இன்றைய இறைமொழி
புதன், 21 பிப்ரவரி 2024
தவக்காலம் முதல் வாரத்தின் புதன்
யோனா 3:1-10. லூக்கா 11:29-32
யோனாவைவிடப் பெரியவர்
இறைவாக்கினர் யோனா எதிர்மறை இறைவாக்கினர் என அழைக்கப்படுகிறார். அவர் ஆண்டவருடைய அழைப்பை முதன் முறையாக மறுதலித்து அவரிடமிருந்து தப்பி ஓடுகிறார். இரண்டாம் முறை ஆண்டவருடைய அழைப்பை ஏற்று நினிவே சென்றாலும், வேண்டா வெறுப்பாக, விரைவாக நற்செய்தியை அறிவிக்கிறார். ஆண்டவர் நினிவே நகர் மக்கள்மீது இரக்கம் காட்டியதை நினைத்து அவரிடம் கோபம் கொள்கிறார்.
அவர் எதிர்மறை இறைவாக்கினராக இருந்தாலும், அவர் அறிவித்த செய்தி உடனடியான தாக்கத்தை நினிவே நகர மக்கள்மேல் ஏற்படுத்துகிறது. நினிவே மக்களின் செயல்களை யோனாவுக்கு எதிர்ப்பதமாக இருக்கின்றன: முதல்முறையே ஆண்டவருடைய செய்தியைக் கேட்டு, நம்பி, ஏற்றுக்கொள்கிறார்கள். உடனடியாகச் செயல்படத் தொடங்குகிறார்கள். ஒட்டுமொத்த நகரமும் – அரசர்முதல் கால்நடைகள் வரை – சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் அமர்கிறார்கள். ஆண்டவருடைய கோபம் அவர்களுக்கு இரக்கமாக மாறுகிறது.
நற்செய்தி வாசகத்தில், தம்மிடம் கூடி வந்து நின்ற மக்களிடம் தம்மைப் பற்றிய அடையாளமாக சாலமோன் மற்றும் யோனாவை முன்மொழிகிறார் இயேசு.
இறுதியில், ‘இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!’ என்கிறார் இயேசு.
இயேசு யோனாவைவிடப் பெரியவர்: (அ) கடவுளுக்குக் கீழ்ப்படிந்து மனுவுரு ஏற்று இந்த உலகத்துக்கு வந்தார். (ஆ) ‘மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்’ என்னும் செய்தியை அறிவித்தார், அதிகாரத்தோடு போதித்தார், வல்ல செயல்கள் ஆற்றினார். (இ) கடவுளின் இரக்கத்தை அனைவரும் பெற்றுக்கொள்ளுமாறு செய்தார்.
ஆனால்,
இயேசுவின் சமகாலத்தவர்கள் நினிவே நகர மக்கள்போல இல்லை.
இவர்கள் இயேசுவையும் அவர் அறிவித்த இறையாட்சியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசுவின் எளிய பின்புலம் கண்டு அவரைக் குறித்து இடறல்பட்டார்கள். கடவுளின் இரக்கத்தை எளியவர்கள் பெறுவதை அவர்கள் விரும்பவில்லை.
யோனாவை ஏற்றுக்கொண்ட நினிவே நகர் மக்கள் உயர்ந்தவர்கள். ஆனால், யோனாவைவிடப் பெரியவரான இயேசுவை ஏற்றுக்கொள்ளாத அவருடைய சமகாலத்து மக்களை என்ன என்று சொல்வது?
இதுவே இயேசுவின் அங்கலாய்ப்பாக இருக்கிறது.
இன்றைய வாசகங்கள் வழங்கும் பாடங்கள் எவை?
(அ) கடவுளின் செய்தியை அடையாளம் காண்பது.
(ஆ) உடனடியாகப் பதிலிறுப்பு செய்வது.
(இ) கடவுளின் இரக்கத்தை அனுபவிக்கத் தயாராக இருப்பது.
நிற்க.
கடவுளின் செய்தியை அடையாளம் காண்பதற்கும், அறிந்துகொள்வதற்கும் நாம் தயாராக இருக்கும்பொருட்டு நாம் திறந்த உள்ளத்துடன் காத்திருக்க வேண்டும். திறந்த உள்ளம் கடின உள்ளமாக மாறும்போது கடவுளின் செய்தி நம்மேல் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 36).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment