இன்றைய இறைமொழி
சனி, 10 பிப்ரவரி 2024
பொதுக்காலம் 5-ஆம் வாரத்தின் சனி
1 அரசர்கள் 12:26-32, 13:33-34. மாற்கு 8:1-10
நேர்முகப் பரிவு
எல்லா உணர்வுகளுக்கும் நேர்முக (positive), எதிர்மறை (negative) முகங்கள் இருப்பதுபோல பரிவும் இரட்டை முகங்களைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ‘பொறாமை’ என்னும் உணர்வு இயல்பிலேயே எதிர்மறையானது அல்ல. நேர்முகமான பொறாமை மற்றவரை என்னுடைய தூண்டுகோலாகப் பார்த்து, அவரைப் போல நான் மாறுவதற்கு என்னை உந்தித் தள்ளும். எதிர்மறையான பொறாமை அவரை நான் அழிப்பதற்கு என்னைத் தூண்டும். ஒரு மாணவன் தேர்வைக் கொண்டிருக்கிற நேர்முகமான பயமே அவனைக் கடின உழைப்புக்கு இட்டுச் செல்கிறது.
ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்கு இயேசு பகிர்ந்து கொடுக்கும் நிகழ்வை மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். இதையொத்த மற்றொரு நிகழ்வில் இயேசு மக்கள் கூட்டத்தின்மேல் பரிவு கொள்வதைப் போல இங்கேயும் பரிவு கொள்கின்றார். இயேசுவின் பரிவு நேர்முகப் பரிவாக, அதாவது, தன் பரிவின் வழியாக அவர்களுடைய வாழ்வை மேம்படுத்தும் பரிவாக இருப்பதைப் பார்க்கின்றோம்.
இயேசுவின் நேர்முகமான பரிவு அவருடைய சொற்களில் மிக அழகாக வெளிப்படுகின்றது: (அ) ‘மூன்று நாள்களாக இவர்கள் என்னோடு இருக்கிறார்கள்,’ (ஆ) ‘உண்பதற்கு இவர்களிடம் எதுவும் இல்லை,’ (இ) ‘பட்டினியாக அனுப்பிவிட்டால் நெடும் வழியில் அவர்கள் தளர்ச்சி அடைவர்.’
அவர்களின் தேவை உணவு என்பதை அறிகின்ற இயேசு அதை அவர்களுக்குத் தரும் முயற்சியில் இறங்குகின்றார். சீடர்கள் தாங்கள் இருக்குமிடம் பாலைநிலம் என்று சொல்லிக் கேள்வி எழுப்புகின்றனர்.
பரிவு என்பது வெறும் உணர்வு அல்ல. மாறாக, ஒரு செயல்.
எதிர்மறையான பரிவு என்பது என்ன?
புழு வண்ணத்துப் பூச்சியாக உருவெடுக்கும் நிகழ்வை எடுத்துக்கொள்வோம். வண்ணத்துப் பூச்சியாக மாறுவதற்கு கூட்டுப்புழு நிறைய வலியை ஏற்க வேண்டும். ‘ஐயோ! அதற்கு வலிக்குமே!’ என நான் நினைத்து அதன்மேல் பரிவு கொண்டு அதை விடுவிக்க நினைத்தால், அது வண்ணத்து பூச்சியாக மாறுவதை நான் தடை செய்வதோடு, அதைக் கொன்றும் விடுவேன். இது எதிர்மறையான பரிவு.
இத்தகைய எதிர்மறையான பரிவை இன்றைய முதல் வாசகத்தில் பார்க்கின்றோம்.
சாலமோனின் அரசருக்குப் பின்னர் ஒருங்கிணைந்த இஸ்ரயேல் இரண்டாக உடைகிறது. வடக்கே இஸ்ரயேல், தெற்கே, யூதா என்று இரு அரசுகள் உருவாகின்றன. இதுவரை எருசலேம் ஆலயம் மட்டுமே அனைவருக்குமான பொதுவான இறைவேண்டலின் இடமாக இருந்தது. வடக்கில் உள்ள தன் மக்கள் தெற்கில் உள்ள எருசலேமுக்குப் போக விரும்பாத எரோபவாம் அரசர் மக்களைப் பார்த்து, ‘நீங்கள் எருசலேமுக்குப் போய் வருவது பெருந்தொல்லை அல்லவா!’ என்று அவர்கள்மேல் எதிர்மறையான பரிவு கொண்டு, அவர்களுக்கென கன்றுக்குட்டி ஒன்றை நிறுவி அவர்களுடைய மனத்தைத் திருப்புகிறார். மேலும் பல தொழுகை மேடுகளைக் கட்டி, யாரெல்லாம் விரும்பினார்களோ அவர்களை எல்லாம் திருப்பணியாளர்களாக ஏற்படுத்துகின்றார்.
மக்களைச் சிலைவழிபாட்டுக்கு ஆளாக்கியதோடு, தான் இப்படிச் செய்வதால் அவர்கள்மேல் பரிவு கொண்டதாக நினைக்கின்றார்.
இது எதிர்மறையான பரிவு.
இயேசுவின் நேர்முகப் பரிவு மக்களின் பசி போக்குகிறது.
எரோபவாமின் எதிர்மறைப் பகிர்வு மக்களின் வாழ்வுக்கு அழிவைக் கொணர்கிறது.
நேர்முகப் பரிவு எதிர்மறைப் பிரிவிலிருந்து எப்படி மாறுபடுகிறது?
‘அவர்களுக்கு இதைச் செய்தால் அவர்களுக்கு என்ன கிடைக்கும்’ என மற்றவர்களை மையமாக வைத்து நினைத்தால் அது நேர்முகப் பரிவு.
‘அவர்களுக்கு இதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்’ எனத் தன்னை மையமாக வைத்து நினைத்தால் அது எதிர்மறைப் பரிவு.
நிற்க.
‘அனைவரும் உடன்பிறந்தோர்’ (2020) என்னும் தன் சுற்றுமடலில், நல்ல சமாரியன் எடுத்துக்காட்டை மையமாகக் கொண்டு விளக்கம் தரும் திருத்தந்தை பிரான்சிஸ், ‘அன்பு அல்ல, மாறாக, பரிவே நல்ல சமாரியனை அவருடைய கழுதையிலிருந்து இறங்க வைத்தது. அன்பின் முதற்படி பரிவு’ என்கிறார். (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 28).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment