இன்றைய இறைமொழி
புதன், 6 மார்ச் 2024
தவக்காலம் மூன்றாம் வாரத்தின் புதன்
இணைச்சட்ட நூல் 4:1, 5-9. மத்தேயு 5:17-19
எளிய தொடக்கம்
விண்ணரசில் பெரியவர் ஆவதற்கான வழி திருச்சட்டத்தைக் கடைப்பிடித்துக் கற்பிப்பதே என மொழிகிறார் இயேசு.
சட்டங்களும் நெறிமுறைகளும் மனித வாழ்வைக் கட்டமைக்கின்றன. சட்டங்களுக்கும் நமக்கும் உள்ள உறவை மூன்று நிலைகளில் பார்க்கலாம்: (அ) சட்டங்களை மீறுதல், (ஆ) சட்டங்களைக் கடைப்பிடித்தல், (இ) சட்டங்களை நிறைவேற்றுதல்.
எடுத்துக்காட்டாக, வாகனம் ஓட்டிச் செல்லும் ஒருவர் தனக்கு எதிரே சிவப்பு விளக்கு எரிந்தாலும் தொடர்ந்து வாகனம் ஓட்டுகிறார் எனில், அவர் போக்குவரத்துச் சட்டத்தை மீறுகிறார் எனக் கொள்கிறோம். ஆனால், அவர் தன் வாகனத்தை நிறுத்தினால் அவர் சட்டத்தைக் கடைப்பிடிக்கிறார். நிறைவேற்றுதல் என்பது, வாகனத்தை இயக்குவதற்கான பச்சை விளக்கு எரிந்தாலும், தனக்கு முன்னே செல்கிற ஒரு குழந்தை அல்லது வயதானவருக்காக அவர் வண்டியை நிறுத்தினால் அவர் சட்டத்தை நிறைவேற்றுகிறார். சட்டம் முன்மொழிகிற பிறர்நலத்தையும் நன்மையையும் மேன்மையையும் அவர் காத்துக்கொள்கிறார்.
இயேசுவுக்கும் திருச்சட்டத்துக்கும் உள்ள உறவு மூன்றாவது நிலையில் உள்ளது. திருச்சட்டம் முன்மொழிகிற தனிநபர் நன்மையை மட்டுமே இயேசு நாடுகிறார். மேலும், திருச்சட்டத்தின் எழுத்துகளைத் தாண்டி அதன் ஆன்மாவைத் தழுவிக்கொள்கிறார்.
இயேசுவின் சீடர்கள் மூன்றாவது நிலையை அடைய முடியவில்லை என்றாலும், திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தல் என்னும் இரண்டாவது நிலையையாவது பற்றிக்கொள்ள வேண்டும் என்பது இயேசுவின் பாடமாக இருக்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுடன் ஏற்படுத்திய உறவு ஒன்றிப்பின் அடையாளமாக இருக்கிற திருச்சட்டம் அவர்களுக்கு புதிய அடையாளத்தையும் பணியையும் தருகிறது என மொழிகிறார் மோசே.
ஆண்டவராகிய கடவுள் தம் மக்களுடன் ஏற்படுத்திக்கொண்ட உறவின் வெளிப்பாடாக இருக்கிறது திருச்சட்டம். மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, மாறாக, அவர்களை நெறிப்படுத்துவதற்காகவே கட்டளைகள் தரப்பட்டுள்ளன. மேலும் கட்டளைகள் தனிமனிதரின் சுதந்திரத்தை (கட்டின்மையை) ஊக்குவிக்கின்றன.
பத்துக் கட்டளைகள், அவற்றின் சுருக்கமான இரண்டு கட்டளைகள், அன்புக் கட்டளை, திருஅவையின் விதிமுறைகள், நாட்டின் சட்டதிட்டங்கள் என நாம் அனைவரும் சட்டங்களுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறோம். சட்டத்தைக் கடைப்பிடித்தல் வழியாக நம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, குழும வாழ்வில் ஒருவர் மற்றவரின் நலம் பேணுதலை முன்மொழிகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.
நிற்க.
‘நாம் கொண்டிருக்கும் சட்ட திட்டங்கள் ஒருவர் மற்றவரின் நலம் நோக்கி நம்மை நகர்த்துகின்றன. தன்னலம் விடுத்துப் பிறர்நலம் பேணுவதற்கு இவை வழிசெய்கின்றன.’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 47).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment