இன்றைய இறைமொழி
சனி, 2 மார்ச் 2024
தவக்காலம் இரண்டாம் வாரத்தின் சனி
மீக்கா 7:14-15, 18-20. லூக்கா 15:1-3, 11-32.
பரிவு கொண்டு
நல்லவை இரண்டை முன்மொழிந்து அவற்றில் ஒன்றைத் தெரிந்துகொள்ளச் சொன்னால் நாம் மிகவும் கஷ்டப்படுவோம். பரிவு ஒரு பக்கம், நீதி இன்னொரு பக்கம் என நிறுத்தி, இவற்றில் ஒன்றைத் தெரிவு செய்யச் சொன்னால் நாம் எதைத் தெரிந்துகொள்வோம்?
காணாமற்போன மகன் எடுத்துக்காட்டை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். நமக்கு மிகவும் அறிமுகமான வாசகப் பகுதி இது. இளைய மகன் தந்தையைவிட்டு, சகோதரனை விட்டுத் தூரமாகப் போகிறார். போகிற நபர் திரும்பி வர மாட்டார் என இருவருமே நினைத்தனர். ஆனாலும், தந்தை தன் மகனுக்காகக் காத்திருக்கிறார். இளைய மகனும் திரும்பி வருகிறார். இறந்து போன தன் மகன் மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளதாகக் கொண்டாடுகிறார் தந்தை. மூத்த மகன் – மூத்த சகோதரன் – இளைய சகோதரனைக் கொண்டாட மறுக்கிறான்.
‘தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்’ என மொழிகிறார் இயேசு.
பரிவு மற்றும் நீதி இரண்டு திசைகளில் பயணம் செய்கிறது என்பதை நாம் உணர்கிறோம்.
பரிவு என்பது முன்நோக்கிப் பயணிக்கிறது.
நீதி என்பது பின்நோக்கிப் பயணிக்கிறது.
‘இளைய மகன் திரும்பி வந்துவிட்டான். அவனை மீண்டும் இல்லத்திற்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவனுக்கென புதிய வாழ்க்கை இருக்கிறது’ என உணர்கிறது தந்தையின் பரிவு.
‘இவன் விலைமகளிரோடு சேர்ந்து சொத்தை எல்லாம் அழித்து விட்டான். இவனை மீண்டும் எப்படி இல்லத்திற்குள் அனுமதிப்பது?’ எனக் கேட்கிறது சகோதரனின் நீதி.
‘இவனுக்கு என்ன நடக்கும்?’ எனப் பார்க்கிறது பரிவு.
‘இவனுக்கு என்ன நடந்தது?’ எனப் பார்க்கிறது நீதி.
நீதியைச் சற்றே ஒதுக்கிவிட்டு பரிவைப் பற்றிக்கொள்ளுமாறு மூத்த மகனை அழைக்கிறார் தந்தை.
இன்றைய முதல் வாசகத்தில், மீக்கா இறைவாக்கினர் ஆண்டவராகிய கடவுளின் பரிவைத் தேடுகிறார். நீதியின்பொருட்டு இஸ்ரயேல் மக்களை ஆண்டவராகிய கடவுள் தண்டித்தாலும், பரிவுகொண்டு அவர்களை மீண்டும் காப்பாற்றுகிறார்.
நம் உறவுநிலைகளில் பல நேரங்களில் மற்றவர்கள் நமக்குச் செய்தவற்றை நினைத்து அவர்களைத் தண்டிப்பது நீதி என நினைக்கிறோம். ஆனால், இறந்த காலத்து நிகழ்வுகளை நாம் திருத்தி எழுத இயலாது. கொஞ்சம் பரிவுகொண்டு அவர்களை எதிர்கொண்டால் உறவுநிலைகளை சரிசெய்யவும் மேம்படுத்தவும் இயலும்.
நிற்க.
கூட்டியக்கத் திருஅவை சந்திக்கும் சில பிரச்சினைகளில் ஒன்று பரிவுக்கும் நீதிக்குமான வரையறைக் கோட்டை வரைவது. அன்புக்கும் உண்மைக்குமான வரையறைக் கோட்டை நாம் எப்படி வரைகிறோமோ அதைப் பொருத்தே நாம் மற்றவர்களை வரவேற்று அரவணைத்துக்கொள்கிறோம். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 44).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment