானே பிளவுபட்டு நிற்கும் பொழுதுகளை நான் எண்ணிப் பார்க்க வேண்டும். எனக்கு நானே பிளவுபடும் ஒவ்வொரு நிமிடமும் நான் வலுவிழந்து போகிறேன்.
(இ) வலியவனைவிட நான் வலிமை பெற்றிருக்க வேண்டுமெனில், அவருடைய வலிமையையும் என்னுடைய வலிமையையும் ஆராய்ந்து, சீர்தூக்கி அதற்கேற்றாற்போல என்னையே வலுப்படுத்த வேண்டும்.
நிற்க.
‘கூட்டியக்கத் திருஅவையின் பலம் நாம் ஒருவர் மற்றவர்மேல் காட்டுகிற வேற்றுமையில் அல்ல, மாறாக, ஒற்றுமையிலேயே அமைந்துள்ளது.’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 48).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment