இன்றைய இறைமொழி. செவ்வாய், 20 பிப்ரவரி 2024. சிறுநுகர் பேச்சு

இன்றைய இறைமொழி
செவ்வாய், 20 பிப்ரவரி 2024
தவக்காலம் முதல் வாரத்தின் செவ்வாய்
எசாயா 55:10-11. மத்தேயு 6:7-15

சிறுநுகர் பேச்சு

சிறுநுகர் வாழ்வு என்னும் வாழ்வியல் நிலை, இப்போது சிறுநுகர் சிந்தனை, சிறுநுகர் பேச்சு என பல்வேறு பரிமாணங்களைத் தாங்கி நிற்கிறது. குறைவாகப் பேசுவதும், தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சொற்களை மட்டும் பேசுதலும், சொல் நோன்பும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை.

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுளுடைய வாக்கின் ஆற்றலை வானிலிருந்து பொழியும் மழை, பனி என்னும் உருவகங்கள் வழியாக முன்மொழிகிறார் எசாயா. மழையும் பனியும் மேலிருந்து இறங்கி வருகின்றன. நிலத்தில் உள்ள விதைகளை முளைக்கச் செய்கின்றன. மீண்டும் நீராவியாக மாறி மேலே செல்கின்றன. மழையும் பனியும் நிலத்தில் பொழியப்படுவதன் நோக்கம் விதைகள் வாழ்வு பெறுவதற்கே. ஆக, மழையும் பனியும் போல இருக்கிற கடவுளின் வார்த்தையும் மனிதர்கள் வாழ்வுபெறுமாறு இறங்கி வருகிறது. கீழே வருகிற வார்த்தை நம் இறைவேண்டல் வழியாக கடவுளிடம் திரும்பிச் செல்கிறது. இவ்வாறாக, இறைவேண்டல் செய்யும்போது நாம் இறைவேண்டல் செய்வதில்லை. கடவுளே தம் சொற்களைக் கொண்டு நம் வழியாக இறைவேண்டல் செய்கிறார்.

நற்செய்தி வாசகம், இறைவேண்டல் பற்றிய இயேசுவின் போதனையாக இருக்கிறது. நம் இறைவேண்டலில் குறைவான சொற்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்துகிற இயேசு, ஓர் இறைவேண்டலையும் கற்றுக்கொடுக்கிறார். இறைவேண்டலில் பயன்படுத்தப்படும் சொற்கள் இறைவேண்டல் செய்பவரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தும் பொருட்டு, இறுதியில் மன்னிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

இயேசுவைப் பொருத்தவரையில், நாம் இறைவேண்டலில் பயன்படுத்தும் சொற்கள் கடவுளை நோக்கியனவாக இருந்தாலும், அவை நம்மை நோக்கியதாகவும் இருக்கின்றன. மழைக்கும் பனிக்கும் இரு திசைகள் இருப்பதுபோல இறைவேண்டலில் பயன்படுத்தும் நம் சொற்களுக்கும் இரு திசைகள் இருக்கின்றன. கடவுளை நோக்கி அவை எழுவதோடு, நம்மை நோக்கியும் அவை திரும்புகின்றன. நம்மை நோக்கித் திரும்புகிற சொற்கள் நம் வாழ்வில் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

இயேசு கற்றுக்கொடுக்கும் இறைவேண்டல் நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவது எப்படி?

(1) கடவுளைத் தந்தை என அழைக்கும் நான், எனக்கு அருகில் இருப்பவரை சகோதரர், சகோதரி என அழைத்து உறவு பேண வேண்டும்.

(2) கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். அதற்கேற்ற சரணாகதி மனம் என்னில் வேண்டும்.

(3) இன்றைய என் உணவுக்காக நான் உழைக்க வேண்டும். உழைப்பின் மாண்பு போற்ற வேண்டும். உழைக்க இயலாத குழந்தைகள், முதியவர்கள், நோயுற்றோர், மாற்றுத்திறனாளிகளோடு என் உழைப்பின் கனிகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

(4) எனக்கு எதிராகக் குற்றம் செய்பவரை நான் மன்னிக்க வேண்டும்.

(5) உடல், உள்ளம், ஆன்மாவை நோக்கி வரும் சோதனைகளை வெற்றிகொள்ளுமாறு கட்டின்மை (உள்மனச் சுதந்திரம்) போற்ற வேண்டும்.

(6) தீயோனின் கட்டுகளிலிருந்து என்னையே விடுவித்துக்கொள்வதோடு, சமூகத் தீமைகளைக் களைவதற்கும் நான் முயற்சி எடுக்க வேண்டும்.

இறைவேண்டலில் நான் சிறுகப் பேசி, பேசும் சொற்களை வாழ்வாக்கி, எனக்கு அடுத்திருப்பவர்மேல் நேர்முகமான தாக்கத்தை ஏற்படுத்தினால் எத்துணை நலம்!

நிற்க.

யூபிலி 2025-ஐ நோக்கிய நம் பயணத்தின் தயாரிப்பாக நாம் தொடங்கியுள்ள இறைவேண்டல் ஆண்டில், இறைவேண்டல் பற்றிய இயேசுவின் பாடத்தைக் கற்றுக்கொள்வோம். தனிநபர், குடும்ப, குழும, சமூக வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதே இறைவேண்டலின் நோக்கம் என்பதை உணர்வோம். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 35).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment