இன்றைய இறைமொழி
செவ்வாய், 13 பிப்ரவரி 2024
பொதுக்காலம் 6-ஆம் வாரத்தின் செவ்வாய்
யாக்கோபு 1:12-18. மாற்கு 8:14-21
உங்களுக்குப் புரியவில்லையா?
இயேசுவின் சீடர்களின் கவனச் சிதறலையும் இயேசுவின் கையறுநிலையையும் சுட்டிக்காட்டுகிறது இன்றைய நற்செய்திப் பகுதி. தேவையான அப்பங்களை அவர்கள் எடுத்துச் செல்ல மறக்கின்றனர். இந்த நேரத்தில் இயேசு அவர்களிடம் பரிசேயரது புளிப்பு மாவு பற்றி – உருவகமாக, அவர்களுடைய வெளிவேடம், இரட்டைத்தன்மை, வன்மம் பற்றி – கவனமாக இருக்குமாறு அவர்களை எச்சரிக்கின்றார். ஆனால், அவர்களுடைய எண்ணமெல்லாம் வீட்டில் விட்டு வந்த அப்பத்தின் மேலேயே இருக்கிறது.
அப்பம் அளிக்கும் கடவுள் தன் அருகில் இருப்பதை மறந்துவிட்டு, தாங்கள் விட்டு வந்த அப்பத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் சீடர்கள். பாவம்! பரிதாபத்துக்குரியவர்கள்.
ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பலுகச் செய்தவர், ஏழு அப்பங்களை நான்காயிரம் பேருக்கு உண்ணக் கொடுத்தவர், ஒன்றுமில்லாத நிலையிலும் தங்களுக்கு உணவளிக்க வல்லவர் என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். அல்லது அப்பங்கள் இருந்தால்தான் தங்கள் தலைவரால் பலுகச் செய்ய முடியும் என நினைத்தார்களோ என்னவோ!
இயேசுவின் செயல்களைக் கண்டும் அவரை இன்னார் என்று அறிந்துகொள்ள இயலவில்லை சீடர்களால். சீடர்களின் தவறுகளை இயேசுவே சுட்டிக்காட்டுகிறார்: (அ) ‘உணரவில்லை, புரிந்துகொள்ளவில்லை’ – இயேசுவின் உடனிருப்பை உணரவில்லை. அவர் ஆற்றுகிற வல்லசெயல்களைப் பார்த்தும் அவரைப் புரிந்துகொள்ளவில்லை. (ஆ) ‘மழுங்கிய உள்ளம்’ – பழைய ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களின் கடின உள்ளத்தைக் கடிந்துகொள்கிறார். கடின உள்ளம் கடவுளை நம்ப மறுக்கிறது. மழுங்கிய உள்ளம் கடவுளைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. (இ) ‘காண்பதில்லை, கேட்பதில்லை’ – இயேசு ஆற்றிய வல்ல செயல்களை அவர்கள் காணவில்லை, அவர் ஆற்றிய போதனையைக் கேட்கவில்லை. (ஈ) ‘நினைவில்லை’ – அப்பம் பலுகுதல் நிகழ்வுகளை சீடர்கள் மறந்துவிட்டார்கள்.
மேலும், இயேசுவின் எளிய பின்புலம், அல்லது அவர் என்றும் தங்களோடு இருப்பதால் எழுந்த நெருக்கம் ஆகியவை முற்சார்பு எண்ணங்களை உருவாக்கியிருக்கலாம்.
இங்கே, ‘சீடர்கள்’ என்பவர்கள் தொடக்கத் திருஅவையின் உருவகமாகவும் நம் உருவகமாகவும் இருக்கலாம்.
முதல் வாசகத்தில் (யாக் 1:12-18), சோதனைகள் பற்றித் தன் குழுமத்திற்கு எழுதுகின்ற யாக்கோபு, நம் சொந்த நாட்டத்தினாலேயே நாம் சோதிக்கப்படுகிறோம் என்கிறார். தீய நாட்டம் மயக்கத்தையும், மயக்கம் பாவத்தையும் உருவாக்குகிறது.
மேலும், கடவுள் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல என்று அறிவுறுத்துகின்றார்.
சீடர்களின் எண்ணங்கள் நிழல் போல மாறிக்கொண்டே இருக்கின்றன. இதுவா? அதுவா? என்னும் அங்கலாய்ப்பில் அவர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ள இயலாமல் நிற்கின்றனர்.
இயேசு சீடர்களைப் பார்த்து எழுப்பும் தொடர் கேள்விகள் அவருடைய கையறுநிலையைச் சுட்டிக்காட்டுகின்றன. எப்படியாவது தம் சீடர்கள் தம்மைப் புரிந்துகொள்ளமாட்டார்களா என்னும் அங்கலாய்ப்பு அவரிடம் இருக்கிறது.
தவக்காலத்திற்குள் நுழையத் தயாராகிற நாம், கடவுளைப் பற்றிய நம் புரிதல் எப்படி இருக்கிறது? என்னும் கேள்வியை நம் உள்ளத்தில் எழுப்புவோம்.
‘கூட்டியக்கத் திருஅவை உருவாக்கத்திற்கான மிகப்பெரிய தடை, அதுபற்றிய புரிதலின்மையும் தவறான புரிதலுமே என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். கூட்டியக்கம் பற்றிய வரையறை நமக்குத் தெளிவாக இல்லை என்றாலும், செவிமடுத்தல், அனைவரையும் வரவேற்றல், புரிந்துகொள்தல், வேற்றுமைகளைக் கொண்டாடுதல் போன்றவற்றின் வழியாகக் கூட்டியக்கத் திருஅவையை நாம் கட்டியெழுப்ப முடியும்.’ (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 30).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment