இன்றைய இறைமொழி. திங்கள், 26 பிப்ரவரி 2024. இரக்கமுள்ளவராய்

இன்றைய இறைமொழி
திங்கள், 26 பிப்ரவரி 2024
தவக்காலம் இரண்டாம் வாரத்தின் திங்கள்
தானியேல் 9:4-11. லூக்கா 6:36-38

இரக்கமுள்ளவராய்

மத்தேயு நற்செய்தியாளரின் மலைப்பொழிவின்படி, அறிவுரைப் பகுதியில் இயேசு, ‘உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராக இருங்கள்’ என மொழிகின்றார். ‘நிறைவு’ என்னும் சொல்லை ‘இரக்கம்’ என மாற்றிப் பதிவு செய்கின்றார் லூக்கா (காண். லூக் 6:36-38)

லூக்கா நற்செய்தியாளர் கடவுளின் முகத்தை இரக்கத்தின் முகமாகவே பதிவு செய்கின்றார். ‘நிறைவு’ என்று சொல்லும்போது அதில் அதிகக் கடினத்தன்மையும், எதிர்பார்ப்பும், நிறைவை அடைய இயலாத குற்றவுணர்வும், நிறைவை அடைந்தபின் அதை எப்படி தக்கவைத்துக்கொள்வது என்ற பயமும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், ‘இரக்கம்’ என்று சொல்லும்போது அங்கே எந்த விதமான பயம், குற்றவுணர்வு, எதிர்மறை உணர்வுகளுக்கும் இடமில்லை.

இரக்கம் மூன்று நிலைகளில் வெளிப்பட வேண்டும் என உரைக்கின்றார் இயேசு:

ஒன்று, ‘பிறர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்காத’ மனப்பாங்கில். ‘இவர் இப்படித்தான்’ என்று நம் மனத்தில் தீர்ப்பு எழுதிவிட்டால் வேறு எந்தச் செயல்பாட்டுக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. எடுத்துக்காட்டாக, கள்வர் கையில் அகப்பட்டு, சாலையில் குற்றுயிராய், நிர்வாணமாய் விழுந்துகிடந்த மனிதரைப் பார்த்து, ‘இவன் ஏன் இந்நேரம் பயணம் செய்தான்?’ என நல்ல சமாரியன் தீர்ப்பிட்டிருந்தால் அவரால் அந்த மனிதருக்கு இரக்கம் காட்டியிருக்க இயலாது.

இரண்டு, ‘பிறரை மன்னியுங்கள்.‘ நமக்கு எதிராகக் குற்றம் செய்பவர்களை, அல்லது நமக்குத் தீங்கு நினைப்பவர்களை மன்னித்தல். நமக்கு இழைக்கப்பட்ட அநீதி கண்டு நாம் சற்றே புன்னகைத்தால், அநீதி இழைத்தவர்மேல் நமக்கு கோபம் வருவதற்குப் பதிலாக, பரிதாபம் அல்லது இரக்கமே வருகிறது. அவருடைய அறியாமை நமக்கு வியப்பாக இருக்கிறது. அறிந்துகொள்ள இயலாத அவருடைய உறைந்த உள்ளம் நமக்கு ஆச்சர்யம் தருகிறது. சிலுவையில் உயிர்விடுமுன் இயேசு, ‘தந்தையே, இவர்களை மன்னியும்’ என்கிறார். இயேசுவின் இரக்கமே இங்கு வெளிப்படுகிறது. ஏனெனில், நீதியுடன் அவர் இங்கே செயல்பட்டிருந்தால், அனைவருக்கும் தண்டனைத் தீர்ப்பை வழங்கிவிட்டு உயிர்விட்டிருப்பார்.

மூன்று, ‘கொடுங்கள்.’ ‘கொடுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்படும்’ என்பதை வியாபார நோக்கில் நாம் புரிந்துகொள்ளக் கூடாது. இவ்வாக்கியத்தை அடுத்த வாக்கியத்தோடு – ‘நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்’ – இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் காட்டுகிற இரக்கம் நமக்கே திரும்புகிறது என்னும் தன்னல நோக்கத்திற்காகவாவது நாம் இரக்கம் காட்ட வேண்டும். இது இரக்கத்தின் முதல் நிலை. இறுதி நிலையில் அளவைகள் பற்றி நாம் கவலைப்படுவதில்லை, காணாமல் போன மகன் எடுத்துக்காட்டில் (காண். லூக் 15:11-32) வரும் தந்தை போல, நல்ல சமாரியன் போல (காண். லூக் 10). தாங்கள் காட்டிய இரக்கம் தங்களுக்கு மீண்டும் அளக்கப்படாது எனத் தெரிந்து இவர்கள் இரக்கம் காட்டினார்கள்.

முதல் வாசகத்தில் (காண். தானி 9:4-11), பாபிலோனிய அடிமைத்தனத்தில் உள்ள மக்களோடு வாழுகிற இறைவாக்கினர் தானியேல், ஆண்டவருடைய நீதியால் தாங்கள் தண்டிக்கப்பட்டோம் என்பதை உணர்ந்திருந்தாலும், அவருடைய இரக்கம் தங்களை மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டுவரும் என்னும் எதிர்நோக்குடன் கடவுளிடம் சரணாகதி அடைகிறார்.

நிற்க.

இரக்கம் என்பது அன்புக்கான தொடக்கப் புள்ளியாக அமையலாம். ஆனால், அது அன்பையும் கடந்த ஒரு செயல். இரக்கம் காட்டத் தொடங்குதல் நலம். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 40).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment