இன்றைய இறைமொழி
ஞாயிறு, 3 மார்ச் 2024
தவக்காலம் மூன்றாம் ஞாயிறு
விடுதலைப் பயணம் 20:1-17. 1 கொரிந்தியர் 1:22-25. யோவான் 2:13-25
சிலுவையின் புதிய பொருள்
இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கும் தங்களுக்கும் உள்ள நெருக்கத்தின் அடையாளமாகக் கருதிய இரு பெரும் அமைப்புகளை மாற்றி, சிலுவையை முன்மொழிகிறார் இயேசு.
முதல் அமைப்பு, பத்துக் கட்டளைகள். ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தம் சொந்த இனமாகத் தேர்ந்தெடுத்து அவர்களோடு சீனாய் மலையில் ஏற்படுத்திய உடன்படிக்கையின்போது வழங்கப்பட்டவை பத்துக் கட்டளைகள். இவற்றை இரு கட்டளைகளாகச் சுருக்குகிற இயேசு, ‘இறையன்பு, பிறரன்பு’ என மொழிகிறார் (காண். லூக் 10). தொடர்ந்து, தம் சீடர்களுடைய பாதங்களைக் கழுவுகிற நிகழ்வில், புதிய கட்டளையாக அன்புக் கட்டளையை முன்மொழிகிறார் இயேசு (காண். யோவா 13:34). ஒருவர் மற்றவரை அன்பு செய்வதே மொத்தக் கட்டளைகளின் நோக்கம் என சட்டங்கள் பற்றிய புரிதலுக்குப் புதிய விளக்கம் தருகிறார் இயேசு.
இரண்டாவது அமைப்பு, எருசலேம் கோவில். எதிரிகள் அனைவரையும் வெற்றிகொண்டு ஆண்டவர் தருகிற ஓய்வை அனுபவித்த தாவீது அரசர் ஆண்டவராகிய கடவுளுக்கு ஒரு கோவில் கட்ட விழைகிறார். தாவீதுடன் உடன்படிக்கை செய்துகொள்கிற ஆண்டவராகிய கடவுள் அவரோடு உடன்படிக்கை செய்துகொள்கிறார். சாலமோன் தமக்குக் கோவில் கட்டுவார் என அறிவிக்கிறார். சாலமோன் மிகப் பெரிய கோவிலைக் கட்டி எழுப்புகிறார். ஆண்டவருடைய பெயர் குடியிருக்கும் கோவில் மக்கள் நடுவில் கடவுளுடைய பிரசன்னத்தை உணர்த்தியது. பாபிலோனிய அடிமைத்தனத்தின்போது எருசலேம் ஆலயம் தரைமட்டமாக்கப்படுகிறது. பாரசீகப் பேரரசர் இஸ்ரயேல் மக்களை விடுவிக்கிறார். செருபாபேலின் தலைமையில் இரண்டாம் கோவில் கட்டி எழுப்பப்படுகிறது. இந்த இரண்டாவது கோவிலை பெரிய ஏரோது புதுப்பிக்கிறார். இக்கோவிலையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தூய்மைப்படுத்துகிறார்.
இயேசு கோவிலைத் தூய்மையாக்கும் நிகழ்வை நற்செய்தி வாசகத்தின் இறுதியில் – இயேசுவின் பாடுகளுக்கு முன்னர் – பதிவு செய்கிறார்கள் ஒத்தமைவு நற்செய்தியாளர்கள். இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்திய நிகழ்வு அவருடைய பாடுகள் உடனடியாகத் தொடங்குவதற்கான காரணமாக இருக்கிறது. யோவான் நற்செய்தியாளரோ, தன் நற்செய்தியின் தொடக்கத்திலேயே இந்நிகழ்வைப் பதிவு செய்கிறார். இவரைப் பொருத்தவரையில் பழைய கோவிலை மாற்றிவிட்டு, தம்மையே புதிய கோவிலாக முன்வைக்கிறார் இயேசு.
கடவுளையும் மனிதர்களையும் இணைக்கிற கோவில், காலப் போக்கில் பண்டப் பரிமாற்று இடமாக மாறுகிறது. கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே தூரம் உண்டாகிறது. இயேசு இத்தகைய கோவிலை மாற்றி, அந்த இடத்தில் தம்மை வைக்கிறார். இயேசுவின் உடலே கோவிலாக மாறுகிறது.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இக்கருத்துருவை எடுத்துக் கையாளுகிறார். இயேசு தம் உயிர்ப்பின் வழியாக அனைவரையும் அவருடன் இணைததுக்கொள்கிறார். இயேசுவின் உடல் வழியாக நாம் அனைவரும் கடவுளுக்கு அருகில் செல்கிறோம்.
இவ்வாறாக, இஸ்ரயேல் மக்களின் இரு பெரும் அடையாளங்களை – பத்துக் கட்டளைகள், எருசலேம் கோவில் – மாற்றுபவராக வருகிறார் இயேசு.
(அ) பத்துக் கட்டளைகள் என்னும் அடையாளம் மாறுவதற்கான காரணங்கள் எவை?
(1) பத்துக் கட்டளைகள் காலப் போக்கில் மனிதப் பாராம்பரிய விதிமுறைகளாக மாறி – ஏறக்குறைய 613 – மக்களை அடிமைப்படுத்தத் தொடங்கின.
(2) சட்டங்கள் வழியாக மனித மாண்பு பேணப்படுவதற்குப் பதிலாக சட்டங்கள் வழியாக மனித மாண்பு மீறப்பட்டது.
(3) சட்டங்கள் சுட்டிக்காட்டுகிற கடவுளைப் பற்றிக்கொள்வதை விடுத்து, சட்டங்களை மட்டுமே பற்றிக்கொண்டார்கள் மக்கள்.
(ஆ) கோவில் என்னும் அடையாளம் மாறுவதற்கான காரணங்கள் எவை?
(1) கோவில் என்பது வழிபடுகிற இடம் என்ற நிலை மாறி, வியாபாரம் செய்யும், பண்டங்களை மாற்றிக்கொள்ளும் இடம் என்ற நிலை உருவானது.
(2) கோவில் சார்ந்த சடங்குகள் அதிகம் முக்கியத்துவம் தரப்பட்டதே அன்றி, கோவிலில் உள்ள கடவுளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
(3) கோவில் அரசியல் தளமாக மாறிவிட்டது.
மெசியாவின் வருகையின்போது பத்துக்கட்டளைகளும் கோவிலும் மாற்றம் பெறும் என்பது ரபிக்களின் பாடம். மெசியாவாக வருகிற இயேசு, பத்துக்கட்டளைகளையும் கோவிலையும் தம் சிலுவையில் மாற்றிப் போடுகிறார்.
இரண்டாம் வாசகத்தில், சிலுவை என்ற அடையாளத்தை முன்மொழிகிற பவுல், ‘அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாகவும் இருக்கிறது. ஆனால், அழைக்கப்பட்டவர்கள் யூதரானாலும் கிரேக்கரானாலும் அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்’ என எழுதுகிறார்.
நாம் பயன்படுத்தும் சிலுவை என்னும் அடையாளத்தில் இரு திசைகள் உள்ளன. ஒன்று, மேல் நோக்கியது. இரண்டு, சமன் நோக்கியது. சிலுவையின் மேல் நோக்கிய பகுதி கடவுளோடும், சமன் நோக்கிய பகுதி ஒருவர் மற்றவரோடும் இணைக்கிறது. மேல்நோக்கிய பகுதியை கோவில் என்ற அடையாளத்தோடும், சமன் நோக்கிய பகுதியை பத்துக் கட்டளைகள் என்னும் அடையாளத்தோடும் நாம் இணைத்துக்கொண்டால், இயேசுவையே புதிய ஆலயமாகவும், அவர் வழங்கிய புதிய கட்டளையை நம் வாழ்வின் படிப்பினையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய ஞாயிறு நமக்கு வழங்கும் செய்தி என்ன?
(அ) வெறும் அடையாளங்களைக் கொண்டிருப்பதால் – பத்துக் கட்டளைகள், கோவில் – நாம் கடவுளோடும் ஒருவர் மற்றவரோடும் நெருக்கமாகிவிட முடியாது. இவை குறித்துக் காட்டுபவற்றையும் முன்மொழிபவற்றையும் பின்பற்ற வேண்டும்.
(ஆ) சிலுவை என்னும் அடையாளத்தை நாம் இந்நாள்களில் தியானித்துக் கொண்டாடுகிறோம். சிலுவை என்னும் அடையாளத்தின் வழியாக இயேசு பழைய அடையாளங்களை மாற்றுகிறார். சிலுவை குறித்துக்காட்டுகிற அன்பு, தற்கையளிப்பு, தியாகம் போன்றவை நம் வாழ்வாக வேண்டும்.
(இ) கடவுளோடும் ஒருவர் மற்றவரோடும் நெருக்கமாக மாறுவதற்கு இத்தவக்காலத்தில் நாம் எடுக்கும் முயற்சிகளை ஆய்ந்து பார்த்தல் நலம்.
‘ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன’ எனக் கடவுளைப் பற்றிக்கொள்ள முன்வருவோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment