இன்றைய இறைமொழி. செவ்வாய், 5 மார்ச் 2024. தந்தையும் சகோதரர்களும்

இன்றைய இறைமொழி
செவ்வாய், 5 மார்ச் 2024
தவக்காலம் மூன்றாம் வாரத்தின் செவ்வாய்
தானியேல் 1:2, 11-19. மத்தேயு 18:21-35

தந்தையும் சகோதரர்களும்

இன்றைய வாசகப் பகுதி, மத்தேயு நற்செய்தியாளரின் ‘குழுமப் பொழிவு’ பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மத்தேயு நற்செய்தியைப் பொருத்தமட்டில் சீடர்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள். ‘உங்கள் விண்ணகத் தந்தை’ என்பது மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் சொல்லாடல். இச்சொல்லாடல் மறைமுகமாக ஒருவர் மற்றவரை சகோதர, சகோதரி என்னும் உறவில் இணைக்கிறது.

குழும உறவில் வருகிற முதன்மையான பிரச்சினை ஒருவர் மற்றவருக்கு இடையே இருக்கிற மனத்தாங்கல் அல்லது வருத்தம். இந்த வருத்தம் ஏற்படக் காரணம் மற்றவர்கள் நமக்கு எதிராக இழைக்கும் குற்றம் அல்லது பாவம்.

இந்தப் பின்புலத்தில், தம் சகோதர, சகோதரிகளை எத்தனை முறை மன்னிக்க வேண்டும் எனக் கேட்கிறார் பேதுரு. ‘எழுபது தடவை ஏழுமுறை’ (அதாவது, தொடர்ந்து) என மொழிகிற இயேசு மன்னிக்க மறுத்த பணியாள் பற்றிய எடுத்துக்காட்டையும் தருகிறார்.

மன்னிப்பு என்பது சாத்தியமாக வேண்டுமெனில், நாம் ஒருவர் மற்றவரை சகோதரர், சகோதரி என்னும் குடும்ப உறவில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டில் வருகிற அரசன் தன் பணியாளனை மன்னிக்கிறார். ஏனெனில், அவனைத் தன் குடும்பத்தில் ஒருவராக நினைத்து மன்னிக்கிறார் அரசர். அரசநிலையிலிருந்த ஒருவர் பணியாளர் நிலைக்கு இறங்கி வந்து குடும்ப உறவை ஏற்படுத்திக்கொள்கிறார். ஆனால், பணியாளரோ தன் சக பணியாளரைத் தன் குடும்ப உறுப்பினராக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். எனவே, அவரால் மற்றவரை மன்னிக்க இயலவில்லை.

கடவுளிடமிருந்து பெரிய மன்னிப்பை பெறுகிற நாம் சிறிய அளவிலாவது மற்றவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், கடவுள் நம்மைத் தம் குடும்ப உறுப்பினராகக் கருதி இரக்கம் காட்டுவதுபோல நாமும் ஒருவர் மற்றவருக்கு இரக்கம் காட்ட வேண்டும்.

மன்னிப்பு என்னும் மதிப்பீட்டை நாம் எப்படி வாழ்வது?

(அ) இன்று பல நேரங்களில் குடும்ப அல்லது சகோதர உறவுகளில் மன்னிப்பு இல்லாத நிலை உள்ளது. தாயின் வயிற்றில் நாம் இருந்த சக-உதர (சகோதர) நிலையை எண்ணிப்பார்த்தால் நாம் யாரையும் எளிதாக மன்னித்துவிடலாம். ஒன்றுமில்லாத நிலையிலிருந்து நாம் இன்று இருக்கிற நிலைக்கு உயர்ந்து நிற்கிறோம் எனில், நம் தொடக்கத்தை எப்போதும் மனத்தில் கொண்டு வாழ வேண்டும்.

(ஆ) மன்னிப்பு எண்ணில்லாத அளவு வழங்கப்பட வேண்டும். ஏனெனில், மன்னிப்பு பரிவிலிருந்து பிறக்கிறது. நீதியை முன்வைத்துப் பேசுபவர்கள் மன்னிக்க இயலாதவர்கள். நீதியைக் கடந்து இரக்கத்தை நோக்கிச் செல்பவர் எளிதாக மற்றவரை மன்னிக்கிறார்.

(இ) அரசர் தொடங்கிய மன்னிப்புச் செயலைப் பணியாளர் தொடர இயலவில்லை. பணியாளரின் கடமை தலைவரின் செயலைத் தன் செயல் என மாற்றிக்கொள்வதே. கடவுள் தொடங்கிய இரக்கத்தின் செயலை நாம் தொடர்ந்து நம் வாழ்வில் செயல்படுத்த வேண்டும். கடவுள் நம் தந்தை எனில், நாம் ஒருவர் மற்றவருடைய சகோதர, சகோதரிகள் என்ற நிலையில் மன்னிப்புச் சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும். பிள்ளைகள் ஒருவர் மற்றவரை மன்னிப்பது தந்தையின் மன்னிப்பை அவர்கள் பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனையாக இருக்கிறது.

நிற்க.

‘கடவுளைத் தந்தை என அழைக்கிற நாம் ஒருவர் மற்றவரை சகோதர, சகோதரிகள் என வரவேற்று மகிழ்ந்தால் கூட்டுப்பொறுப்புணர்வு சாத்தியமாகும்.’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 46).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment