இன்றைய இறைமொழி
வியாழன், 29 பிப்ரவரி 2024
தவக்காலம் இரண்டாம் வாரத்தின் வியாழன்
எரேமியா 17:5-10. லூக்கா 16:19-31
எனக்கு இரங்கும்!
இன்று ஒரு சிறப்பான நாள்: 29 பிப்ரவரி 2024. இது ஆண்டின் மிகுநாள். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுதலாகக் கிடைக்கும் நாள். காலம் என்பது வெளியில் எதுவும் இல்லை. அது நாமே உருவாக்கியது என்பது அறிவியல் புரிதல். காலத்தைப் பற்றி மிக அதிகமாகத் தன் ஒப்புகைகள் நூலில் எழுதுகிற புனித அகுஸ்தினார், கடவுளின் காலத்தில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் பிரிவுகள் இல்லை என்கிறார்.
காலத்திற்கு உட்பட்டு வாழ்கிற நாம் இடத்தில் சாய்ந்து நிற்கிறோம் என்பதே எதார்;த்தம். காலம், இடம், காரண-காரிய தொடர்ச்சி இவையே பருப்பொருள் உலகின் மூன்று பரிமாணங்கள் என்கிறார் விவேகானந்தர்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் செல்வந்தர்-இலாசர்-ஆபிரகாம் எடுத்துக்காட்டை வாசிக்கிறோம். இந்நிகழ்வை ஓர் எடுத்துக்காட்டாகப் பரிசேயருக்குச் சொல்கிறார் இயேசு. கடவுள்மீதும் கடவுள்சார்ந்த விடயங்கள்மீதும் நம்பிக்கை வைக்காமல் செல்வங்கள்மீதும் மனிதர்கள்மீதும் நாம் வைக்கும் நம்பிக்கையின் பயனின்மையை வெளிப்படுத்துகிறது இந்த எடுத்துக்காட்டு.
செல்வந்தருக்குப் பெயர் இல்லை. செல்வந்தர்கள் தங்கள் பெயர்களை வைத்து அல்ல, மாறாக, செல்வங்களை வைத்தே அடையாளம் காண விரும்புவதால் அவருடைய பெயரைத் தவிர்க்கிறார் லூக்கா. ஏழைகளுக்கோ அவர்களுடைய ஒரே அடையாளம் அவர்களுடைய பெயர்கள் மட்டுமே என்பதால் ஏழைக்கு இலாசர் எனப் பெயரிடுகிறார். இலாசர் என்பது அவருடைய இயல்பைக் குறிப்பதாகவும் – ‘உதவி’, ‘உதவி கேட்டு நிற்பவர்’ – அமைகிறது.
செல்வந்தர் தான் வாழ்ந்த இவ்வுலகில் இலாசரைக் கண்டுகொள்ளவில்லை.
இறந்தபின் எல்லாம் தலைகீழாக மாறுகிறது. நாய்கள் நக்கிய புண்கள் கொண்டவர் ஆபிரகாமின் மடிக்குச் செல்கிறார். செந்நிற ஆடை அணிந்து விருந்துண்டவர் பாதாளத்தில் வதைக்கப்படுகிறார். தொலைவில் ஆபிரகாமையும் இலாசரையும் காண்கிற அவர், ‘தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்!’ என்கிறார். தன் கண்முன் இருந்த இலாசரை சகோதரன் எனக் கண்டுகொள்ளாமல், வெறுமனே ஆபிரகாமை தந்தை என அழைத்து என்ன பயன்? இரக்கம் அவருக்கும் அவரைச் சார்ந்தவருக்கும் மறுக்கப்படுகிறது.
மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்தபோது அதைப் பயன்படுத்தத் தவறினார் செல்வந்தர்.
இந்நிகழ்வு நமக்குச் சொல்வது என்ன?
(அ) செல்வத்தின் பயனின்மை. செல்வத்தால் இவ்வுலகில் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக செல்வம் நமக்கு சுதந்திரத்தைத் தருகிறது, நாம் விரும்புவதைப் பெற்றுக்கொள்ளத் துணை செய்கிறது. ஆனால், இவ்வுலகில் பயன்படும் செல்வம் மறுவுலகில் பயன்படாமல் போகிறது. இதையே திருவள்ளுவர், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை’ என்கிறார்.
(ஆ) கடவுள் ஏழைகள்சார்பாக நிற்கிறார். ஏழை இலாசர் தனியாக இல்லை. அவர் சார்பாக இறைவன் இருக்கிறார். நாய்கள் அவருடைய புண்களை நக்கினாலும், அவர் இரந்து வாழ்ந்தாலும், அவருடைய நிலையை மாற்ற வல்லவர் கடவுள்.
(இ) பணத்தைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது. செல்வந்தர் தன் செல்வத்தை வெறும் செல்வமாக மட்டுமே பார்த்தார். அதை அருளாக மாற்றக் கூடிய திறனை அவர் கற்கவில்லை. இரக்கச் செயல்கள் வழியாக, பிறரன்புச் செயல்கள் வழியாக நாம் பொருளை அருளாக மாற்ற இயலும்.
செல்வத்தின் பயனின்மையை இன்றைய முதல் வாசகத்தில் எரேமியாவும் மொழிகிறார். மானிடர்மேல் நம்பிக்கை கொள்வதா, கடவுள்மேல் நம்பிக்கை கொள்வதா என்னும் கேள்வியோடு தொடங்கும் வாசகப்பகுதி, ‘இதயமே அனைத்திலும் வஞ்சகம் மிக்கது’ என நிறைவடைகிறது. தவறான முதன்மைகளைக் காட்டி நம்மை ஏமாற்றிவிடுவதால் இதயம் வஞ்சகம் மிக்கதாக இருக்கிறது.
ஆண்டின் மிகுநாளாகிய இன்று ஒருவர் மற்றவருக்கு இரக்கம் காட்ட முயற்சி செய்வோம்.
நிற்க.
கூட்டியக்கத்துக்கான மாமன்றப் பொது அமர்வின் இறுதியில் வந்துள்ள தொகுப்பறிக்கை, ‘ஏழையர் நம்மிடம் விரும்புவது அன்பு ஒன்றே’ என மொழிகிறது. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 42).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment