இன்றைய இறைமொழி
வெள்ளி, 1 மார்ச் 2024
தவக்காலம் இரண்டாம் வாரத்தின் வெள்ளி
தொடக்க நூல் 37:3-4, 12-13, 17-28. மத்தேயு 21:33-43, 45-46
வெறுப்பை வெற்றிகொள்தல்!
இன்று புதிய மாதத்தின் முதல் நாள். கடந்த மாதம் முழுவதும் இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றி கூறுவோம். இப்புதிய மாதத்தில் அவருடைய பராமரிப்பை வேண்டுவோம்.
தவக்காலத்தின் மூன்றாவது வெள்ளிக் கிழமையான இன்று நாம் வெற்றிகொள்ள வேண்டியது வெறுப்பு. வெறுப்பு மற்றவர்களை – அவர் நமக்கு நெருக்கமானவர் என்றாலும் – அழிக்கும் கோர முகம் கொண்டது என்பதை இன்றைய வாசகங்களில் காண்கிறோம்.
முதல் வாசகத்தில் யோசேப்பின்மேல் வெறுப்பு கொள்கிற அவருடைய சகோதரர்கள் அவரை அழிக்கும் நோக்குடன் முதலில் அவரைக் கிணற்றில் தள்ளுகிறார்கள், பின்னர் மிதியானியர்களிடம் விற்கிறார்கள். யோசேப்பின் நற்குணம், அவருடைய தந்தை அவர்மேல் வைத்த தனி அன்பு ஆகியவை அவர்களிடம் பொறாமையைத் தூண்டுகிறது. அந்தப் பொறாமை கோபமாக உருவெடுக்கிறது. அவர்களுடைய கோபத்துடன் அவர்களுடைய கையறுநிலையும் சேர்ந்துகொள்கிறது. விளைவு, அவர்மேல் வெறுப்பு ஏற்படுகிறது. வெறுப்பு நம் சிந்தனையைச் சீர்குலைக்கிறது. ஆகையால்தான், யோசேப்பு தங்களுடைய சகோதரன் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். இரக்கத்தின் கதவுகளை அடைத்துவிடுகிறது.
நற்செய்தி வாசகத்தில், திராட்சைத் தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தின் உரிமையாளருக்கு உரியதைக் கொடுக்க மறுத்ததுடன், தலைவரின் பணியாளர்களுக்குத் தீங்கிழைத்து அவருடைய மகனைக் கொன்றுபோடுகிறார்கள். தலைவர்மேல் அவர் கொண்ட கோபத்தால் அவருடைய மகனை வெறுக்கிறார்கள். இந்நிகழ்வு உருவகமாக இயேசு நிராகரிக்கப்படுவதை எடுத்துரைக்கிறது. ஆகையால்தான், இந்த எடுத்துக்காட்டைக் கேட்கிற தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அவர்மேல் கோபம் கொள்கிறார்கள். இயேசுவைப் பிடிக்க வழிதேடுகிறார்கள்.
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் வெறுப்பு மேலோங்கி நின்றாலும், இறுதியில் கடவுளின் பராமரிப்பே வெற்றி பெறுகிறது என்னும் எதிர்நோக்கு நமக்குக் கிடைக்கிறது.
எகிப்தில் விற்கப்படுகிற யோசேப்பு அந்நாட்டின் ஆளுநராக உயர்ந்து அவருடைய சகோதரர்களின் நலம்பேணுபவராக மாறுகிறார்.
இயேசு தம் உயிர்ப்பின் வழியாகக் கட்டடத்தின் மூலைக்கல்லாக உயர்கிறார்.
இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடம் என்ன?
நம் உள்ளத்தில் தோன்றுகிற வெறுப்பு, பொறாமை, கசப்புணர்வை நாம் எப்படிக் கையாளுகிறோம்? விருந்தினர்கள் போல வருகின்ற அவை சொந்த வீட்டார்களாகத் தங்கிவிடுகிறார்கள். நாம் கொள்ளும் வெறுப்பு, கோபம், எரிச்சல், பதற்றம், பழிச்சொல் எனப் பல நிலைகளில் வெளிப்படுகிறது. வெறுப்பு ஓர் எதிர்மறை உணர்வாக இருக்கும்போதே அதை அழித்துவிடுதல் நலம். அது செயலாக மாறிவிட்டால் நிறுத்துவது கடினம். ஏனெனில், நம் செயல்களுக்கு நாமே நியாயம் கற்பிக்கத் தொடங்கிவிடுவோம்.
இயேசுவின் பாடுகள் வரலாற்றை வாசிக்கும்போது, வெறுப்பு என்னும் உணர்வு நிகழ்வுகள் முழுவதும் இழையோடிக் கிடப்பதைக் காண முடிகிறது. மனிதர்கள் ஏன் தங்கள் சக மனிதர்களைக் கொல்ல வேண்டும்? என்னும் கேள்வி எழுகிறது.
நிற்க.
தனிமனித வெறுப்பு என்பது வளர்ந்து, குழும வெறுப்பு, சமய வெறுப்பு, இன வெறுப்பு, வெறுப்பு அரசியல் என மாறி வருகிறது. மனிதர்களாகிய நாம் இணைந்து கடவுளை நோக்குவதை விடுத்து, ஒருவர் மற்றவரை நோக்கி நம் உள்ளங்களைத் திருப்பினால் வெறுப்பு வேகமாக வளர்கிறது. நாம் ஒருவரை ஒருவர் நோக்குவது அன்பு செய்வதற்காக மட்டும் இருக்கட்டும்! (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 43).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment