இன்றைய இறைமொழி. வியாழன், 15 பிப்ரவரி 2024. வாழ்வைத் தேர்ந்துகொள்தல்

இன்றைய இறைமொழி
வியாழன், 15 பிப்ரவரி 2024
திருநீற்றுப் புதனுக்குப்பின் வரும் வியாழன்
இணைச்சட்ட நூல் 30:15-20. லூக்கா 9:22-25

வாழ்வைத் தேர்ந்துகொள்தல்

மனமாற்றம் என்றால் வாழ்வைத் தேர்ந்துகொள்தல்‘ எனக் கற்பிக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

இன்றைய முதல் வாசகம் இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழையுமுன் மோவாபு சமவெளியில் அவர்களோடு உரையாடுகிற மோசே, ஆண்டவராகிய கடவுள் இதுவரை அவர்களுக்குச் செய்த அனைத்து நற்செயல்களையும் நினைவூட்டுகிறார். ஆண்டவர் அவர்களைத் தேர்ந்துகொண்டார் என்பதை எடுத்துரைக்கிறார். இறுதியாக, ஆண்டவராகிய கடவுள் அவர்களைத் தம் சொந்த மக்களினமாகத் தேர்ந்துகொண்டாலும், அவர்கள் ஒவ்வொருவரும் தாங்களாகவே விரும்பி ஆண்டவராகிய கடவுளைத் தேர்ந்துகொள்ள வேண்டும் என்பது மோசேயின் அழைப்பாக இருக்கிறது.

‘வாழ்வையும் நன்மையையும் சாவையும் தீமையையும் நான் உனக்கு முன்பாக வைக்கிறேன்’ எனச் சொல்கிற மோசே, ‘வாழ்வைத் தேர்ந்துகொள்’ என அவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

இதன் பின்புலத்தில் இரண்டு கருத்துருகள் இருந்தன: ஒன்று, ஆண்டவராகிய கடவுள் தங்களைத் தேர்ந்துகொண்டார் என்பதால் தாங்கள் எப்படியும் இருக்கலாம் என நினைத்தார்கள் இஸ்ரயேல் மக்கள். இரண்டு, அனைத்தும் விதித்துள்ளபடியே நடக்கும் என நினைத்தார்கள். இந்த இரண்டு கருத்துருகளுக்கும் எதிராக இருக்கின்றன மோசே உரைக்கும் பகுதி. கடவுளை ஒவ்வொருவரும் தாமாகவே தேர்ந்து தெளிய வேண்டும். மற்றவற்றைத் தேடித் திரிதல் பொருளற்றதே.

நற்செய்தி வாசகத்தில், சீடத்துவம் பற்றி அறிவுத்துகிற இயேசு, ‘சிலுவையைத் தூக்கிக்கொண்டு இயேசுவைப் பின்தொடர்தல் என்பது வாழ்வைத் தெரிந்துகொள்தல்’ என மொழிகிறார். வாழ்வை இழக்கிற ஒருவரே அதைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது இயேசுவின் போதனையாக இருக்கிறது.

மூன்று பாடங்கள்:

(அ) நம் வாழ்வின் நகர்வுகள் விண்மீன்களின் நகர்வுகளால் நிர்ணயிக்கப்படுவதல்ல. மாறாக, நம் ஒவ்வொரு செயலால் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆக, தெளிந்து தேர்ந்து செயலாற்றுதல் வேண்டும்.

(ஆ) கடவுள் நம்மேல் அன்புகூர்ந்து நம்மைத் தேர்ந்துகொண்டாலும் அந்த நிலையில் நாம் தொடர்ந்து தங்க வேண்டுமெனில், நாம் முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் தீமையை விலக்கி நன்மையைப் பற்றிக்கொள்ள வேண்டும்.

(இ) இழப்பதால்தான் நாம் பெறுகிறோம் என்று கற்பிக்கிறார் இயேசு. நம் வாழ்வின் முதன்மையான உந்துணர்வு அனைத்தையும் நாம் நமக்கென வைத்துக்கொள்ளவும் நம்மை மட்டுமே அன்பு செய்யவும் தூண்டுகிறது. ஆனால், இந்த உந்துணர்வை வெல்லும்போது நாம் இயேசுவைப் பற்றிக்கொள்ளவும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும் தொடங்குகிறோம்.

‘ஒருவர் மற்றவருடைய குரலைக் கேட்டு, நம் இதயத்தின் மௌனத்தில் தூய ஆவியார் நமக்கு அருள்வதைத் தேர்ந்து தெளிதல் கூட்டியக்கத் திருஅவையின் பங்கேற்புக்கு மிகவும் அவசியமானது’ என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 31).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment