இன்றைய இறைமொழி. வெள்ளி, 16 பிப்ரவரி 2024. ஏன் நோன்பு இருப்பதில்லை?

இன்றைய இறைமொழி
வெள்ளி, 16 பிப்ரவரி 2024
திருநீற்றுப் புதனுக்குப்பின் வரும் வெள்ளி
எசாயா 58:1-9அ. மத்தேயு 9:14-15

ஏன் நோன்பு இருப்பதில்லை?

இன்றைய இரண்டு வாசகங்களிலும் மையமாக இருக்கின்ற வார்த்தை ‘நோன்பு.’

நோன்பு என்பது முதலில், நாமே விரும்பி ஏற்கும் பசி.

சில நேரங்களில் பசி நம்மேல் புகுத்தப்படுகின்றது. நாம் ஏழ்மையில் இருக்கும்போது, அல்லது நீண்ட பயணம் செய்யும் போது, உணவகம் இல்லாத ஊருக்குச் செல்லும்போது. அல்லது இறந்தவர் வீட்டிற்குச் செல்லும்போது.

சில நேரங்களில் பசி நமக்குப் பரிந்துரைக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, மருத்துவர் பரிந்துரைப்பது. அல்லது இரத்தப் பரிசோதனைக்கு முன்பாக வலியுறுத்தப்படும் பசி.

‘பசி’ என்ற ஓர் உணர்வில் நாம் ஒருவர் மற்றவருடன் கைகோர்க்கிறோம். பசி வந்துவிட்டால் மற்ற அடையாளங்கள் நம் கண்களை விட்டு மறைந்துவிடுகின்றன. உயிரைத் தக்கவைத்துக்கொள்வதற்காக உடல் கொடுக்கும் எச்சரிக்கை உணர்வே பசி.

நாம் நோன்பு இருக்கும்போது நம் உயிரும் உடலும் வாழ இன்னொன்று தேவை என்பதை நாம் உணர்ந்து, அந்தத் தேவையை நிறைவு செய்ய நாம் கடவுள் அல்லது ஒருவர் மற்றவர் மேல் சாய்கின்றோம். ஆக, நோன்பில் நாம் சார்பு நிலையை, கையறுநிலையை, நொறுங்குநிலையை உணர்கிறோம்.

ஆனால், காலப்போக்கில் இது ஒரு சமயச் சடங்காக மாறிவிட்டது.

நோன்பு இருப்பதற்கான காரணம் மறைந்து, நோன்பு என்னும் காரியம் மட்டும் நிலைத்துவிட்டது.

இப்படிப்பட்ட எந்திரத்தனமான சமயப் போக்கைக் கடிந்துகொள்கின்றார் இயேசு. ‘மணமகன் தங்களோடு இருக்கும் வரை நோன்புக்கு இடமில்லை.’ அல்லது நோன்பும் மணமகனும் இணைந்து செல்ல இயலாது.

பசியைப் போக்க வந்த அட்சய பாத்திரம் கையில் இருக்கும்போது பசி எதற்கு? – இதுதான் இயேசுவின் மறைமுகமான கேள்வியாக இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில், நோன்பு என்ற சமயச் சடங்கைக் கடைப்பிடித்துவிட்டு, சமூகம் மற்றும் தனிநபர் வாழ்வில் ஒடுக்குமுறையில் ஈடுபட்ட தன் மக்களை எசாயா இறைவாக்கினர் வழியாகக் கடிந்துகொள்கின்ற ஆண்டவராகிய கடவுள் உண்மையான நோன்பு என்றால் என்ன என்பதை எடுத்துரைக்கின்றார்.

மேலும், பகிர்வதும், வறுமை போக்குவதும், சோர்வு நீக்குவதும், உடுத்துவதுமே நோன்பு என முன்மொழியப்படுகிறது.

இத்தகைய நோன்பு இருப்போரின் ஒளி விடியல் போல எழும்!

இன்று தவக்காலத்தின் முதல் வெள்ளி. இன்று நாம் இருக்கும் நோன்பு இறைவன்மேல் நாம் கொண்டுள்ள சார்பு நிலையை உணர்த்துவதோடு, ஒருவர் மற்றவர்மேல் கொள்ள வேண்டிய பொறுப்புணர்வைத் தூண்டி எழுப்பினால் நலம்!

‘யூபிலி கி.பி. 2025-ஆம் ஆண்டை நோக்கிய நம் பயணத்தின் அடிநாதமாக இருக்கிற எதிர்நோக்கு காத்திருத்தலிலும் மகிழ்ந்திருத்தலிலும் வெளிப்படுகிறது. மணமகன் கிறிஸ்துவோடு மகிழ்ந்திருத்தல் எதிர்நோக்கும் என்னும் திரியை அணையாமல் காக்கிறது.’ (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 32).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment