இன்றைய இறைமொழி. சனி, 17 பிப்ரவரி 2024. பாதை மாற்றம்!

இன்றைய இறைமொழி
சனி, 17 பிப்ரவரி 2024
திருநீற்றுப் புதனுக்குப்பின் வரும் சனி
எசாயா 58:9ஆ-14. லூக்கா 5:27-32

பாதை மாற்றம்!

உண்மையான நோன்பு பற்றி இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்குரைத்த எசாயா, தொடர்ந்து, அவர்கள் பின்பற்ற வேண்டிய அறநெறி சார்ந்த செயல்களைக் குறிப்பிடுகிறார். அறிவுரை அல்லது கட்டளை, வாக்குறுதி என்று அமைகின்றன ஆண்டவரின் சொற்கள். இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருடைய கட்டளைகளைப் பின்பற்றுவதால் மட்டுமே அவர் தருகிற வாக்குறுதிகளுக்கும் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள் என்பது இங்கே புலப்படுகிறது.

மனமாற்றம்‘ என்பதை ‘பாதை திருப்பம்’ அல்லது ‘பாதை மாற்றம்’ எனப் புரிந்துகொள்ளலாம். இஸ்ரயேல் மக்களுக்கு மூன்று நிலைகளில் பாதை மாற்றம் தேவைப்படுகிறது: (அ) தன்நுகம் அகற்றுதல், (ஆ) தன்னலம் அகற்றுதல், (இ) தற்பெருமை அகற்றுதல். ‘தன்நுகம்’ அகற்றி விடுதலை வாழ்வை அவர்கள் பற்றிக்கொள்ள வேண்டும். தன்னலம் அகற்றித் தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். தற்பெருமை அகற்றி இறைவனைப் பெருமைப்படுத்த வேண்டும்.

நற்செய்தி வாசகத்தில், லேவியின் (மத்தேயு) அழைப்பு நிகழ்வையும், அதைத் தொடர்ந்த இயேசுவின் போதiனையும் வாசிக்கிறோம். வரி வசூலித்துக் கொண்டிருந்தவரின் பாதை மாறுகிறது.

பாதை மாற்றம் எப்படி வரும்?

(அ) நம் தெரிவுகளால் – இஸ்ரயேல் மக்கள் நன்மை-தீமையை அறிந்திருப்பதோடல்லாமல், அவற்றின்படி நடக்க வேண்டும். தீமையானதை அகற்றிவிட்டு நன்மையானதை எப்போதும் பற்றிக்கொள்ள வேண்டும்.

(ஆ) கடவுளின் குறுக்கீட்டால் – தன் அன்றாடப் பணிகளில் அக்கறையுடனிருந்த லேவியை (மத்தேயுவை) தடுத்தாட்கொள்கிறார் இயேசு.

பாதை மாற்றத்தால் கிடைக்கும் நன்மைகள் எவை?

(அ) ஆண்டவரின் வாக்குறுதிகள் நம்மில் நிறைவேறத் தொடங்குகின்றன. நாம் ‘நீர் பாய்ந்த தோட்டம்போலும், ஒருபோதும் வற்றாத நீரூற்று போலவும் இருப்போம்,’ ‘ஆண்டவருக்கு ஊழியம் புரியும் மகிழ்ச்சியைப் பெறுவோம்.’

(ஆ) புதிய பணித் தொடக்கம் – வரி வசூலித்துக்கொண்டிருந்த லேவி (மத்தேயு) இதுமுதல் இயேசுவின் திருத்தூதராக மாறுவதோடு, நற்செய்தியை எழுதுகிற பெருமைக்குரியவர் என உயர்கிறார்.

நாம் கற்க வேண்டிய பாடங்கள் எவை?

(அ) பாதை மாற்றத்துக்குத் தேவை தயார்நிலையும், துணிவும், பொறுமையும், விடாமுயற்சியும்.

(ஆ) கடவுள் நமக்கு அருகில் வந்து நமக்கு விடுக்கும் அழைப்புக்குப் பதிலிறுப்பு செய்வது அவசியம்.

‘கூட்டியக்கம் வெறும் செயலாக அல்ல, மாறாக, மனப்பாங்காக உதிக்க வேண்டும்’ என மொழிகிற திருத்தந்தை பிரான்சிஸ், கூட்டியக்க மனமாற்றத்தின் அவசியமே இதற்கு வழி வகுக்கும் என உறுதிபடக் கூறுகிறார். (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 33).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment